
பழுளுல்லாஹ் பர்ஹான்
மட்டக்களப்பு: பல நோக்கு கூட்டுறவு சங்கங்களை மீளமைத்து அதன் நடவடிக்கைகளை சிறப்பாக முன்னெடுத்துச் செல்ல வேண்டிய பொறுப்பு மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள பல நோக்குக் கூட்டுறவுச் சங்க தலைவர்களுக்கு உள்ளது என மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்தார்.
நேற்று மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள பல நோக்கு கூட்டுறவு சங்கங்களின் செயற்பாடுகள் ஸ்தம்பித நிலை தொடர்பாக அதன் தலைவர்களுடனான கலந்துரையாடல் நிகழ்வு நேற்று வெள்ளிக்கிழமை பிற்பகல் மட்டக்களப்பு மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது. அதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
தொடர்ந்து உரையாற்றுகையில்,
மட்டக்களப்பு மாவட்டத்தில் யுத்தகாலத்திற்குப் பிறகு பல பல நோக்கு கூட்டுறவு சங்கங்கள் மூடப்பட்டு அதில் கடமை புரிந்த உத்தியோகத்தர்களும் பதவி இழந்து போகின்ற நிலை உருவாகியிருக்கின்றது.
எமது மாவட்டத்தில் பல நோக்கு கூட்டுறவு சங்கங்கள் நிவாரண விநியோகத்திற்கு மாத்திரம்தான் உபயோகிக்ப்பட்டன.தற்போது யுத்த சூழ்நிலை முடிவடைந்து நிவாரண விநியோகம் நிறுத்தப்ட்டதன் பின்னர் சங்க செயற்பாடுகள் ஸ்தம்பிதமடைந்து சங்கங்கள் செயழிளந்து காணப்படுகின்றன.
நீங்கள் கால மாற்றத்திற்கேற்ப நாங்களும் எம்மை மாற்றிக் கொள்ள வேண்டும்.வன்னி மாவட்டத்தில் எமது அரசாங்க அதிபர் பி.எஸ்.எம்.சார்ல்ஸ் சேவையில் இருந்த போது அங்கே தூர்ந்து போயிருந்த பல நோக்கு கூட்டுறவு சங்கங்களை இலங்கையில் சிறந்த இலாபமீட்டக்கூடிய சங்கங்களாக உருவாக்கினார்கள்.
இப்பொழுது சிறந்த ஆளுமைமிக்க ஒரு அரசாங்க அதிபர் எமது மாவட்டத்திற்கு கிடைக்கப்பெற்றுள்ளார்.நீங்கள் அவருடன் ஒத்துழைத்து பல நோக்கு கூட்டுறவுச் சங்கங்களை மீள புனரமைத்து முன்னெடுத்துச் செல்ல முயற்சிக்க வேண்டும். உங்களுக்குத் தேவையான சகல வழிவகைகளையும் நாம் செய்வதற்கு தயார்நிலையிலோ உள்ளோம். வியாபாரம், பொருட்கொள்வனவு,பொருள் உற்பத்தி,நெற்களஞ்சியம் என பல வழிவகைகளையும் நாம் செய்து தருவோம்.நீங்கள் சிறந்த முறையில் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு உங்களது சங்கங்களை மீள கட்டியெழுப்ப வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் 06 நெற்களஞ்சிய சாலைகளை நிறுவ உள்ளோம். இதன் மூலம் சிறந்த இலாபத்தை நீங்கள் ஈட்டிக்கொள்ள முடியுமெனவும் அவர் தெரிவித்தார்.
இக்கூட்டத்தில் மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன், மற்றும் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ், மட்டக்களப்பு மாவட்ட திட்டமில் பணிப்பாளர் இரா.நெடுஞ்செழியன், மட்டக்களப்பு மாநகர சபை ஆணையாளர் கே.சிவநாதன் உட்பட மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள பல நோக்குக் கூட்டுறவுச் சங்க தலைவர்கள் உறுப்பினர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.
Leave a comment