கொழும்பு: கடந்த சில வாரங்களாக மட்டக்களப்பில் தமிழ் முஸ்லிம் உறவை சீர்குழைக்கும் வகையில், துவேசத்தனமான வார்த்தைகளைப் பிரயோகித்து முஸ்லிம்களை எதிர்ப்பதற்காக தமிழ் மக்களை திசைதிருப்பும் அநாமோதய துண்டுப்பிரசுரங்களை தபால் மூலமாக சில விசமிகள் அனுப்பி வருகின்றனர்.
முப்பது வருட கால யுத்தத்தை தனதாக்கி நரவேட்டையாடி ருசித்து மகிழ்ந்த மனித இரத்தங்களை மீண்டும் இந்நாட்டில் விதைத்து, அரசியல் இலாபம் தேடுவதற்கு சிலர் முன்வந்திருப்பது இதன் மூலம் தெட்டத்தெளிவாகின்றது.
நகமும் சதையும் என்ற பிணைப்பில் அக்காலம் தொட்டு இக்காலம் வரை மொழியால் ஒன்றிணைந்து சகோதரத்துவமாக வாழும் கிழக்கு தமிழ் முஸ்லிம் உறவுக்கு நிகர் வேறொன்றுமில்லை!
இந்நாட்டில் சமயத்தைக் கடைப்பிடித்து மக்களை நெறிப்படுத்தவேண்டிய பௌத்த பிக்குகளில் சிலரை திசைதிருப்பி ஓர் இன வெறியாட்டத்தை இலங்கையில் மீண்டும் ஏற்படுத்தி, அவ்வெறியாட்டத்தில் குளிர் காய பலர் வைத்தகண் வாங்காமல் சந்திகளில் காத்து கிடக்கின்றனர்.
இவ்வாறிருக்க, அரசாங்கத்துக்கு சாதகமாகச் செல்லும் முஸ்லிம்கள் என்ற ஓர் கணிப்பிலும், இவர்கள் ஜெனீவா பிரேணைக்கு இலங்கை அரசுக்கு ஆதரவு வழங்கி வந்தமைக்கும், அது மாத்திரமன்றி உலக முஸ்லிம் நாடுகள் இலங்கையை ஆதரித்திருந்ததையும் கருத்திற்கொண்டு, மேற்குலகின் சிற்சில சில்லரை போராட்டக்காரர்களால் மட்டக்களப்பு இளைஞர்கள் சிலர் தூண்டப்பட்டிருக்கின்றனர் என்பது தெட்டத்தெளிவாக எடுத்தியம்புகின்றது.
என்னதான் பொறாமைத்தனத்தில் இவ்வாறான அநாமோதய கடதாசிகளையோ அல்லது துண்டுப்பிரசுரங்களையோ அனுப்பி வைத்தாலும், இவர்களின் சமூக விரோதச் செயல்களுக்கு தமிழ் மக்கள் தலைசாய்க்கவில்லை.
எனவே நாங்கள் இரு சமூகமும் ஒற்றுமையாக குறிப்பாக மட்டக்களப்பு மாவட்டத்தில் வாழ்ந்து வருகிறோம். ஒவ்வொரு விழாவுக்கும் இன, மத வேறுபாடின்றி அனைவரும் அழைக்கப்பட்டு, கௌரவிக்கப்படுகின்றனர். மரியாதைகளையும் அவ்வூர் மக்கள் மக்கள் அதிதிகளுக்கு வாரி வழங்குகின்றனர். இதைவிடவும் திருமண வீடுகள், விருந்தோம்பல், மரண வீடுகள், சமரச சபைகள், சர்வமத அமைப்புக்கள் என்றும் எங்களின இரு சமூகத்தின் பிரதிபளிப்புக்களும் வெளிக்காட்டப்படுகின்றன.
இவ்வாறான ஓர் அழகிய ஒற்றுமையின் சூழழை தாங்கிக்கொள்ள முடியாத வெளிநாட்டு சில்லரைகளால் அநாமோதய பிரசுரங்களை வெளியிடுட்டு, மீண்டும் இரத்த ஆரை ஓடவைப்பதற்கு முயற்சிக்கின்றனர். எப்படி இருந்தாலும், மக்கள் உணர்ச்சிவசப்பட்டு விடுவார்கள் என்று இவர்கள் எண்ணக் கூடாது!
தமிழ் நாட்டில் தூண்டப்படுகின்ற கலவரங்கள் போன்று அறியாமையால் இங்கு தூண்டப்பட முடியாது! ஏனெனில் தமிழ்நாட்டு தமிழர்கள் இலங்கைத் தமிழர் பிரச்சினைகளை செய்திகளாகப் படித்தவர்கள் அவர்கள். ஆனால் இந்நாட்டில் வாழும் மூவின சமூகங்களும் உயிர்நீத்து, காயப்பட்டு, கட்டிவளர்த்த உறவுகள் இவை! இவைகள் உணர்வுகளால் பிண்ணப்பட்டிருக்கின்றன.
அதனால் மீண்டும் ஓர் இருள் சூழ்ந்த இரத்த வெறிக்குள் செல்வதற்கு மனிதாபிமானமுள்ள எந்த ஒரு சிங்களவனோ, தமிழனோ, முஸ்லிமோ அல்லது கிறிஸ்டியனோ மீண்டும் இந்த மண்ணில் இடமளிக்கமாட்டான் என்பதை சில்லரைக் காசுகளுக்கு தூதுபோபவர்கள் சிந்திக்கவேண்டும்.
குறிப்பு: யாரையும் புண்படுத்தும் நோக்கில் எழுதப்பட்டதல்ல! இவர்கள் யார் என்பதை வெளிக்கொணர்வதற்காக எழுதப்பட்டது என்பதை வாசகர்கள் கருத்திற்கொள்க!

Leave a comment