
பழுளுல்லாஹ் பர்ஹான்
காத்தான்குடி: காத்தான்குடி சமூக மதிப்பீட்டுக்கான அமைப்பு (OSA) காத்தான்குடியில் கல்வியலாளர்கள் நிறைந்த மண் என்ற விரிந்த வரலாற்றுப் பதிவை எட்ட வேண்டும் என்ற கனவுடன் கல்விக்கான பல ஊக்குவிப்புத் திட்டங்களை தொடர்சியாக செயல்படுத்தி வருகின்றது. இந்த அடிப்படையில் க.பொ.த (சா.த) பரீட்சையில் எமது பிரதேசத்தினைச் சேர்ந்த பல மாணவ மாணவிகள் மிகவும் சிறந்த முறையில் பெறுபேறுகளை பெற்றதையிட்டு மிகவும் மகிழ்ச்சி அடைகின்றோம்.
சிறந்த பெறுபேறுகளை ஈட்டி எமது மண்ணுக்கும், சமூகத்திற்கும் பெருமையினை பெற்றுத்தந்த மாணவச்செல்வங்களுக்கு பாராட்டுதல்களைத் தெரிவித்துக் கொள்வதோடு விஷேடமாக மீராபாலிகா மகளிர் மகா வித்தியாலய (தே.பா.) அதிபர் மற்றும் மாணவர்களின் கற்றல் நடவடிக்கைகளில் மிகுந்த சிரத்தை எடுத்து தன்னலம் பாராது பாடுபடுகின்ற ஆசிரிய ஆசிரியைகளுக்கும் எமது மனமார்ந்த பாராட்டுக்களையும் நன்றிகளையும் சமர்ப்பிக்கிறோம்.
இந்த வளர்ச்சி எதிர்காலத்தில் எமது முஸ்லிம் சமூகத்தை வர்த்தகச் சமூகம் என்ற பட்டியலில் இருந்துநீக்கி கல்விச் சமூகம் என்ற கனவை வென்றெடுத்து முழுநாட்டுக்கும் கல்வியில் முன்மாதிரியான ஊராக திகழும் என்பது எமது பிராத்தனையுடன் கூடிய எதிர்பார்ப்பாகும். எல்லாம் வல்ல இறைவன் அருள் புரிய வேண்டும்.
முஸ்லிம் சமூகத்தின் கல்வி எழுச்சியில் அரும்பாடு பட்ட எமது சமூகத்தின் மூத்த தலைவர் மர்ஹூம் எம். எச். எம். அஷ்றப் அவர்கள் முஸ்லிம்கள் இந்தநாட்டில் வலிந்து வலிந்து நலிந்து வாழ்கின்ற சமூகமாக அல்லாது சகல இன மக்கள் முன்னிலையிலும் நிமிர்ந்த முதுகெலும்புடன் வாழ வேண்டும் என்பதற்காக காலத்தால் காய்ந்து போகாத தென்கிழக்கு பல்கலை கழகத்தை பெற்றுத் தந்தார்இதேபோன்று மர்ஹூம் டாக்டர் பதியுத்தீன் மஹ்மூத் அவர்களும் சமூகத்தில் தகைமையுடையோரை இனங்கண்டு ஆசிரிய தொழில்களை அள்ளி வழங்கி கல்வியின்பால் உற்சாகமூட்டினார்.
இவ்வாறு கல்விக்காக எமது தலைவர்கள் செய்த தொண்டுகள் சமூகத்தின் நீண்ட இலக்கை நொக்கி சென்று கொண்டு இருக்கின்றன. எனவே இன்றைய தலைவர்களும் வெறுமனே அபிவிருத்தியோடு நின்று எல்லைக் கற்களை பதித்து விடாமல் கல்விக்கு இவ்வாறான தூர நோக்கான இலக்குகளை நோக்கி பயணிப்பதன் மூலமே எதிர்காலத்தில் குட்டுகளுக்கெல்லாம் நமது சமூகம் குனிந்து கொடுப்பதனை தவிர்க்க முடியும்.
Leave a comment