கொழும்பு: ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் நேற்று முன்தினம் புதன்கிழமை இலங்கையில் இருக்கும் 15 முஸ்லிம் நாடுகளின் பிரதிநிதிகளையும் அலரி மாளிகைக்கு அழைத்து, இந்நாட்டில் முஸ்லிம்கள் எவ்வித அச்சமும் இன்றி, சம உரிமைகளுடன் வாழ்கின்றனர் என்பதை உறுதிப்படுத்தி இருந்தார்.
இம் மாநாடு இடம்பெற்று 24 மணித்தியாலத்திற்குள் பொது பல சேனா இயக்கம் முஸ்லிம்கள் மீது தனது மற்றுமொரு கோமாளித் தனத்தை நேற்று வியாழக்கிழமை அறிவித்திருந்தது.
இலங்கையில் ஜிஹாத் இருப்பதாகவும், ஆயுத நடைமுறைகளும் வியாபாரங்களும் இடம்பெறுவதாகவும் பொது பல சேனா தெரிவித்திருந்தது. எனினும் அரசாங்க சார்பில் இவர்களது கருத்துக்கு உடன் மறுப்புத் தெரிவிக்கப்பட்டிருந்தது வரவேற்கத்தக்கது!
இவர்களின் நோக்கம் முஸ்லிம்களை இந்நாட்டில் இருந்து விரட்டியடிக்கவேண்டுமே தவிர வேறெந்த நோக்கமும் இல்லை என்பது மிக தெளிவாக எடுத்துக்காட்டுகின்றது.
ஹலால் விடயம் முடிந்துவிட்டாலும், இவர்களின் முஸ்லிம்கள் மீதான வெறித்தாகம் தீரவில்லை! இந்நாட்டில் இவ் அமைப்பினால் குத்திக் கிளறி 9 மாத முயற்சியால் அகற்றப்பட்ட ஹலால் முத்திரையின் வெற்றியினைத் தொடர்ந்து, மிக மோசமான நடவடிக்கைகளை முஸ்லிம்கள் மீது தொடர்ந்தும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றனர்.
முஸ்லிம் பெண்களின் அபாயா உடைக்கு எதிரான முயற்சிகள், முஸ்லிம் வியாபார நிறுவனங்களை முடக்குதல், அச்சுறுத்தல்கள் என்பவை அன்மைக்காலத்தில் ஆதாரபூர்வமாக இவ் அமைப்பால் மேற்கொள்ளப்பட்டு வந்ததை யாரும் மறக்க முடியாது.
எனினும், இவர்களின் நடவடிக்கைகள் இரகசியப்படங்களுக்குள் சிக்கிக்கொண்டதால், அரசாங்கமும் மூக்கை நுழைக்காமல், விலகிக்கொண்டது.
எனவே இந்நாட்டில் முஸ்லிம்கள் மீது கைவைப்பதற்கு மாற்றுவழி என்ன என்பதை உலக நடைமுறையில் ஆராய்ந்தபின்னர், இவர்களுக்குக் கிடைத்திருக்கம் ஓர் துரும்புச் சீட்டுத்தான் இந்த ஜிஹாத் வார்த்தைப் பிரயோகமாகும்.
ஜிஹாத் வார்த்தையை வைத்து முஸ்லிம்களை நசுக்குவதற்கு மேற்கொள்ளப்பட்டு வரும் இவர்களின் திட்டத்தில் ‘டு-இன்-வன்’, ‘திரி-இன்-வன்’ அல்லது ‘ஒரு கல்லில் பல மாங்காய்கள்’ என்பது போல ஓர் திட்டத்தில் பல இலாபங்களை பெற்றுக்கொள்ளலாம் என இறுதியாக ஆலோசித்து, இந்த முடிவுக்கு வந்திருக்கின்றனர்.
