மட்டக்களப்பு: இலங்கை நாட்டில் மட்டக்களப்பு மாவட்டம் போதை வஸ்த்து பாவணையில் குறிப்பாக மதுபானத்தில் முதலாவது இடத்திலுள்ளது போதைவஸ்த்து பாவனை ஒழிப்புக்காக மட்டக்களப்பு மாவட்டத்தில் பாரிய வேலைத்திட்டமொன்றை இந்து இளைஞர்கள் மேற்கொள்ள வேண்டுமென தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மட்டக்களப்பு இந்து இளைஞர் மன்ற தலைவருமான சீ.யோகேஸ்வரன் தெரிவித்தார்.
‘இந்துவாக வாழ்வோம் இந்து தர்மம் காப்போம்’எனும் தொனிப் பொருளில் மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவையினால் 2013 உயர்தரம் கற்கும் இந்து இளைஞர்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்ட மூன்று நாள் வதிவிடத்துடனான இந்து சமய மேம்பாட்டு தலைமைத்துவ பயிற்சி நெறியின் ஆரம்ப நிகழ்வு இன்று புதன்கிழமை மட்டக்களப்பு நாவற்குடா இந்து சமய கலாசார நிலைய மண்டபத்தில் இடம்பெற்ற போது கலந்து கொண்டு உயைராற்றுகையிலேயே தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் தெரிவித்தார். அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,
மட்டக்களப்பு மாவட்டத்தில் தினமும் 85000 மதுபான சாராய போத்தல்கள் விற்பணை செய்யப்படுகின்றது. இங்கு போதை வஸ்த்து பாவனை அதிகரித்து செல்வதால் அதை கட்டுப்படுத்துவதற்கும் போதை வஸ்த்து பாவணையிலிருந்து நமது சமூகத்தையம், இளைஞர்களையும் மாணவ சமூகத்தையும் பாதுகாக்க வேண்டும்.
மட்டக்களப்பு மாவட்டம் வறுமை மாவட்டமாக பிரகடனப்படுத்தப்பட்டாலும் அது நாடளாவிய ரீதியில் 20வது இடத்தில்தான் உள்ளது. ஆனால் போதைவஸ்துப் பாவனையில் எமது மாவட்டம் தன்னிகரற்ற ஓர் மாவட்டமாக முதலாவது இடத்தை தன்னகத்தே கொண்டுள்ளது.
இன்று பாடசாலைகளிலும் மாணவர்கள் சமூகச் சீரழிவுகளில் ஈடுபட்டு வருகின்றனர். அண்மையில் வாழைச்சேனையில் குடிபோதையில் ஈடுபட்ட பாடசாலை மாணவர்கள் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டனர். பாடசாலை மாணவர்களின் குறித்த சமூகச் சீரழிவினால் மோசமான சமுதாயம் கட்டியெழுப்பப்படுகிறது.ஆகையால் மட்டு மாவட்டத்தில் போதைப் பொருள் பாவனையில் ஈடுபடும் பாடசாலை மாணவர்களுக் கெதிராக மிகக் கடுமையான நடவடிக்கையினை எடுக்குமாறு மட்டக்களப்பிலுள்ள பொலிஸ் அதிகாரிகளிடம் வேண்டுகோள் வடுத்துள்ளோம்.
இந்து மதம் ஐந்து வகையான பஞ்சமாபாதங்களை சொல்லித்தருகின்றது.கல்,காமம்,கொலை உள்ளிட்ட இந்த அம்சங்களை முற்று முழுதாக தடை செய்கிறது இந்து மதம். கடந்த 08ம் திகதி மட்டு ஏறாவூர் பொலிஸ் பிரிவிட்குட்பட்ட செங்கலடியில் இடம்பெற்ற அகோர இரட்டைக்கொலையுடன் கொல்லப்பட்டவர்களின் மகள் உட்பட சம்பந்தப்பட்டவர்கள் அப்பிரதேச மத்திய கல்லூரி ஜீ.சீ.ஈ சாதாரண தர 16வயது பாடசாலை மாணவர்கள்.
