– பழுளுல்லாஹ் பர்ஹான்
கொழும்பு: மறைந்த தலைவர் மாமனிதர் மர்ஹூம் அஷ்ரப் தாம் வாழ்ந்த காலத்தில் தமிழ் முஸ்லிம் உறவுக்கென கடுமையாக உழைத்தவர். அவரது தமிழ், முஸ்லிம், சிங்கள மக்களின் ஒற்றுமைக்கான, ஒன்றினைப்புக்கான கனவாகவே தேசிய ஐக்கிய முன்னணி உருவானது என மீண்டும் மீள்புணரமைப்பு செய்யப்பட்டுள்ள தேசிய ஐக்கிய முன்னணியின் செயலாளர் நாயகம் அ. அ. ஜெயராஜா தெரிவித்தார்.
இன்று புதன்கிழமை ஊடகங்களுக்கு விடுத்துள்ள அறிக்கையிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
2000ம் ஆண்டில் அந்தக் கனவை நனவாக்கும் நோக்கமாகவே தேசிய ஐக்கிய முன்னணியில் அவர் களம் இறங்கினார். அவர் களம் இறங்கிய எல்லாப் பிரதேசங்களிலும் தன் வெற்றியை நிலைநிறுத்தியது. குறிப்பாக அம்பாறை மாவட்டத்தில் இந்த கனவு நனவாகி நம் கண்முன்னே தெரிந்தது.
அவர் இதனையே 2012ன் இலக்காகக் கொண்டு செயற்பட முற்பட்டார். மூவினங்களின் ஒற்றுமைக்காக தான் சிந்திய இரத்தமும் வியர்வையும் கடின உழைப்பும் தனது கனவை என்றோ ஒரு நாள் நனவாக்கும் என்பதை அவரால் அன்றே உணர முடிந்தது. அதனையே தனது இலட்சியமாகவும் அவர் கொண்டார்.
இன்று அந்த மாமனிதர் நம்முடன் இல்லாது போனாலும், அவரது இலட்சியத்தை முன்னெடுக்க நாம் உறுதி பூண வேண்டும். இந்த இலட்சியத்தை முன்னெடுக்கவும், இதற்கென போராடவும் நாம் இனி வருங்காலத்தில் கடுமையாக உழைக்க வேண்டியும் இருக்கும். இதேவேளை வெறும் அரசியல் இலாபங்களுக்காக அவர் தேசிய ஐக்கிய முன்னணியை களமிறக்கவில்லை என்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.
அன்று அஷ்ரப் எனும் மாமனிதரை சுற்றி நின்ற அந்த இலட்சிய இதயங்களுக்கு நன்கு தெரியும் தேசிய ஐக்கிய முன்னணிக்கான அவரது நோக்கமும் கனவும் என்னவென்பது. இந்த இதயங்கள் இனங்களின் ஒற்றுமைக்கான இன்றைய காலகட்டத்தின் அவசியத்தை உணர்ந்து செயற்பட முன்வர வேண்டும். இது மூவினங்களும் ஒன்றிணைந்து முத்தான பூமி ஒன்றை உருவாக்குவதற்கான காலம். இலட்சிய இதயங்கள் இணையட்டும். இதுவே அந்த மாமனிதரின் இலட்சியக் கனவை நனவாக்கும் என தேசிய ஐக்கிய முன்னணியின் மறுமலர்ச்சிக் காலம் என்றும் தேசிய ஐக்கிய முன்னணியின் செயலாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
Leave a comment