வன்னி: வடக்கில் வாழ்ந்த முஸ்லிம்கள் வெளி மாவட்ட முஸ்லிம்களாக வன்னி மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் கூறுவது அநாகரிகத்தின் உச்ச கட்டம் என்று கடும் விசனம் தெரிவித்துள்ள வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஹூனைஸ் பாருக் இவ்வாறான அறிக்கைகளால் வடக்கில் இருந்து புலிகளினால் வெளியேற்றப்பட்ட முஸ்லிம்கள் பெரும் வேதனையடைந்துள்ளதாகவும் தெரிவித்தார்.
வன்னி மாவட்டத்தில் புலிகளால் வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களில் நானும் ஒருவன் வெளியேற்றம் எமது வாழ்வில் ஏற்படுத்திய தாக்கங்கள்இமற்றும் இழப்புக்கள் ஏராளம். வெளியேற்றத்தின் வலிகளை நாம் நன்கு உணர்வோம்.அது போல் தமிழ் சகோதரர்களின் வெளியுறே்றம் குறித்தும் அவர்களது அகதி வாழ்க்கை குறித்தும் நான் நன்கு அறிவேன்.
இவ்வாறான சூழலில் முஸ்லிம்கள் வடமாகாணத்தில் மீ்ள்குடியேற வருகின்ற போது அவர்களை வெளி மாவட்ட மக்கள் என்று அவமானப்படுத்தும் வேலைகளை வன்னி தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் மேற்கொள்ளும் பிரசாரங்கள் ஏற்றுக் கொள்ளப்பட முடியாது. வன்னி மாவட்ட அபிவிருத்தி குழுவின் தலைவர் அமைச்சர் றிசாத் பதியுதீன் அவர்களும் வடபுலத்தை சேர்ந்தவர். இவற்றையெல்லாம் மறைத்து வன்னி தமிழ் கூட்டமைப்பின் பாரர்ளுமன்ற உறுப்பினர்கள் அவர்கள் மட்டும் வன்னி மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என்று உலகுக்கு கூறிவருகின்றனர்.
புலிகளினால் வெளியேற்றப்பட்ட போது அதற்கு ஆதரவாக செயற்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன், வினோ நோகதாரலிங்கம், சிவசக்தி ஆனந்தன் போன்றவர்கள் தொடர்ந்து வடமாகாண முஸ்லிம்கள் தமது சொந்த தாயக மண்ணுக்கு வருகின்ற போது அவர்களை நிந்திக்கும் வேலையினை சில குறிப்பிட்ட ஊடகங்களை பயன்படுத்தி செய்துவருகின்றனர்.
முல்லைத்தீவு மாவட்டத்தில் புதன் கிழமை தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவுடன் ஒழுங்கு செய்யப்பட்ட ஒரு சில மக்கள் கலந்து கொண்ட ஆர்ப்பாட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேம சந்திரன் முஸ்லிம்கள் குறித்து தெரிவித்துள்ள கருத்து மிகவும் வன்மையாக கண்டிக்கப்பட வேண்டியுள்ளது. முஸ்லிம்களின் பூர்வீகத்தில் அவர்கள் வாழ வருகின்ற போது வந்தேறு குடிகளாகவும், வெளி மாவட்ட முஸ்லிம்கள் வருவதாகவும் அவர்களை ஒரு போதும் மீள்குடியேற விடமாட்டோம் என்று கூறியிருப்பது முஸ்லிம்களின் வன்மையான கண்டனத்தை உருவாக்கியுள்ளது.
அறியாதவர்கள் தெரியாதவற்றை பேச போய் தன் தலைமையில் மண்ணை போட்டு நிலைக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பின் சுரேஷ் பிரேம சந்திரன் பாராளுமன்ற உறுப்பினர் மாறியுள்ளார். முஸ்லிம்களுடைய வரலாறு தெரியாத இவ்வாறான இனவாத சக்திகளின் கெடுபிடிகளே இன்றும் தமிழ் மக்களை அச்சத்தில் ஆழத்தியுள்ளது. குறிப்பபாக முஸ்லிம்களை தமது தாயகத்தில் மீளக் குடியேறவிடாது தடுக்கும் இந்தப் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஜெனீவாவுக்கு சென்று சிறுபான்மை மக்களது உரிமைகள் பற்றி பேசுவது நகைப்புக் கிடமானது.
பாதிக்கப்பட்ட முஸ்லிம்களை அவர்களது தாயகத்தில் வாழ விடாது தொடர்ந்து தடைகளை இவர்கள் ஏற்படுத்துவார்கள் என்றால், முஸ்லிம்களாகிய நாங்களும் சில காத்திரமான நடவடிக்கைகளை எடுக்க நேரிடும் என்பதை இவ்வாறான முஸ்லிம் எதிர் சக்திகளுக்கு கௌரவமாக சொல்லி வைக்கவிரும்புகின்றேன். இலங்கை முஸ்லிம் தமது பிரச்சினைகளை தமது நாட்டுக்குள் தீர்த்துக் கொள்ளவே விரும்புகின்றனர். அவ்வாறு அதற்கு தடைகள் வருகின்ற போது அவற்றை தாண்டிச் செல்ல சர்வதேச நாடுகளின் தேவைகள் ஏற்படுமெனில் அது குறித்து உருக்கமான சில முடிவுகளை எடுக்க நேரிடுவது தவிர்க்க முடியாததொன்றாக மாறிவிடும் என்று பாராளுமன்ற உறுப்பினர் ஹூனைஸ் பாருக் கூறினார்.
![hunais-mp[1]](https://yourkattankudy.com/wp-content/uploads/2012/09/hunais-mp1.jpg?w=87&h=150)
Leave a comment