இலங்கையில் அண்மையில் முஸ்லிம்கள் மீது நடத்தப்பட்ட வன்செயல்களை இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் மிஷெல் ஜே சிசோண் அவர்கள் கண்டித்திருக்கிறார்.
இலங்கையில் வெளிநாட்டுச் செய்தியாளர்களுக்கான அமைப்பில் உரையாற்றிய அமெரிக்கத்தூதுவர் அங்கு இலங்கைக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான உறவுகள் குறித்து நீண்ட உரை ஒன்றை ஆற்றியுள்ளார். அதன் போதே அவர் முஸ்லிம்களுக்கு எதிரான தாக்குதல்கள் குறித்த தனது கருத்தை வெளியிட்டுள்ளார்.
அண்மையில் வெளியான ஜெனிவா ஐநா மனித உரிமைகள் கவுன்ஸில் தீர்மானம் மத நம்பிக்கைகளை அடிப்படையாகக் கொண்டு பாரபட்சம் காண்பிக்கப்படக் கூடாது என்பதை வலியுறுத்தியிருக்கிறது என்று கூறிய அமெரிக்கத் தூதுவர், ஆனால், அதில் பெரும் பின்னடைவு ஏற்பட்டிருப்பதாக அமெரிக்கா பார்ப்பதாகக் கூறியுள்ளார்.
முஸ்லிம் வணிக நிலையங்களின் மீதான அண்மைய தாக்குதல் அமெரிக்காவையும், பல இலங்கை மக்களையும் அதிர்ச்சியடையச் செய்திருக்கிறது என்று அவர் கூறியுள்ளார்.
இப்படியான வெறுப்பை ஊட்டும் செயல்கள் அனுமதிக்கப்படக் கூடாது என்றும் அவர் கூறியுள்ளார்.
ஊடகங்கள் மீதான தாக்குதல்கள்
அதேவேளை ஊடகங்கள் மீதான தாக்குதல்கள் இன்னமும் இலங்கையில் தொடர்வதும் தமக்கு கவலையை அதிகரித்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
பல முக்கிய செய்தியாளர்கள் நாட்டை விட்டு வெளியேறியிருக்கும் நிலையில் அண்மையில் கூட ஊடக நிறுவனங்கள் மற்றும் பணியாளர்கள் மீது தாக்குதல்கள் தொடர்வதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளை நீதிச் சுதந்திரத்தின் மீதான தலையீட்டையும் அவர் கண்டித்துள்ளார்.
இலங்கையில் நல்லிணக்கம் ஏற்படுவதற்கு சமரச பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்பட வேண்டியது அவசியம் என்று கூறியுள்ள தூதுவர், அரசாங்கம், தமிழ் தேசிசக் கூட்டமைப்புடன் பேச்சு நடத்துவது அதற்கு மிகவும் அவசியம் என்றும் கூறியுள்ளார்.
-BBC/Tamil
Leave a comment