கல்முனை: தியாகம் நிறைந்த ஆசிரியர்களின் பணியினால் கல்முனைப் பிரதேசம் கல்வியில் வளர்ச்சி கண்டுள்ளது என ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் அங்கத்துவத்திற்கான தேசிய பணிப்பாளரும், அம்பாறை மாவட்ட பொருளாளருமான ஏ.சீ. யஹியாகான் தெரிவித்தார்.
க.பொ.த. சா.த பரீட்சையில் சாய்ந்தமருது அல்- ஜலால் வித்தியாலய மாணவி வி.எப். சுமானி 9 ஏ தரச் சித்திபெற்றமையை கௌரவிக்கும் நிகழ்வு அண்மையில் சாய்ந்தமருது அல்- ஜலால் பாடசாலையில் அதிபர் எம்.எஸ். நபார் தலைமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் விசேட அதிதியாக கலந்துகொண்ட அவர் அங்கு தொடர்ந்தும் உரையாற்றும்போது,
இன்று நாட்டில் எமது சமூகத்திற்கு ஏற்பட்டிருக்கும் சோதனைகளுக்கு மத்தியில் எமது சிறுவர்களின் எதிர்காலத்திற்காக தியாகத்துடன் செயற்பட வேண்டிய பாரிய பொறுப்பு எங்கள் அனைவர் மீதும் இருக்கின்றது.
தியாகம் நிறைந்த ஆசிரியர்களின் பணியினால் கல்முனைப் பிரதேசம் கல்வியில் வளர்ச்சி கண்டு வருவது பாராட்டப்படவேண்டியது.
நிறைவான கல்வியை வழங்குவதில் பெற்றோரின் பங்கும் மிகமுக்கியமானதாகும் ஆசிரியர்கள் தியாக உணர்வுடன் கல்வி கற்பித்ததனாலேயே இன்று தொடர்ச்சியாக இப்பாடசாலையில் சிறந்த பெறுபேறுகள் கிடைத்துக்கொண்டிருக்கிறது.
இந்த நிலை மேலும் அதிகரிக்க வேண்டும். அதற்காக என்னாலான சகல உதவிகளையும் செய்வதற்கு நான் தயாராக இருக்கின்றேன்.
அம்பாறை மாவட்டத்தில் சாய்ந்தமருது கோட்டத்தில் இப்பாடசாலை முன்மாதிரியான பாடசாலையாக திகழ்கின்றது. இதற்கு இங்குள்ள பாடசாலை ஆசிரியர்களின் அர்ப்பணிப்பு மிக்க சேவையே காரணமாகும்.
அதுபோல் அதிபரின் சிறந்த வழிநடாத்தலினால் எதிர்காலத்திலும் சிறந்த பெறுபேறுகளுடன் இப்பாடசாலை முன்னுதாரணமான பாடசாலையாக திகழும் என்பதில் ஐயமில்லை.
இதன் காரணமாகவே எமது சமூதாய கல்வி வளர்ச்சிக்கு உதவும் வகையில் பல்வேறு உதவிகளை நாம் மேற்கொண்டு வருகின்றோம். அந்த வகையில் இப்பாடசாலையில் அடுத்த வருடம் 9 ஏ சித்திபெறும் ஒவ்வொரு பிள்ளைக்கும் தலா 50 ஆயிரம் ரூபாய் வழங்குவதாக உறுதியளிக்கின்றேன்.
அதுபோன்று இப்பாடசாலையின் மிக நீண்டகாலத் தேவையாக இருந்து வந்த போட்டோகொப்பி இயந்திரம் ஒன்றையும் வழங்குகிறேன். அதுபோல் சுனாமியால் பாதிக்கப்பட்ட இப்பாடசாலையின் சுற்றுமதில் அமைக்கப்படாமை குறித்து அதிபர் என்னிடம் சுட்டிக்காட்டினார்.
அந்த தேவையையும் மிக விரைவில் நான் நிவர்த்திசெய்து தருவேன். கல்விக்காக நாம் செய்கின்ற சேவைகள் மூலம் பெரும் திருப்தியை எங்களால் உணர முடிகிறது. இப்பிரதேசத்து பாடசாலைகள் முந்திக்கொண்டு கல்வி வளர்ச்சிக்காக பாடுபட முன்வர வேண்டுமென்ற வேண்டுகோளை நான் விடுக்கின்றேன் என்றார்.

Leave a comment