மாணவர்களை புத்திஜீவிகளாக உருவாக்குவதை விட முதலில் சிறந்த ஒரு நல்ஒழுக்கமுள்ள பிரஜையாக உருவாக்குங்கள்- மட்டு -அரச அதிபர் பி.எஸ்.எம.சார்ல்ஸ்

???????????????????????????????– பழுளுல்லாஹ் பர்ஹான்

மட்டக்களப்பு: மாணவர்களை சிறந்த ஒரு நல்ஒழுக்கமுள்ள பிரஜையாக உருவாக்குங்கள்.அதன் பின்னர்தான் புத்திஜீவிகளாக உருவாக்கப்பட வேண்டும் என மட்டக்களப்பு அரசாங்க அதிபர் பி.எஸ்.எம்.சார்ல்ஸ் தெரிவித்தார்.

மட்டக்களப்பு கல்வி வலயத்திலுள்ள ஆயிரம் பாடசாலைகள் அபிவிருத்தி செய்யும் திட்டத்தின் கீழ் தெரிவு செய்யப்பட்டுள்ள பாடசாலைகளின் அபிவிருத்தி தொடர்பாக ஆராயும் உயர்மட்ட கூட்டமொன்று நேற்று முன்தினம்  வெள்ளிக்கிழமை மட்டக்களப்பு மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.

அதில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்,

பாடசாலைகளில் மாணவர்கள் புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைய வேண்டும்,ஜீ.சீ.ஈ.சாதாரண உயர்தரப் பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளை பெறவேண்டும்,எமது பாடசாலை சிறந்த பெறுபேறுகளை பெறக்கூடிய பாடசாலையாக மாற வேண்டும் என்பதை விட எமது பாடசாலையில் முதலாவதாக மாணவர்கள் சிறந்த நற்பிரஜைகளாக உருவாக்கப்பட வேண்டும்.

ஏனென்றால் இந்நாட்டின் மேண்மைதங்கிய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கூட 5ம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சையினால் ஒரு மாணவனுக்கு  பிரயோசனம் கிடையாது என தெரிவித்திருந்தார்.

இன்று மாணவவர்கள் பாடசாலையில் படிப்பதை விட பிரத்தியேக வகுப்புக்களுக்குச் சென்றுதான் படிக்கிறார்கள்.பாலர் பாடசாலையில் படிப்பவன் முதல் க.பொ.த உயர்தரம் படிக்கும் மாணவன் வரை இன்று பிரத்தியேக வகுப்புக்களுக்குச் செல்கின்றனர்.

ஏன் பாடசாலைகளில் ஒழுங்காக பாடங்கள் இடம்பெறுவதில்லையா?அல்லது சிறந்த தரமுள்ள ஆசிரிய ஆசிரியைகள் இல்லையா? என்பது புரியாத புதிராக உள்ளது.பாடசாலை என்பது மாணவனுடைய கல்விசார் நடவடிக்கைகள் முதல் அவனுடைய ஒழுக்க பண்பாடு சார்ந்த விடயங்கள் வரை சகலதையும் நோட்டமிடுகின்ற பொறுப்பு ஆசிரியர்களிடமும் அதிபர்களிடமும் இருக்கின்றது.

இன்று பாடசாலைகளுக்கு மாணவர்களுடைய வருகை குறைவாக உள்ளது.காரணம் பாடசாலையில் ஒழுங்காக பாடங்கள் இடம்பெறுவது கிடையாது.இந்த நிலை மாற வேண்டும்.

பிரத்தியேக வகுப்புக்கள் நிறுத்தப்பட்டு பாடசாலைகளில் சிறந்த வளவாளர்கள் மூலம் மாணவர்களுக்கு கல்வி கொடுக்கப்பட வேண்டும்.

க.பொ.த உயர்தர மாணவர்களுக்கு பாடங்கள் பிரத்தியேக வகுப்பின் மூலம் கட்டாயம் கற்க வேண்டும் என்ற ஒரு காரணம் முன்வைக்கப்பட்டாலும் க.பொ.த உயர்தர மாணவர்கள் நூற்றுக்கு 10வீதம் என்றாலும் ஏன் ஏனைய 90வீத மாணவர்களும் பிரத்தியேக வகுப்புக்குச் செல்கின்றார்கள்.

இன்று பாடசாலைகளில் அதிகூடிய புள்ளிகள் எடுத்தவர்களுக்கு பாராட்டு,புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்தவர்களுக்கு பாராட்டு விழா என்பவற்றை வைத்து திறமையுள்ள மாணவர்களை மாத்திரம் பாராட்டுவதிலும் கௌரவிப்பதிலும் பெரியளவு நன்மைகள்,பிரயோசனங்கள் கிடைப்பதில்லை.

