கொழும்பு: இலங்கை முஸ்லிம்களின் பிரச்சினைகள் குறித்து மேலும் பல்வேறு அரசியல் தலைவர்களுடன் கலந்துரையாடுவதற்காக டெல்லிக்கு வருமாறு இலங்கைக்கு வருகைத் தந்துள்ள இந்திய பாராளுமன்ற உறுப்பினர்கள் அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் உயர் பீட உறுப்பினர்களுக்கு அழைப்புவிடுத்தனர்.
இன்று மாலை கொழும்பு தாஜ் சமுத்திராவில் இந்திய பாராளுமன்ற உறுப்பினர்களுடன் இடம் பெற்ற சந்திப்பின் போதே இந்த அழைப்புவிடுக்கப்பட்டுள்ளது.
அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸின் தேசிய தலைவரும், அமைச்சருமான றிசாத் பதியுதீன், வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி ஹூனைஸ் பாரூக், கட்சியின் செயலாளர் நாயகம் வை.எல்.எஸ். ஹமீட், முன்னாள் துதுவர் முஹம்மத் மஹ்ரூப் ஆகியோரும், இந்திய பாராளுமன்ற உறுப்பினர்களான பாரதீய ஜனதா கட்சியின் பேச்சாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான பிரகாஷ் ஜவாதேகர், பாராளுமன்ற உறுப்பினர் அநுரக் சின்க் தாகூர், தன்ன்ஜேய் சின்ங், பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் சுகத ரோய் ஆகியாருடன், பாராளுமன்ற உறுப்பினர்களின் ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பாளர் ஜயோத்திரி மகேத்திரா, இலங்கைக்கான இந்தியாவின் பிரதி உயர் ஸ்தானிகர் பீ. குமரன் ஆகியோரும் இந்த கலந்துரையாடல்களில் கலந்து கொண்டனர்.
சுமார் ஒன்றரை மணித்தியாலம் இடம் பெற்ற இந்த சந்திப்பில், தற்போதைய இலங்கையின் போருக்கு பிந்திய நிலைமைகள் குறித்து அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் றிசாத் பதியுதீனினால் தெளிவுபடுத்தப்பட்டதுடன், வடக்கில் இருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களின் தற்போதைய மீள்குடியேற்றத்தின் காணப்படும் தடைகள் புள்ளி விபரங்களுடன் இங்கு விளக்கமளிக்கப்பட்டது.
குறிப்பாக இலங்கையில் தமிழ் பேசும் ஒரே சமூகம் என்ற வகையில் தமிழ்-முஸ்லிம் மக்களுக்கிடையில் எவ்வித பிரச்சினைகளும் இல்லையென்பதை இந்திய பாராளுமன்ற உறுப்பினர்களின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டதுடன், இம்மக்களுக்கிடையில் சில அரசியல்வாதிகளும், மதவாதிகளும் பிரச்சினைகளை ஏற்படுத்தும் வேளைகளை செய்வதாகவும் சுட்டிக்காட்டப்பட்டது.
தற்போதைய முஸ்லிமக்ளின் மீள்குடியேற்ற சூழலில் இம்மக்களுக்கு உதவுவதற்கு அரச சார்பற்ற நிறுவனங்களோ, சர்வதேச அமைப்புக்களோ முன்வராமை குறித்தும் பாராளுமன்ற உறுப்பினர்களின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டது.
இந்த சந்திப்பில் இந்திய பாரளுமன்ற உறுப்பினர்கள் மிகவும் ஆர்வத்துடன் காணப்பட்டதுன், இலங்கையில் முஸ்லிம்களின் மீள்குடியேற்றப் பிரச்சினை குறித்து தாங்கள் அறிந்திருக்கவில்லையென்றும், இதனை அறிந்து கொள்ள தங்களுடனான சந்திப்பு வழியினை ஏற்படுத்தியுள்ளதாக சுட்டிக்காட்டினர்.
பல்வேறு சந்தரப்பங்களில் இலங்கை முஸ்லிம்களின் பிரச்சினைகள், தொடர்பில் சர்வதேச நாடுகள், மற்றும் அமைப்புக்களின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்ட போதும், அவை கவனத்தில் எடுத்துக் கொள்ளப்படவில்லை, அதே வேளை இலங்கைக்குள் காணப்படும் பிரச்சினைகளை தாங்களாகவே பேசி தீர்த்துக் கொள்வதற்கான சந்தர்ப்பம் காணப்படுவதை மையப்படுத்தியே, இம்மக்களது மீள்குடியேற்றம் தொடர்பான பிரச்சினைகளை சர்வதேச மயப்படுத்தவில்லையென்று அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸின் பிரதி நிதிகள் எடுத்துரைத்தனர்.
அதே வேளை சிறுபான்மையாக வாழும் ஒரு சமூகத்திற்கு எதிராக மேற்கொள்ளப்படும் பிரச்சினைகள் உற்று நோக்கப்பட வேண்டியதொன்று என்று இந்திய பாராளுமன்ற உறுப்பினர்கள் இங்கு கருத்துரைத்தனர்.தாங்கள் அறிந்து கொண்ட இந்த விடயங்களை இந்தியா திரும்பியதும், சக பாராளுமன்ற உறுப்பினர்களின் கவனத்திற்கு கொண்டுவரவுள்ளதாக தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர்கள், இன்றைய சந்திப்பின் தொடராக அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் கட்சி பிரதி நிதிகள் குழுவொன்றை டில்லிக்கு வருகைத் தருமாறும் அழைப்பும் விடுத்தனர்.




Leave a comment