பொது பல சேனாவின் துவேசத்தனமான நோக்கங்களில் பின்வரும் விடயங்களை இந்நாட்டில் ஜிஹாத் வார்த்தையைப் பயன்படுத்துவதன் மூலம் அவ்வமைப்பு எதிர்பார்க்கிறது…
1. பாதுகாப்பு:
அ) பாதுகாப்பு காரணமாக முஸ்லிம் இளைஞர்கள், பொது பல சேனாவுக்கு எதிராக குரல் கொடுக்கும் முஸ்லிம்கள் ஜிஹாத் என்ற போர்வையில் கைது செய்யப்பட்டு, சிறைப்படுத்தப்பட்டு, சித்திரவதைக்குள் ஆளாக்கப்படல் அல்லது அழிக்கப்படல்.
ஆ) ஆயுத சோதனைகள் எனும் குற்றச்சாட்டில் முஸ்லிம் ஊர்களும், கிராமங்களும் சுற்றிவளைக்கப்பட்டு, வேட்டையாடப்படல்.
இ) அச்சுறுத்தல் என்ற போர்வையிலும், ஜிஹாத் பயங்கரவாதம் கற்பிக்கப்படுகின்றன என்ற குற்றச்சாட்டிலும் மத்ரஸாக்கள், பள்ளிவாயல்கள் என்பன அகற்றப்படல்.
ஈ) முஸ்லிம் வியாபார நிலையங்கள் சோதனைகளுக்குள்ளாக்கப்படலும் முஸ்லிம் வர்த்தகர்கள் அநீதிக்குள்ளாக்கப்படலும்.
உ) பாதுகாப்பு காரணத்தைக் கருத்திற்கொண்டு, முஸ்லிம் பெண்களின் அபாயா, ஹிஜாப் என்பன இலகுவாக அகற்றப்படுவதற்கான நடவடிக்கை.
ஊ) இஸ்லாமிய மார்க்கச் சொற்பொளிவுகள், ஒன்று கூடல்கள், இஸ்லாமிய உடை, கலாச்சாரம் என்பவற்றை முடக்குதல்.
2. வெளிநாட்டின் உதவிகள்:
குறிப்பாக ஐரோப்பா, மற்றும் அமெரிக்காவின் உதவிகளை தக்கவைத்துக் கொள்வதற்கும், ஜிஹாத் எனும் பயங்கரவாதம் இலங்கையிலும் இருப்பதாக நிரூபித்து, அவற்றை அகற்றுவதற்கான மேலைத்தேய உதவிகளையும் ஆதரவுகளையும் பெற்றுக்கொள்ளல்.
எனவே பல வியூகங்களில் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட இருக்கும் இப்பேரினவாத குழுவின் பின்னணியை மீண்டும் 9 மாதங்கள் வாய்மூடிவிட்டு, ஆமோதித்துவிடாமல் உரிய முஸ்லிம் அமைப்புக்கள் கண்டணங்களையும், எதிர்ப்புக்களையும் தெரிவுக்குமாறு கேட்கின்றோம்.
எவ்வாறு ஹலால் இன்று இல்லாமல் போய்விட்டதோ இதே போல் மற்றைய விடயங்களும் எங்களை விட்டும் போய்விடும்.
எனவே இலங்கை முஸ்லிம்கள் ஒட்டுமொத்தமாக மீண்டும் ஓர் கண்டணத்தை இவ்வமைப்புக்கு எதிராக மேற்கொண்டு உலகுக்கு உண்மையை கோடிட்டுக் காட்டுவதுடன், உள்ளுர் அரசியல் தலைவர்களின் மௌனங்களுக்கு எதிராக குரல் கொடுக்கவும் முன்வரவேண்டும்.
மௌனித்திருப்பதற்கு இது ஓர் தனிப்பட்டவர் பிரச்சினையல்ல! ஓர் சமூகத்தின் உரிமை என்பதை எவரும் மறந்துவிடக்கூடாது!

Leave a comment