பழுளுல்லாஹ் பர்ஹான்
மட்டக்களப்பு: மட்டக்களப்பு மாவட்டத்திற்கு நாள்தோறும் அல்லது கிழமை தோறும் அமைச்சர்களை கொண்டு பாரிய அபிவிருத்தி வேலைத்திட்டங்களை செய்வதற்கு தீவிரமாக செயற்பட்டு வருகின்றோம் என மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்தார்.
புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சின் கீழுள்ள புனர்வாழ்வு அதிகார சபையினால் கிழக்கு மாகாணத்தில் கடந்த 30வருட கால பயங்கரவாத வன்செயல்கள் காரணமாக பாதிக்கப்பட்டவர்களுக்கான நட்டஈடுகள் வழங்கும் நிகழ்வு மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் தலைமையில் நேற்று சனிக்கிழமை மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலக மகாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது. அதில் அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே பிரதி அமைச்சர் இதனைத் தெரிவித்தார். அவர் தொடர்ந்து கூறுகையில்,
கடந்த 30வருட கால யுத்தத்தில் கடுமையாக பாதிக்கப்பட்ட ஒரு மாகாணமாக எமது கிழக்கு மாகாணம் காணப்படுகின்றது. கிழக்கு மாகாணத்தில் கடந்த 30வருட கால பயங்கரவாத வன்செயல்கள் காரணமாக பாதிக்கப்பட்டவர்களுக்கான நட்டஈடுகளை புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சு ‘ரிபியா’எனும் திட்டத்தின் மூலம் வழங்கி வருகினறது.
இதற்கமைவாக மட்டக்களப்பு,அம்பாறை,திருகோணமலை மாவட்டங்களைச் சேர்ந்த மூன்று மாவட்டங்களைச் சேர்ந்த மக்களையும் அழைத்து எமது மட்டக்களப்பு மாவட்டத்தில் இவ்வாறான கொடுப்பனவுகளை எமது அரசாங்கம் வழங்கி வருகின்றது. இந்ந நாட்டில் அதி மேண்மை தங்கிய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பலதரப்பட்ட விடயங்களிலும் பாரிய அபிவிருத்தி வேலைத்திட்டங்களை செய்து வருகின்றார். புனர்வாழ்வு கொடுப்பனவுகள், கொங்றீட் வீதிகள், பாலங்கள்,அபிவிருத்திகள் என பல வகையான வேலைத்திட்டங்கள் இடம்nருகின்றன.
இன்று நாம் அரசாங்கத்திற்கு குற்றஞ்சாட்டுவதை விட்டு விட்டு அதற்கும் ஜனாதிபதிக்கும் நன்றி சொல்ல வேண்டும். ஏனெனில் யுத்த சூழ்நிலைக்குப் பிறகு நிம்மதியான வாழ்க்கையும் அமைதியான சூழலும் கிடைக்கப்பெற்றுள்ளது. எமது பிள்ளைகள் ஒழுங்காக பாடசாலைக்கு செல்ல முடியாத நிலை,நிம்மதியாக பிரயாணம் செய்ய முடியாத நிலை,வீதிகளில் இரவு வேளைகளில் நடமாட முடியாத நிலை என பல்வேறு அசௌகரியங்களை எதிர்நோக்கினோம்.
இன்று அந்த சூழ்நிலைகள் இல்லாமல் போய் ஒரு சமாதானமான சூழல் உருவாகியுள்ளது. இவ்வாறான காலப்பகுதியில் எமது மாவட்டத்தை முன்னேற்ற நான், பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ், அமைச்சர் பஷீர் ஆகியோர் தீவிரமாக செயற்பட்டுக்கொண்டிருக்கின்றோம். ஒவ்வொரு நாளும் ஒரு அமைச்சர் அல்லது ஒரு கிழமைக்கு ஒரு அமைச்சர் என மாவட்டத்திற்கு அழைத்து வந்து அவர்களுடாக ஒவ்வொரு துறைகளிலும் எமது மாவட்டத்திற்கு தேவையானவற்றை கேட்டுப் பெற்றுக்கொள்கின்றோம். இந்நடவடிக்கையில் என்னோடு பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ், அமைச்சர் பஷீர் ஆகியோர் தோலோடு தோல் சேர்த்து நிற்கின்றனர்.
மாவட்டத்தை அபிவிருத்தி செய்ய எல்லா அமைச்சுக்களையும் இணைத்து எமது மக்களுக்கு பாரிய நன்மைகளை வழங்க இருக்கின்றோம். சிறைச்சாலைகள் புனர்வாழ்வு மற்றும் மறுசீரமைப்பு அமைச்சு கடமையை இன, மத, மொழி, வேறுபாடுகளின்றி சரிவற நிறைவேற்றி வருகின்றது என பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் மேலும் தெரிவித்தார்.

Leave a comment