சூரிச்: ஐரோப்பா உதைப்பந்தாட்ட சம்மேளனத்தினால் வருடா வருடம் ஐரோப்பாவின் முன்னணிக் கழகங்களுக்கிடையில் நடாத்தப்பட்டு வரும் (UEFA) சம்பியன் லீக் போட்டியின் அரை இறுதிப்போட்டிகளில் ஸ்பெய்ன் நாட்டின் இரு அணிகளும், ஜேர்மனியின் இரு அணிகளும் மோதவிருக்கின்றன.
கடந்த வாரம் இடம்பெற்று முடிந்த கால் இறுதிப்போட்டியில் வெற்றி பெற்ற ரியல் மெட்ரிட் (ஸ்பெய்ன்), பார்சிலோனா (ஸ்பெய்ன்), பேயர்ன் மியூனிச் (ஜேர்மனி) மற்றும் பொரஸ்ஸா டொட்மண்ட் (ஜேர்மனி) ஆகிய அணிகளுக்கிடையிலான அரை இறுதிப்போட்டியின் குலுக்கள் (Draw) முறையிலான தெரிவு சற்று முன்னர் இடம்பெற்றது.
இதனடிப்படையில் முதலாவது அரை இறுதி லீக் போட்டியின் முதலாவது போட்டி பேயர்ன் மியூனிச் கழகத்துக்கும் பார்சிலோனா கழகத்துக்குமிடையில் பேயர்ன் மியூனிச் கழக மைதானத்தில் இம்மாதம் 23ம் திகதி இரவு நடைபெறும்.
இரண்டாவது அரை இறுதிப்போட்டியின் லீக் போட்டி டொட்மண்ட் கழகத்துக்கும் ரியல் மெட்ரிட் கழகத்துக்குமிடையிலான போட்டி இம்மாதம் 24ம் திகதி டொட்மண்ட் கழக மைதானத்தில் நடைபெறும்.
அரை இறுதிப்போட்டியின் இரண்டாம் சுற்றின் முதலாவது போட்டி (Play Off) இம்மாதம் 30ம் திகதி பார்சிலோனா, பேயர்ன் மியூனிச் கழகங்களுக்கிடையில் பார்சிலோனா மைதானத்திலும், இரண்டாவது போட்டி ரியல் மெட்ரிட், டொட்மண் ஆகிய கழகங்களுக்கிடையில் ரியல் மெட்ரிட் மைதானத்திலும் இடம் பெற இருக்கின்றன.
ஆக மொத்தம் 4 போட்டிகள் கொண்ட அரை இறுதிப்போட்டியில் கோல் வெற்றி அடிப்படையில் ஒவ்வொரு பிரிவிலும் ஓர் அணி இறுதிப்போட்டிக்குத் தெரிவாகும்.
இறுதிப்போட்டி மே மாதம் 25ம் திகதி லண்டன், வெம்பிளி மைதானத்தில் இடம்பெறும்.
இம்முறை இங்கிலாந்து சார்பாக எந்த அணியும் கால் இறுதிக்குத் தெரிவாகவில்லை. 3 முறை UEFA சம்பியன் பட்டம் வென்ற அணியாகவும், அதிக முறைகள் UEFA போட்டிகளில் வருடாந்தம் விளையாடிவரும் இங்கிலாந்தின் முன்னணி அணியான மன்சஸ்டர் யுனைட்டட் இம்முறை கால் இறுதிக்குத் தெரிவாகாமல் தோல்வியைத் தழுவி இருந்தது.
கடந்த வருடம் இடம்பெற்ற UEFA ஐரோப்பா கிண்ண போட்டியில் இங்கிலாந்தின் செல்சி அணி சம்பியன் பட்டம் சூடிக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.
UEFA போட்டி விதிகள் வழமையான உதைப்பந்தாட்டப் போட்டிவிதிகளில் இருந்து மாற்றம் பெறுவது அதிக உதைப்பந்தாட்ட இரிகர்களுக்கு குழப்பமாகவே இருக்கும்.
எனவே குழப்பமான விதிகளை எமது வாசகர்களுக்கு சுருக்கமாக இங்கு தரப்படுகின்றன.
*அறிமுகப் போட்டிகள் மற்றும் ‘சுற்று-16’ என்று போட்டிகள் நடைபெறும்.
* இவற்றுள் ‘சுற்று 16’ மிகவும் பிரதானமானது. 50க்கும் அதிகமான ஐரோப்பா கழகங்கள் ஆரம்பச் சுற்றுக்களில் கலந்து கொண்டு, பின்னர் நொக்கவுட், குழு, ஸ்டேஜ் 1, ஸ்டேஜ்-2 …. இவ்வாறே பலத்த போட்டிகளில் மோதி வெற்றிபெற்றபின் ‘சுற்று 16’ க்குள் வரும்.
* ‘சுற்று 16’ இற்குள் வரும் அனைத்து கழகங்களும் உலக புகழ்பெற்ற கழகங்களாகவே அமையும்.
இந்த ‘சுற்று 16’ களில் விளையாடும் 16 அணிகள் 8 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு பிரிவுக்கும் இவ்விரு போட்டிகள் இடம்பெறும்.
* லீக் 1, மற்றையது Play Off / நொக்கவுட்.
* இதன் பின்னர் கால் இறுதிப் போட்டியில் 8 அணிகள் மோதும். ஒவ்வொரு பிரிவு அணிகளும் இவ்விரு போட்டிகளில் விளையாடும். கால் இறுதியின் இரண்டாம் சுற்று Play Off எனப்படும்.
* இதன் பின்னர் 4 அணிகள் அரை இறுதிக்குத் தெரிவு செய்யப்படும். அங்கும் இதே போல் லீக் 1, மறையது Play Off
* எனினும் இறுதிப்போட்டி (Final) ஒன்றே ஒன்றுதான் என்பதுடன் வழமையான உதைபந்தாட்ட இறுதிப்போட்டிகள் போன்றே இடம்பெறும்
* ‘சுற்று 16’ இல் இருந்து குழுக்கள் முறையிலேயே எந்த அணி, எந்த அணியுடன் மோதுவது என்பது தெரியவரும். இதனால் இறுதிப்போட்டியைத் தவிர வேறு எந்தச் சுற்றிலும் எந்த அணி, எந்த அணியுடன் அடுத்த சுற்றில் மோதும் என்பது தெரியவே தெரியாது.
* ஒவ்வொரு அணிக்கும் இரு போட்டிகள் இடம்பெறும். ஒன்று தங்களது மைதானத்திலும் (Home Game) , அடுத்த போட்டி எதிரணியின் (Away Game) மைதானத்திலும் இடம்பெறும்.
* தமது சொந்த மைதானத்தில் எதிரணி 2 கோல்களை போடுமாயின், எதிரணியின் மைதானத்தில் விளையாடும் இரண்டாவது போட்டியில் 2 கோல்களை (Away Goals) போட்டே ஆகவேண்டும்.
* இதனால் தான் இரு போட்டிகளிலும் முடிவு உதாரணமாக 3:3 என இருப்பின் கோல் விதிகளுக்கு (Aggregate) அமைவாக தண்டணை உதை வழங்காது வெற்றி, தோல்வி நிர்ணயிக்கப்படுகின்றது.
மிக சுவாரஸ்யமாக ஐரோப்பாவை கலக்கப்போகும் ஸ்பெய்ன், ஜேர்மனி அணிகளுக்காக உலக உதைப்பந்தாட்ட இரசிகர்கள் நாட்களை எண்ணிக்கொண்டிருக்கின்றனர்.



Leave a comment