அம்மாணவர்கள் இன்று விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்கள். அம்மாணவர்கள் சிறந்த பெறுபேறுகளை பெறக்கூடிய கல்வியில் ஆர்வமுள்ள மாணவர்கள் என்பதை விசாரித்து அறிந்து கொண்டோம். இன்று அவர்களின் எதிர்காலம் சீரழிந்து போய் சமுதாயத்தில் ஓரங்கட்டப்பட்டுள்ளார்கள். இம்மாணவர்களை இவ்வாறான ஈனச் செயலுக்கு இட்டுச் சென்றமை அவர்களிடத்தில் ஆண்மீக பக்தி,செயற்பாடு இல்லாமையே! மாணவர் சமூகம் சிறந்த ஒழுக்கத்தையும் பண்பாட்டையும் பெற்றுக் கொள்வதோடு இந்து மதத்தின் மீதான பற்றையும் ஆன்மீக விருத்தியையும் பெற்றுக்கொள்ள முயற்சிக்க வேண்டும்.
இன்று திருமண வீடுகளில் இந்துக் கலாச்சாரமே இல்லாத திருமணங்கள் இடம்பெருகின்றன.அந்நிய கலாச்சாரம் காட்டித்தந்துள்ள மதுபாவனையில் இன்று சர்வசாதாரணமாக ஆண்கள் மாத்திரமல்லாமல் பெண்களும் ஈடுபட்டு வருகின்றார்கள். இந்துக் கலாச்சாரமே தமிழ்க்கலாச்சாரமாகும்.ஹிந்து என்பது ஹிம்சை செய்யாதவன் என பொருள்.அடுத்தவனுக்கு அநீதி இழைக்காமல் அடுத்தவனின் இரத்தத்தை சிந்த வைக்காது இந்து மதத்தை விரும்பி நேசித்து வாழ்வதே உண்மையான ஹிந்துவின் பொறுப்பாகும்.
பாடசாலைகளில் சிறந்த நல்லொழுக்கமுள்ள மாணவர்களை உருவாக்கவும் அவர்களுக்கான சிறந்த வழிகாட்டலை மேற் கொள்வதற்காகவும் நாம் இந்து இளைஞர் பேரவையினால் இவ்வாறான தலைமைத்துவ பயற்சி நெறியை நடாத்துகின்றோம்.
மாணவர்களுக்கு இந்து சமய ஆண்மீகப் பயிற்சி நெறியை வழங்கி அவர்களை எதிர்காலத்தில் சமூக நற்பிரஜைகளாக உருவாக்குவது மட்டுமல்லாமல் அவர்களினூடாக சிறந்த ஆண்மீகமுள்ள சமுதாயத்தை கட்டியெழுப்புவதே எமது நோக்கம். இதற்காக மிக நீண்ட காலமாக கிழக்குப் பல்கலைக்கழகத்தில் இந்து பீடமொன்றை ஆரம்பிக்க முயற்சி செய்து வந்தோம்.ஆனால் தற்போது அங்கு இந்து சமய துறையை ஆரம்பிப்பதற்கான அனுமதியை உயர்கல்வி அமைச்சர் எஸ். பி. திஸாநாயக்க எனக்கு தந்துள்ளார். இலங்கையிலுள்ள பல்கலைக்கழகங்களில் அறபு பீடம், பௌத்த பீடம் என ஒவ்வொரு மதத்தினருக்கும் பீடங்கள் உள்ளன. ஆனால் இந்து சமயத்திற்கு எந்த வித பீடமுமில்லை. இதற்கான காரணம் இந்து கல்விமான்களின் குறைபாடே ஆகும்.
மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவை பொருளாளர் திரு.ந.புவனசுந்தரத்தின் நெறிப்படுத்தலின் கீழ் இன்று முதல் மூன்று நாட்களுக்கு இடம்பெரும் இத்தலைமைத்துவ பயிற்சி நெறியின் ஆரம்ப நிகழ்வில் மட்டக்களப்பு கல்வி வலயக் கல்விப் பணிப்பாளர் திருமதி சுபா சக்கரவர்த்தி,இந்து சமய கலாசார நிலைய உத்தியோகத்தர் திருமதி எழில்வானி பத்மகுமார்,கிழக்க இந்து ஒன்றிய காந்தி சேவா சங்க செயலாளர் கதிர் பாரதிதாசன் மற்றும் பிரமுகர்கள்,க.பொ.த உயர்தர இந்து மாணவர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

Leave a comment