ஜகார்த்தா: இந்தோனிசாவின் உல்லாசத் தீவுகளில் ஒன்றாக இருக்கும் பாலி (Bali) தீவின் விமான நிலையத்தில் நேற்று ஞாயிறு இந்தோனேசியா நேரப்படி பி.ப. 3 மணிக்கு தரை இறங்கவேண்டி இருந்த லயன் எயார் விமான சேவைக்குச் சொந்தமான போயிங் 737 விமானம் இலக்குத்தவறி, கடலில் வீழ்ந்தது.
நேற்று ஞாயிறு பி.ப. 3 மணியளவில் இந்தோனேஸியாவின் பாலி கடற்பரப்பில் இலேசான மழைத்தூரல்களுடன் கடற்பரப்பில் சில கால நிலை மாற்றங்கள் ஏற்பட்டிருந்ததாக தெரியவருகிறது.
எனினும் ஓர் விமானம் ஏறுவதற்கும், இறங்குவதற்கும் தடையாக இருக்கும் அளவுக்கு இக்கால நிலை மாற்றம் அமைந்திருக்கவில்லை எனவும், இவ்விமானம் விபத்துக்குள் ஆகுவதற்கு முன்னரும், பின்னரும் தொடர்ந்து விமானங்கள் தரை இறக்கி, மீண்டும் வழமையான சேவைகள் தொடர்ந்ததாகவும் பாலி விமான நிலைய கட்டுப்பாட்டு அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர்.
![Bali_crash_2535309b[1]](https://yourkattankudy.com/wp-content/uploads/2013/04/bali_crash_2535309b1.jpg?w=620&h=387)
பாலி தீவின் கடற்பரப்புக்கு மேலால் தரை இறங்க வந்த விமானம், ஓடு பாதையைத் தொடுவதற்கு சுமார் ஐநூறு மீட்டர் அளவான தூரம் இருக்கையில், தரையைத் தொடுவதற்கு பதிலாக கடலைத் தொட்டது.
101, பயணிகளும், 7 விமான ஊழியர்களும் இவ் விமானத்தில் பயணித்திருந்தனர்.

‘விமானம் தரை இறங்கப் போவதாகவும், தங்களது ஆசனங்களில் அமர்ந்துகொள்ளுமாறும், ஆசன பட்டியை அணிந்து கொள்ளுமாறும் எங்களுக்கு ஒலி,ஒளி மூலமாக செய்து வந்தது’ என பயணிகள் தெரிவித்தனர்.
‘திடீரென் சத்தங்கள் கேட்டன, எங்கள் உடல்கள் நீரால் நனையப்பட்டிருந்ததை உணர்ந்தோம்’ எனவும்,
‘சிலர் வீசி எறியப்பட்டனர், ஒருவரின் மேல் ஒருவர் விழுந்ததையும் கண்டோம்’. என பயணிகள் மேலும் தெரிவித்தனர்.
‘விமானத்துக்குள் நீரைக்கண்டதும் பயணிகள் பதட்டப்பட்டனர். அழுதனர். ஓலமிட்டனர். பயணிகளை அவசர நீச்சல் சட்டைகளை அணிவதற்கு விமான ஊழியர்கள் அறிவித்தனர். விமானத்தின் அவசர கதவுகள் திறக்கப்பட்டு பெரும் பாலான பயணிகள் நீந்தித் தப்பித்தனர்’ எனவும் மேலும் பயணிகள் தெரிவிக்கின்றனர்.
![Indonesia-Plane-Crash_Kand-(3)%20(1)[1]](https://yourkattankudy.com/wp-content/uploads/2013/04/indonesia-plane-crash_kand-32011.jpg?w=620&h=376)
இவ்விபத்து காரணமாக இருபது பேர் வரை தலைகள் மோதி காயப்பட்டும், 42 பேர் கால்களும் மற்றும் உடம்பின் சில பாகங்கள் உடைந்தும் பாதிக்கப்பட்டதால், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். எனினும் உயிர் சேதங்கள் எதுவும் ஏற்படாத ஓர் பாரிய விமான விபத்தாக இவ் விபத்து வரலாறு படைக்கின்றது.
