தெஹ்ரான்: தென்மேற்கு ஈரானில் நேற்றுமாலை ஏற்பட்ட பூமியதிர்ச்சியில் பலியானோர்களின் எண்ணிக்கை 30ஆக அதிகரித்துள்ளது.
ஆயிரக்கணக்கான மக்கள் கட்டட இடிபாடுகளுக்குள் சிக்குண்டு இருப்பதாகவும், இதுவரை 850 பேர்கள் காயங்களுடன் மீட்கப்பட்டிருப்பதாகவும் தெஹ்ரான் அறிவித்திருக்கின்றது. இரவு வேளையில் போதிய வெளிச்சமின்றி மீட்புப் பணிகள் மெது மெதுவாக மேற்கொண்டு வருவதாக ஈரானின் சர்வதேச செம்பிறைச் சங்கம் தெரிவித்திருக்கின்றது.
நேற்று ஈரான் நேரப்படி மாலை 16:22 மணிக்கு நில அதிர்வு ஏற்பட்டதாகவும் கட்டடங்கள் இடிந்து புகைமண்டலங்கள் தோன்றியதாகவும் மக்கள் தெரிவித்தனர்.
ஈரானின் ‘வளைகுடாவின் துறைமுக நகரம்’ என அழைக்கப்படும் ககி நகரில் 6.3 அதிரிவில் 10 கி.மீ ஆழத்தில் இவ் அதிர்வு ஏற்பட்டிருந்தது. புசெய்ர் எனும் இடத்தில் இருக்கும் ஈரானின் தென் மேற்கில் இருக்கும் ஒரே ஒரு அணுசக்தி நிலையத்துக்கு 90 கி.மீ. தொலைவில் இப் பூமியதிர்வு இடம்பெற்றிருந்தது. எனினும் அணுசக்தி நிலையத்துக்கு எவ்வித பாதிப்புக்களும் ஏற்படவில்லை என தெஹ்ரான் உறுதிசெய்ததை அமெரிக்க செய்தி ஊடகங்களும் மெய்ப்பித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
இதுவரை 700 வீடுகள் இடிந்து வீழ்ந்துள்ளதாகவும் 200 குடும்பங்கள் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் அங்கிருந்துவரும் தகவல்கள் உறுதிப்படுத்தி இருக்கின்றன.
இவ் அதிர்வுகள் வளைகுடா நாடுகளான டுபாய், அபூதாபி, பஹ்ரைன் உட்பட இன்னும் சில வளைகுடா நாடுகளில் 5.1க்கும் குறைவான அதிர்வுகள் உணரப்பட்டதாகவும் உறுதிசெய்யப்பட்டிருக்கின்றன.
இதற்கிடையில் நேற்று ஈரானில் ஏற்பட்டிருந்த 6.3 அதிர்வை தெஹ்ரான் பல்கலைக்கழகம் 6.1ஆக பதிவுசெய்திருக்கின்றது. 2003ல் ஈரானில் ஏற்பட்டிருந்த பாரிய பூமியதிர்வில் 25,000 இற்கும் அதிகமான மக்கள் பலியாகி இருந்ததும் குறிப்பிடத்தக்கது.
![_66906677_iran_earthquake_624_3[1]](https://yourkattankudy.com/wp-content/uploads/2013/04/66906677_iran_earthquake_624_31.gif?w=150&h=83)
![_66906677_iran_earthquake_624_3[1]](https://yourkattankudy.com/wp-content/uploads/2013/04/66906677_iran_earthquake_624_31.gif?w=624&h=348)
![_66911366_earthquake[1]](https://yourkattankudy.com/wp-content/uploads/2013/04/66911366_earthquake1.jpg?w=304&h=304)
Leave a comment