சவூதியில் சட்டவிரோதமாக தங்கியுள்ள 5000 பேரை கட்டம் கட்டமாக அழைத்துவர முடிவு

sharafiya bridge2[1]ஜித்தா: சவூதி அரேபியாவில் சட்டவிரோதமாக தங்கியுள்ள சுமார் 5 ஆயிரம் இலங்கை பணியாளர்களையும் கட்டம் கட்டமாக இலங்கைக்கு திருப்பி அழைத்துவரவுள்ளதாகவும் அதுவரை அவர்கள் முன்பு தொழில்புரிந்த இடங்களில் தொடர்ந்து பணிபுரிய சவூதி அரசாங் கத்துடன் உடன்பாடு எட்டப்பட்டுள்ளதாகவும் வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் கூறியது.

இது தொடர்பாக சவூதி தூதரகத்தினூடாக அங்குள்ள இலங்கை பணியாட்களுக்கு அறிவித்துள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியக பிரதி பொது முகாமையாளர் ரந்தெனிய கூறினார்.

சவூதி அரேபியாவின் ஜித்தா சருபிய்யா பாலத்திற்கருகில் சுமார் 1200 இலங்கை பணியாளர்கள் கடந்த ஒரு மாதகாலமாக நிர்க்கதியான நிலையில் தஞ்சமடைந்துள்ளனர். இவர்கள் உணவு, நீர் மற்றும் தங்குமிடமின்றி தவிப்பதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவித்தன.

இது குறித்து வினவியதற்கு பதிலளித்த அவர் சவூதி அரேபியாவில் பணிபுரிந்த சுமார் 5 ஆயிரம் இலங்கையர்கள் வேலைத்தளங்களில் தொடர்ந்து பணிபுரிய அனுமதிக்காததாலும் வேறு பிரச்சினைகளினாலும் சட்டவிரோதமாக அங்கு இருக்கின்றனர். பொது மன்னிப்பு வழங்கப்பட்டாலே அவர்களுக்கு மீள இலங்கை வர முடியும்.

sharafiya bridge2[1]

இந்தப் பிரச்சினை குறித்து வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் சம்பந்தப்பட்ட சவூதி அதிகாரிகளுடன் பேச்சு நடத்தியது. இதன்படி சட்டவிரோதமாக தங்கியுள்ளோரை நாளாந்தம் சிறு சிறு குழுக்களாக நாட்டுக்கு மீள திருப்பி அனுப்ப இணக்கம் காணப்பட்டது. தினமும் 25 முதல் 35 பேரையே திருப்பி அழைத்துவர முடியும்.

சட்டவிரோதமாக உள்ள அனைவரையும் சவூதியிலுள்ள இலங்கை தூதரகத்தில் பதிவு செய்து கொள்ளுமாறு கோரியுள்ளோம். அவர்கள் தாம் தங்கியிருந்த ஜித்தா சருபிய்யா பாலத்திற்கு அருகில் உள்ள பாலத்திற்கருகில் இருந்து வெளியேறியுள்ளனர். அவர்கள் தொடர்ந்து வெளியில் இருக்க வேண்டிய தேவை கிடையாது. நாட்டுக்கு திருப்பி அனுப்பும் வரை தாம் முன்பு பணியாற்றிய இடங் களில் அவர்களுக்கு பணிபுரிய முடியும்.

பாதிக்கப்பட்டு தூதரகத்தில் தஞ்சமடைந்த இலங்கை பணியாளர்களுக்கு பணியகம் விமான டிக்கற் வழங்கி இலங்கைக்கு திருப்பி அழைத்துவர நடவடிக்கை எடுக்கும். ஆனால் மேற்படி பணியாட்கள் அங்கு தொழில் புரிபவர்கள் சட்டவிரோதமாக இருப்பதாலே திருப்பி அழைக்கப்படுகின்றனர்.

எனவே, அவர்கள் தமது சொந்தப் பணத்திலே டிக்கெற் பெற்று நாடுதிரும்ப வேண்டும். அவர்கள் நாடுதிரும்ப தேவையான உதவிகளை பணியகம் மேற்கொள்ளும் என்றார்.

பாதிக்கப்பட்டவர் கருத்து

sharafiya bridge1[1]

இதேவேளை, தாம் ஒரு மாதகாலமாக பாலத்தின் கீழ் தஞ்சமடைந்திருந்தும் சவூதிக்கான இலங்கைத் தூதரகம் தாம் குறித்து எதுவித கவனமும் செலுத்தவில்லை என பாதிக்கப்பட்ட இலங்கை பணியாளர் ஒருவர் தெரிவித்தார்.

எந்த தூதரக அதிகாரியும் தங்களை சந்திக்கவில்லை எனவும் தங்களது பிரச்சினை குறித்து கவனிக்க யாருமே இன்றி தாம் அநாதரவாக தவிர்ப்பதாகவும் அவர் ஜித்தாவில் இருந்து தினகரனுக்கு தெரிவித்தார். ஒரு மாத காலம் சருபிய்யா பாலத்திற்கருகில் தஞ்சமடைந்திருந்தோம். தற்பொழுது ஜித்தா சிறைக்கருகில் உள்ள மைதானத்தில் இருக்கிறோம். உணவு, குடிநீர், தங்குமிட வசதி என்பன இன்றி பல நாட்களாக கஷ்டப்படும் எமக்கு எவரும் உதவ முன்வரவில்லை என்று குறிப்பிட்ட அவர் தாம் முன்பு பணிபுரிந்த இடங்களுக்கு மீள செல்வது குறித்து யாரும் அறிவிக்கவில்லை என்றார்.

-தினகரன் (செய்தி)

Published by

Leave a comment