காத்தான்குடி: இலங்கையில் வறுமை மாவட்டமாக இனங்காணப்பட்டிருப்பது மாவட்ட மக்கள் உள்ளுர் உற்பத்தியில் செய்யும் அசட்டைப் போக்குத்தான் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சிப்லி பாறூக் தெரிவித்தார்.
‘திவிநெகும ஊடாக நாட்டை கட்டியெழுப்புவோம்’ எனும் தொனிப் பொருளில் மாபெரும் திவிநெகும விற்பனைச் சந்தையை இன்று புதன்கிழமை காத்தான்குடியில் புதிய காத்தான்குடி பதுறியா மைதானத்தில் ஆரம்பித்து வைத்து உரையாற்றுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.
தொடர்ந்து உரையாற்றுகையில்
இலங்கையில் எம்மாவட்டத்திலும் இல்லாதவாரு கிழக்கு மாகாணத்தில் எமது மட்டக்களப்பு மாவட்டத்தில் 16 வகையான மூலப் பொருட்கள் உண்டு. ஆனால் அவைகளை மக்கள் பயன்படுத்தப்படுவதில்லை. அந்த மூலப் பொருட்களை நாம் பயன்படுத்தினால் அனேக உற்பத்திகளை மேற்கொள்ள முடியும்.
அண்மையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் படி இலங்கை நாட்டில் மிகவும் வறுமை நிறைந்த மாவட்டமாக எமது மட்டக்களப்பு மாவட்டம் இனங்காணப்பட்டுள்ளது.

இதற்கான பிரதான காரணம் எமது மாவட்ட மக்கள் உள்ளுர் உற்பத்தியில் செய்யும் அசட்டைப் போக்குத்தான்.எமது மாவட்டத்தில் கடுமையான கஸ்டங்களை எதிர்நோக்குபவர்கள் உள்ளார்கள்.வர்களின் வறுமை, கஷ்டம் நீங்க வேண்டுமானால் உள்ளுர் உற்பத்திகளில் கவனம் செலுத்தப்பட வேண்டும்.
வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களை எமது மக்கள் ஆர்வத்தோடு கொள்வனவு செய்வதிலும் விற்பனை செய்வதிலும் ஆர்வம் செலுத்துகிறார்கள்.ஆனால் உள்ளுர் உற்பத்திகளில் எவ்வித ஆர்வமும் அக்கறையும் கிடையாது.
இதை எவ்வித ஆர்வமும் கொள்ளாது பயன்படுத்தாமைக்கான பிரதான காரணம் சரியான வழிகாட்டல்கள் இல்லை என்பதுதான். எதிர்காலத்தில் இந்த மூலப் பொருட்கள் தொடர்பில் சரியான வழிகாட்டல்களை காட்ட வேண்டும். அந்த மூலப் பொருட்களை பயன்படுத்தி உற்பத்திகளை அதிகரிக்க வேண்டும்.
அதற்கான சிறப்பான வழியாக இந்த திவிநெகும திட்டத்தினை நாம் பயன்படுத்த முடியும்.
‘திவிநெகும ஊடாக நாட்டை கட்டியெழுப்புவோம்’ எனும் தொனிப் பொருளில் நாடளாவிய ரீதியில் திவிநெகும உற்பத்திச் சந்தைகள் அரசாங்கத்தினால் செயற்படுத்தப்பட்டு வருகின்றன.
திவிநெகும பயனாளிகளின் உற்பத்திகளுக்கு சந்தை வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுப்பதற்கே இந்த வேலைத்திட்டங்கள் செயற்படுத்தப்பட்டு வருகின்றன.
ஆகவே எமது மாவட்ட மக்கள் உள்ளுர் உற்பத்திகளில் கவனமெடுத்து வறுமையை ஒழித்து செழிப்பான மாவட்டமாக மாற்றுவதற்கு முயற்சிப்போம் என கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சிப்லி பாறூக் தெரிவித்தார்.

Leave a comment