முல்லைத்தீவில் மீண்டும் ஆர்ப்பாட்டம்

130410120658_mullaithivu_protest_624x351_bbc_nocredit[1]முல்லைத்தீவு மாவட்டத்தில் பொது மக்களின் வாழ்க்கையைச் சீரழிக்கும் வகையில் அங்கு மேற்கொள்ளப்படுகின்ற அத்துமீறிய காடழிப்பு, நில அபகரிப்பு, மீன்பிடிப்பிரதேசங்கள் அபகரிப்பு மற்றும் சட்டவிரோத முறையிலான மீன்பிடி முதலானவற்றை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், அந்த மக்களுக்கு நிரந்தர வீட்டு வசதிகள், தொழில் வாய்ப்புக்களை போன்றவற்றை ஏற்படுத்தித் தர வேண்டும் எனக் கோரியும், முல்லைத்தீவு அரச செயலகத்தின் எதிரில் புதனன்று ஆர்ப்பாட்டம் ஒன்று நடைபெற்றது.

முல்லைத்தீவு மாவட்ட பிரஜைகள் குழுவினரும், கிராம அபிவிருத்திச் சங்கங்கள், மாதர் அபிவிருத்திச் சங்கங்களின் சமாசமும் இதற்கான ஏற்பாட்டைச் செய்திருந்தன.

இந்த நிகழ்வில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான சுரேஷ் பிரேமச்சந்திரன், செல்வம் அடைக்கலநாதன், சிவசக்தி ஆனந்தன், வினோ நோகராதலிங்கம் மற்றும் தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வி.ஆனந்தசங்கரி உட்பட பல முக்கியஸ்தர்களும் பெருமளவிலான பொதுமக்களும் கலந்து கொண்டனர்.

முல்லைத்தீவு மாவட்டத்தில் மீள் குடியேற்றம் செய்யப்பட்டுள்ள மக்கள் எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகளை வெளிப்படுத்தும் வாசகங்கள் அடங்கிய சுலோக அட்டைகளையும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் தாங்கியிருந்தனர்.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு முன்னதாக இதற்கு அழைப்பு விடுத்திருந்த பிரஜைகள் குழுவின் தலைவர் துரைராஜா ரவிகரனின் வீட்டுக்குச் சென்ற படையினர், அவரை வெளியில் செல்ல வேண்டாம் என்றும் இராணுவ உயரதிகாரியொருவர் அவரைச் சந்திக்க வருவதாகவும் தெரிவித்து, அவரைத் தடுத்து வைத்திருந்தனர்.

130410120658_mullaithivu_protest_624x351_bbc_nocredit[1]

சிறிது நேரத்தின் பின்னர் அவரைச் சந்தித்த அந்த இராணுவ உயரதிகாரி, நடைபெறுவதற்கு ஏற்பாடாகியிருந்த ஆர்ப்பாட்டம் குறித்து கேட்டறிந்ததன் பின்னர் அங்கிருந்து சென்றதாகத் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து திட்டமிட்டபடி, ஆர்ப்பாட்டம் நடைபெற்று ஜனாதிபதிக்கு எழுதப்பட்ட மகஜர் முல்லைத்தீவு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபரிடம் கையளிக்கப்பட்டது.

இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்ற போது வேறுசிலருடன் சேர்ந்து முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், ஜனாதிபதியின் முல்லைத்தீவு மாவட்ட இணைப்பாளருமாகிய எஸ்.கனகரத்தினம் அரச செயலக வேலியில், அரசாங்கம் மேற்கொண்டுள்ள அபிவிருத்திப் பணிகளை விபரிக்கும் வாசகங்கள் எழுதப்பட்ட அட்டைகளை தொங்கவிட்டுக் கொண்டிருந்தனர்.

-BBC/Tamil

Published by

Leave a comment