ஹலால் விடயத்தில் பொதுபல சேனா வெற்றி பெற்று அதனை கப்றுக்குள் வைத்து விட்டதால் இனி அது பற்றி பேச மாட்டோம் என சொன்னாலும் முஸ்லிம் சமூகம் ஹலால் பற்றி பேசாமல் இருக்க முடியாது!

– முஸ்லிம் மக்கள் கட்சித் தலைவர் முபாறக் அப்துல் மஜீத்

BY: FM. Farhan
BY: FM. Farhan

– பழுலுல்லாஹ் பர்ஹான்

 கொழும்பு: ஹலால் விடயத்தில் பொதுபல சேனா வெற்றி பெற்று அதனை கப்றுக்குள் வைத்து விட்டதால் இனி அது பற்றி பேச மாட்டோம் என அவர்கள் சொல்லலாம். ஆனால் அதற்காக முஸ்லிம் சமூகம் அது பற்றி பேசாமல் இருக்க முடியாது என முஸ்லிம் மக்கள் கட்சித் தலைவர் முபாறக் அப்துல் மஜீத் தெரிவித்தார். தாருள் குர்ஆனில் நடைபெற்ற ‘ஹலால் எமது உரிமை’ எனும் தலைப்பிலான கருத்தரங்கில் உரையாற்றும் போதே இவ்வாறு அவர் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்ததாவது,

 ஹலால் இலச்சினை உள்நாட்டில் நிறுத்தப்பட்டு விட்டதால் தற்போது கையிலிருக்கும் பொருட்கள் முடிவுற்றதும் முஸ்லிம் நுகர்வோர் பாரிய பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்க வேண்டி வரும் என தெரிகிறது. முற்காலங்களில் ஒவ்வொரு கிராமமும் ஒரு உலகமாக இருந்ததால் ஹலால் என்பது பிரச்சினையாக இருக்கவில்லை. இப்பொழுது முழு உலகும் ஒரு கிராமமாக மாறிவிட்டதால் பொதி பண்ணப்பட்ட உணவுகள் அதிகரித்து விட்டதால் அவை ஹலாலா என்பதை ஆராய வேண்டியுள்ளது.

 உள்நாட்டில் ஹலால் இலச்சினை வழங்குவதில்லை என கூறியதன் மூலம் ஜம்இய்யத்துல் உலமா தப்பித்துக்கொண்டாலும் இதுவரை முஸ்லிம்கள் அனுபவித்த ஓர் உரிமை அரச அணுசரணையுடன் பலாத்காரமாக பறிக்கப்பட்டிருப்பதாகவே நாம் பார்க்கிறோம். இந்த அநியாயத்திற்கு முஸ்லிம் அமைச்சர்களும், பாராளுமன்ற உறுப்பினர்களும் துணை போயுள்ளார்கள். தாங்கள் சோரம் போய்விட்டதை சமாளிக்க இவர்கள் வித விதமான அறிக்கைகளை தமிழ் ஊடகங்களில் மட்டும் விட்டுக்கொண்டிருக்கிறார்கள். அரசாங்கம் நலவு ஒன்றை செய்தால் அதில் தாங்களும் பங்காளி என கூறுபவர்கள் அரசாங்கம் கெடுதியை செய்யும் போது அதனை தடுக்காதவர்கள் என்ற வகையில் அதற்கும் இவர்கள் பங்காளிதான் என்பதை மறுக்க முடியாது.

 முஸ்லிம் மாகாணம், தென் கிழக்கு அலகு, அதிகார பரவலாக்கம் என்றெல்லாம் உரிமை பேசிக்கொண்டிருந்த முஸ்லிம் சமூகத்தை திசைதிருப்பும் இரு கோடுகள் தத்துவமே ஹலால் என்ற பிரச்சினையாகும். ஒரு பெரிய கோட்டை அதில் கைவைக்காமலேயே அதனை சிறிய கோடாக மாற்ற வேண்டுமாயின் அதற்கருகில் இன்னொரு பெரிய கோட்டை போடுவதனால் முன்னர் பெரிதாக இருந்த கோடு தானாகவே சிறிதாகி விடும். இந்த தத்துவத்தின்படியே நமது உரிமைகளை பற்றி அமைச்சர்கள் பேசாமல் இருப்பதற்காக ஹலால், அபாயா, பள்ளிவாயல் தகர்ப்பு என்பன நிகழ்ந்து கொண்டிருக்கின்றன.

 இவையெல்லாம் யாரின் பின்னணியில் நடத்தப்படுகின்றன என்பது ஆராயப்பட வேண்டும் என முஸ்லிம் காங்கிரசினதும், ஏனைய சின்ன காங்கிரஸ்களினதும் உறுப்பினர்கள் அப்பாவித்தனமாக அறிக்கைகள் விடுகின்றனர். பொது பல சேனாவுக்கும்; ஜம்இய்யத்துல் உலமா சபைக்குமிடையிலான சந்திப்புக்கள் எங்கே வைத்து நடாத்தப்படுகின்றன என்று நன்கு தெரிந்த நிலையில் இவற்றின் பின்னணியை அரசு ஆராய வேண்டும் என அரசையே கோரும் சிறு பிள்ளைத்தனத்தை அரசில் இடம் பெற்றுள்ள கட்சிக்காரர்கள் சொல்வதைக்கேட்டு ஏமாறும் மக்கள் இன்னமும் இல்லை என்பதை மக்கள் இவர்களுக்கு தெளிவு படுத்த வேண்டும்.  

ஆகவே ‘ஹலால் எமது உரிமை’ எனும் கோஷத்தை முஸ்லிம் மக்கள் கட்ச முன்னெடுத்துள்ளது. இதனை முஸ்லிம்கள் முன்னெடுப்பது கடமையும் உரிமையுமாகும். இதற்கான ஜனநாயக போராட்டத்தில் எம்மோடு இணைந்து குரல் கொடுக்க முஸ்லிம் கட்சிகளும், அமைப்புக்களும், மக்களும் முன் வரவேண்டும்.  

Published by

Leave a comment