ஏனெனில் படித்த கல்விமான்கள்,புத்திஜீவிகள் படித்து பட்டம் பதவி வந்ததன் பின்பு வெளிநாடுகளுக்குச் சென்று விடுகிறார்கள்.ஆனால் கவனெடுக்கப்படாமல் விடப்பட்ட மாணவர்கள் நாட்டிலே வாழ்கிறார்கள்.அவர்களைத்தான் நாம் அதிகமாக கவனிக்க வேண்டும்.ஆசிரியர்களும் அதிபர்களும் மாணவர்களின் கல்விசார் நடவடிக்கைகளில் நோட்டமிடுவது போல் ஏனைய ஒழுக்க விடயங்களிலும் கவனம் செலுத்த வேண்டும்.

‘பாடசாலைதான் ஒரு மனிதனை பூரணமானவனாக்கும்’ என்பதற்கிணங்க சகல விடயங்களிலும் நாம் கரிசணை செலுத்தி செயற்பட வேண்டும்.

அண்மையில் மட்டக்களப்பு செங்கலடியில் இடம்பெற்ற இரட்டைக் கொலைச் சம்பவத்தில் தொடர்புடைய சூத்திரதாரிகள் 16வயது செங்கலடி மத்திய கல்லூரியைச் சேர்ந்த கொல்லப்பட்டவர்களின் மகளும் மேலும் மூன்று மாணவர்களும் என கண்டறியப்பட்டுள்ளது.

இதற்கான காரணம் பிள்ளைகள் ஆசியர்களினாலும்,பெற்றோர்களினாலும் சரியான முறையில் கண்காணிக்கப்படுவதில்லை.

குறித்த கொலைச் சம்பவத்திற்கான திட்டமிடல் ஒரு பிரத்தியேக வகுப்பு இடம்பெறும் ஓர் இடத்தில்தான் இடம்பெற்றுள்ளது.

இவ்வாறான குறூர சிந்தனை மாணவர்களிடத்திலே வளர்க்கப்படுவது இப்படியான பிரத்தியேக வகுப்புக்களுக்குச் செல்லும் வேளையில் ஏற்படும் விரும்பத்தகாத தொடர்புகளால்தான்.

ஒரு மாணவன் வீட்டில் இருப்பதை விட அதிகமாக பாடசாலையிலும் பிரத்தியேக வகுப்புக்களிலும் இருக்கின்றான்.வீட்டிலிருந்து தாய் தந்தையர்களுடைய அன்பைப் பெற்று அவர்களின் முக்கியத்துவத்தை உணர்வதற்கு அவர்களுக்கு நேரமில்;லை.

ஆசிரியர் மாணவர்களின் மனஅழுத்தங்கள்,அவர்களது நிலைமைகளை புரிந்து செயற்பட வேண்டும்.

ஒரு முறை நான் பாடசாலையொன்றுக்குச் சென்ற போது ஒரு சிறு மாணவி பாடசாலை வகுப்புக்கு வெளியே நின்று கொண்டு அழுது கொண்டு இருக்கிறது.

அப்பொழுது ஏன் எதற்காக நீ அழுகிறாய் எனக் கேட்ட போது டீச்சர் என்ன அம்மாவைப் பத்தி எழுதிட்டு வரச் சொன்னா நான் எழுதல்ல அதனால் டீச்சர் என்ன கிளாஸ விட்டு திரத்திட்டா என்று பதில் சொன்னது.அப்போது ஏன் என காரணத்தைக் கேட்டேன்.அப்போது எனக்கு அம்மா இருந்தாத்தானே என பதிலளித்தது.

எனவே ஆசிரியர்களின் மனோநிலையை அறிந்து செயற்பட வேண்டும்.

இயலுமான வரையில் பிரத்தியேக வகுப்புக்களைத் தவிர்த்து பாடசாலையிலேயே மாணவர்களை ஒழுக்கத்துடன் கூடிய சிறந்த நற்பிரஜைகளாக பின்னர் புத்திஜீவிகளாக உருவாக்க முயற்சிக்க வேண்டும்.

தேவைப்பட்டால் பாடசாலைகளில் மேலதிக வகுப்புக்களைப் போட்டு பாடங்களை நடாத்த முடியும்.

ஆகவே இவ்வாறான முறையில் மாணவர்களை சரிவற கவனெமெடுத்து நல்லதோர் மாணவர் சமுதாயத்தை அர்பணிப்புகள் பல செய்து உருவாக்குவதற்கு முயற்சிப்போமாக!

இக்கூட்டத்தில் மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன், மற்றும் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ், மட்டக்களப்பு மாவட்ட திட்டமில் பணிப்பாளர் இரா.நெடுஞ்செழியன், மட்டக்களப்பு வலய கல்விப் பணிப்பாளர் திருமதி சுபா சக்கரவர்த்தி, மட்டக்களப்பு மாநகர சபை ஆணையாளர் கே.சிவநாதன் உட்பட மட்டக்களப்பு கல்வி வலயத்திலுள்ள கோட்டக்கல்விப் பணிப்பாளர்கள், மாவட்ட விளையாட்டு உத்தியோகத்தர், பாடசாலைகளின் அதிபர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

???????????????????????????????

Published by

Leave a comment