ஒரு போதும் முஸ்லிம்களுக்கெதிராக நாம் செயற்படவில்லை: கோட்டபாய ராஜபக்ச

– நமது நிருபர்

Gotabaya[1]கொழும்பு: கிழக்கு மாகாணத்திலுள்ள முஸ்லிம் சிவில் சமூக அமைப்புக்களின் பிரதி நிதிகள் கிழக்கு மாகாணத்திலுள்ள ஜம் இய்யத்துல் உலமா சபையின் பிரதி நிதிகள் மற்றும் பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளன பிரதி நிதிகளை  (11.4.2013) வியாழக்கிழமை  கொழும்பிலுள்ள பாதுகாப்பு அமைச்சில் சந்தித்த போது கருத்து தெரிவிக்கையிலேயே பாதுகாப்பு செயலாளர்  கோட்டபாய ராஜபக்ச மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

இந்த சந்திப்பில் தொடர்ந்து கருத்து தெரிவித்த பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோட்டபாய ராஜபக்ச முஸ்லிம்களுக்கு எந்த ஒரு அநீதியும் இடம் பெறுவதை நாம் அனுமதிக்க மாட்டோம்.

ஹலால் தொடர்பான பிரச்சினைகள் அகில இலங்கை ஜம் இய்யத்துல் உலமா சபையுடன் பேசி சுமூகமான தீர்வுக்கு கொண்டு வந்துள்ளோம்.

முஸ்லிம்களுக்கெதிராக சிலரினால் மேற் கொள்ளப்படவிருந்த பல்வேறு எதிர்ப்பு நடவடிக்கைகளை தடுத்து நிறுத்தியிருக்கின்றோம்.

நானும் ஜனாதிபதியும் முஸ்லிம்களுக்கெதிராக செயற்படுவதாக சிலர் பொய் பிரச்சாரம் செய்கின்றனர்.

ஒரு போதும் முஸ்லிம்களுக்கெதிராக நாம் செயற்படவில்லை எந்த ஒரு அநீதியும் முஸ்லிம்களுக்கெதிராகவோ அல்லது வேறு எந்தவொரு சமூகத்திற்கெதிராகவோ இடம் பெறுவதை நாம் அனுமதிக்க மாட்டோம்.

கிழக்குக்கு வெளியே சில பிரதேசங்களில் சிறிய சில சம்பவங்கள் இடம் பெற்றன. அவற்றை நாங்கள் உடனுக்குடன் தடுத்து நிறுத்தியுள்ளோம்.

பெப்லியனில் பெஷன் பக் மீது நடாத்தப்பட்ட தாக்குதல் சம்பவம்  தொடர்பில் உடனடியாக நான் சட்ட நடவடிக்கை எடுக்கு மாறு பணித்ததுடன் அந்த சம்பவத்தில் ஈடுபட்டோரை கைது செய்து சட்ட நடவடிக்கை எடுத்துள்ளோம்.

ஜனாதிபதி சிறுவயது முதலே முஸ்லிம்களுடன் நெருக்கமாக பழகியதுடன் முஸ்லிம் நண்பர்களுடன் அதிகளவு உறவை வைத்துள்ளவர்.

ஜனாதிபதி பலஸ்த்தீனத்துடன் நெருக்கமான நட்புறவு வைத்துள்ளவர் ஜனாதிபதிக்கும் பலஸ்தீனத்துக்கும் ஆரம்பம் தொட்டே இன்று வரையும் ஒரு இறுக்கமான உறவும் பிணைப்பும் உள்ளது.

அதே போன்று எங்களுக்கு ஜெனீவாவில் முஸ்லிம் நாடுகள் செய்த உதவியை நாங்கள் என்றும் மறக்க முடியாது. பாகிஸ்த்தான் நாங்கள் கேட்கும் போதெல்லாம் உதவியது. எங்களுக்கு எப்போதும் பாகிஸ்த்தான் உதவ தயாராக உள்ளது.

முஸ்லிம்களுக்கு எந்த வொரு பிரச்சினையும் ஏற்படுவதை நாம் அனுமதிக்க மாட்டோம். முஸ்லிம்களின் பாதுகாப்பு விடயத்தில் முழுமையாக கவனமெடுத்து செயல் பட்டுள்ளோம்.

சில சிறிய சம்பவங்களையும் ஒரு சில இணைதளங்களும், குறுஞ்செய்திகளும்(எஸ்.எம்.எஸ்.) பெரிதாக்குகின்றன. நடைபெறாதா சில சம்பவங்களையும் கூட இந்த இணையதளங்களும், குறுஞ்செய்திகளும் திரித்து செய்திளை போடுகின்றன.

இந்த விடயங்களில் நாம் கவனமாக இருப்பதுடன் நீங்கள் பொறுப்புள்ளவர்கள் என்ற வகையில் உங்களின் பிரதேசங்களுக்கு சென்று விடயங்களை தெளிவு படுத்துங்கள்

முஸ்லிம்கள் அச்சப்படவேண்டிய எந்த அவசியமும் இல்லை என்பதையும் சமூகத்தின் மத்தியில் கூறுங்கள் எனவும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர்  கோட்டபாயராஜபக்ச இங்கு மேலும் தெரிவித்துள்ளார்.

இந்த சந்திப்பின் போது இராணுவ உயரதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

இதன் போது முஸ்லிம்கள் தற்போது எதிர் நோக்கியுள்ள பிரச்சினைகள் தொடர்பாகவும் முஸ்லிம் பிரமுகர்கள் எடுத்துக் கூறியுள்ளனர்.

மட்டக்களப்பு விமான நிலையத்திலிருந்து விஷேட வானூர்திமூலம் முஸ்லிம் பிரமுகர்கள் அழைத்து செல்லப்பட்டு மீண்டும் அவர்கள் மட்டக்களப்புக்கு விஷேட வானூர்திமூலமே அனுப்பப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Published by

Leave a comment