மட்டு மாவட்டத்தில் அண்மைக்காலமாக விரும்பத்தகாத சம்பவங்களுக்கு என்னையும் எனது த.ம.வி.பு கட்சியையும் குற்றஞ்சாட்டுவது சில சக்திகளின் காழ்ப்புணர்ச்சியே – பூ.பிரசாந்தன்

Yourkattan kudy
Yourkattankudy

பழுளுல்லாஹ் பர்ஹான்

மட்டக்களப்பு: அண்மைக்காலமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் நடைபெறும் விரும்பத்தகாத சம்பவங்களுக்கு எமது தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியையும் குறிப்பாக பொதுச் செயலாளராகிய என்னையும் சம்பந்தப்படுத்த சிலர் முனைவதும் அதனை திரிபுபடுத்தி பெரிதுபடுத்தி சில ஊடகங்கள் செய்தி வெளியிடுவதும் வாடிக்கையாகிவிட்டது என தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பொதுச் செயலாளரும் முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான பூபாலப்பிள்ளை பிரசாந்தன் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்,

எவர் குற்றம் புரிந்தாலும் அவர் சட்டத்தின் முன் தண்டிக்கப்பட வேண்டியவர்களே! நாடு பூராகவும் நிலைமை சீர்படுத்தப்பட்டு ஜனநாயக ரீதியாக நிருவாகம் நடைபெற்று வரும் வேளையில் அரச சிவில் நிருவாக பொலிஸ் படையினர் எங்கு குற்றச் செயல்கள் நடந்தாலும் துரிதமாக நடவடிக்கை எடுத்து குற்றவாளிகனை அடையாளப்படுத்தும் நிலையும் மேலோங்கிக் காணப்படுகின்றது குறிப்பிடத்தக்கது. ஆனால் மாறாக இன்றைய சூழ்நிலையில் குற்றங்களை மறைத்து குற்றவாளிகளை தப்பிக்க வைப்பதனை நோக்கமாகக் கொண்டோ அல்லது அரசியல் மயமாக்கி அதில் குளிர் காய்வதற்கோ சிலர் முனைவதும் கண்டிக்கத்தக்கது.

குடும்ப சண்டை, அனாமோதய துண்டுப்பிரசுரங்கள் போன்ற முன்னெடுப்புக்களுக்குக் கூட எம்மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்களை சுமத்த முற்படுவது மக்களுக்காக அர்ப்பணிப்புடன் சேவை புரிந்து வரும் என்னையும் எனது கட்சியினையும் மக்கள் மத்தியிலிருந்து விலகச் செய்யும் திட்டமிட்ட சிலரின் காழ்ப்புணர்ச்சியின் வெளிப்படாகவே பார்க்கின்றோம். கிழக்கு மாகாணத்தில் அன்றாட தமிழ் மக்களின் வாழ்வாதார வலுவாக்கம் தொடக்கம் சமுக உட்கட்டமைப்பு, அபிவிருத்தி செயற்பாடுகள் வரை மிக பொறுப்புணர்ச்சியுடன் செயற்பட்டு வரும் எமது கட்சி மீது இவ்வாறான திட்டமிட்ட பழிசுமத்தல்களை ஆராய்ந்து பார்க்க வேண்டியது அல்லது இருபக்க கருத்துக்களையும் செவிமடுத்து மக்கள் மத்தியில் கொண்டு செல்ல வேண்டியதும் பொறுப்புமிக்க ஊடகங்களின் கடமையாகும்.

ஆரையம்பதி இராசதுரை கிராமம் அமரசிங்கம் வீதியில் வசிக்கும் கோணமலை கண்ணதாசன் என்பவரின் வீடு தாக்கப்பட்டதற்கு என்னையும் தொடர்புபடுத்தி செய்தி வெளியிடப்பட்டிருந்தது.

இது தொடர்பாக அறியவருவதாவது, ஏற்கனவே திருமணம் முடித்திருந்த இவர் இரண்டாவதாக இன்னும் ஒரு பெண்ணை மணந்து அம் மனைவிக்கு ஒரு குழந்தை இருப்பதாகவும் இரண்டாவது மனைவியின் சகோதரர்களுக்கும் குறித்த கோணமலை கண்ணதாசனுக்கும் அடிக்கடி தொடர் கைகலப்புக்கள் ஏற்பட்டு வருவதாகவும் காத்தான்குடி, மட்டக்களப்பு பொலிஸ் நிலையங்களிலும் இது தொடர்பாக பல முறைப்பாடுகள் உள்ளதாகவும் அறியப்பட்டுள்ள நிலையில் கடந்த 18.03.2013 ஆந் திகதி இரவு குறித்த இரு சாராருக்குமிடையே இடம்பெற்ற குடும்பப் பிரச்சினையில் என்னையும் எனது கட்சியினையும் எனது சகோதரரையும் கோர்க்க முற்பட்டதனை எதுவித ஆதாரமும் இல்லாது சில ஊடகங்கள் பிரசுரித்திருந்தது.

இரு வீட்டிற்குமிடையில் நடக்கும் குடும்பப்பிரச்சினையினை கூட அரசியல் மயமாக்கி அதன் மூலம் விளம்பரம் தேட முற்படும் இவ்வாறான நிலையினை நடுநிலைமையாக பார்க்க வேண்டியது பொறுப்புமிக்க அனைவரின் கடமையாகும் என சுட்டிக்காட்ட விரும்புகின்றோம். த.ம.வி.பு.கட்சி இன்று ஜனநாயக ரீதியில் தமிழ் பேசும் மக்களின் வலுவாக்கத்திற்காக அர்ப்பணிப்புடன் பயணிப்பதனையும், கட்சிக்கு உள்ளேயும் வெளியேயும் ஒழுக்கங்களைப் பேணி தூய்மையான அரசியலை மேற்கொண்டு வரும் எமது கட்சி செயற்பாடுகள் மக்களினால் வரவேற்கப்பட்டு வரும் நிலையில் யாரும் த.ம.வி.பு.கட்சியின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்க முற்படுவதனை ஒருபோதும் அனுமதிக்க முடியாது.

இனிமேல் கொண்டு எமது கட்சியினை ஆதாரம் இல்லாது தூற்ற முற்படும் நிலைக்கு எதிராக எதிர்வரும் காலங்களில் சட்ட நடவடிக்கை எடுப்பதற்கு தயார்படுத்தி வருகின்றோம் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

Published by

Leave a comment