லயன் எயார் விமான சேவையில் இதற்கு முன்னரும் இவ்வாறான விபத்துக்கள் ஏற்பட்டிருந்ததாகவும் எனவே, விமானத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாகவே குறித்த விமானம் விபத்துக்குள்ளானது எனவும் இந்தோனேசியா அரசாங்கம் குறித்த விமான சேவையை குற்றம் சாட்டியிருக்கின்றது.
![g_37055[1]](https://yourkattankudy.com/wp-content/uploads/2013/04/g_370551.jpg?w=610&h=436)
பத்தாயிரம் மணித்தியாலங்களுக்கும் மேலாக விமானம் செலுத்திய அனுபவத்தைக் கொண்ட ஓர் சிறந்த விமானி ஓருவரே இவ்விமானத்தை செலுத்தி இருந்தார். குறித்த விமானியின் ஆறு வருட சேவைக்கால அனுபவத்தில் இது முதலாவது விபத்து என தெரிய வருகிறது. விமானிகளின் சேவைக்கால அனுபவம், மணித்தியாலங்களைக் கொண்டே கருதப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
விமானம் கடலில் விழ முன்னர் எவ்வித அபாய சமிக்ஞைகளும் எங்களுக்கு வழங்கப்படவில்லை என பயணிகள் குற்றம் சாட்டி இருந்தனர்.
உண்மையில் விமானத்தில் கோளாராறு ஏற்பட்டால் மாத்திரமே அபாய சமிக்ஞை ஒலி எழுப்பும். ஆனால் விமானம் கடலில் விழும் வரை எவ்வித சமிக்ஞைகளும் எழவில்லை.
எனவே இவ் விபத்து நிச்சயமாக விமானத்தின் கோளாராக இருக்க முடியாது எனவும், விமானியிடமே இவ்விபத்து பற்றி தீர விசாரிக்க வேண்டும் எனவும் இந்தோனிசாயாசின் விமான நிலைய சிரேஸ்ட அதிகாரிகள் கருத்துத் தெரிவித்திருக்கின்றனர்.
இதன் காரணமாக விமானி உட்பட குறித்த விமானத்தில் பயணித்த விமான ஊழியர்களும் கைது செய்யப்பட்டிருக்கின்றனர்.
![Black-Box[1]](https://yourkattankudy.com/wp-content/uploads/2013/04/black-box1.jpg?w=630&h=433)
ஓரு நாள் முழுவதும் இந்தோனேசியா அவசர மீட்புப்ப டையினரும், சுழியோடிகளும் தனது பங்களிப்பைச் செய்து விமானத்தின் சிதைவுப் பாகங்களையும் பயணிகளின் பொருட்களையும் மீட்டு வருகின்றனர்.
இதற்கிடையில் விமானத்தின் ‘கறுப்புப் பெட்டி’ (Black Box / Recorder) கிடைத்து விட்டதாக மீட்புப் படையினர் இன்று அதிகாலை தெரிவித்ததாக இந்தோனேசிய செய்திகள் தெரிவிக்கின்றன.
மர்மம் தொடர்கிறது. தீவிர விசாரணையை இந்தோனேசியா அரசாங்கம் மேற்கொண்டு வருகின்றது. விபத்துக்கான காரணத்தை ஒன்றில் விமானி தெரிவிக்க வேண்டும். அல்லது கறுப்புப் பெட்டி (Flight Recorder) பதில் சொல்லும்!
![Bali_crash_2535309b[1]](https://yourkattankudy.com/wp-content/uploads/2013/04/bali_crash_2535309b1.jpg?w=150&h=93)
Leave a comment