நபியவர்களின் பலதார மணம்

நபி ஸல்லால்லாஹு அலைஹிவஸல்லம் 11 பெண்களை மணம் முடித்தார்கள். அவர்கள் அனைவரும் முஃமீன்களின் தாய்மார்கள் என்ற சிறப்புப் பெயர் பெற்று விளங்குகிறார்கள். அவர்களில் ஒன்பது மனைவியர்கள் உயிருடன் இருக்கும் நிலையில் நபியவர்கள் மரணித்துவிடுகிறார்கள்.

நபியவர்களுக்கும் இருந்த மகத்தான மாண்பால் உயர்ந்த அந்தஸ்தால் அவர்களும் உயர் இடத்துக்குரியவர்களாக கருதப்படுகிறார்கள். நபியவர்கள் மணம் முடித்த பெண்களில் பெரியவர்கள், விதவைகள், தலாக் சொல்லப்பட்டவர், பலயீனமானவர் என பலருமிருந்தனர். இவர்களில் கன்னிப் பெண்ணென்று ஆயிஷா (ரழி) அவர்கள் மட்டுமே இருந்தார்கள்.

நபியவர்கள் பல பெண்களை மணமுடித்தது மட்டுமன்றி, எல்லோரையும் ஒரே நேரத்தில் வைத்திருந்தது நீதத்திற்கு உதாரணமாக அமைகிறது. ‘நபியவர்கள் பயணமொன்றை ஆரம்பித்தால் தனது மனைவிமார்களுக்கிடையில் துண்டு போடுவார்கள் அவர்களில் எவர் பெயர் தெரிவாகிறாரோ அவருடன் பயணத்தை மேற்கொள்வார்கள். அவ்வாறே அவர்களில் ஒவ்வொருவருக்கும் ஒரு நாள் எனவும் பங்கிட்டு கொள்வார்கள். (நூல் திர்மிதி)

நபியவர்களின் நீதியைப் பற்றி அனஸ் (ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். நபிகளாருக்கு ஒன்பது மனைவிமார்கள் இருந்தார்கள். அவர்களுக்கிடையில் நாட்களை பங்கிட்டிருந்தார்கள். முதல் மனைவியின் நாள் முடிந்துவிட்டால் ஒன்பதாம் மனைவியின் நாள் முடியும் வரை அம் மனைவியிடம் செல்ல மாட்டார்கள்.

நபியவர்கள் எந்த வீட்டுக்கு வருகிறார்களோ அங்கே எல்லா மனைவிமார்களும் ஒன்று கூடுவார்கள். ஒரு முறை நபியவர்கள் ஆயிஷாவின் வீட்டில் இருக்கும் போது, ஸைனப் (ரழி) அவர்கள் வரவே அவரிடம் நபியவர்கள் தனது கையை நீட்டினார்கள். அப்போது இது ஸைனப் என ஆயிஷா (ரழி) அவர்கள் கூற நபியவர்கள் தனது கையை எடுத்துக் கொண்டார்கள். (நூல் : முஸ்லிம்)

நபியவர்களுக்கு அல்லாஹ்வின் உதவி இல்லையெனில் இம்மகத்தான வீடு இவ்வாறு அமையப் பெற்றிருக்காது. இந் நபியவர்கள் தனது இறைவனுக்கு சொல்லாலும், செயலாலும், நன்றி செலுத்துபவர்களாக இருந்தது மட்டுமன்றி, அல்லாஹ்வின் கட்டளையான ‘(நபியே) உம் குடும்பத்தினரைத் தொழுது வருமாறு நீர் கட்டளையிடுவீராக! (தொழுகையின் மீது) நீர் பொறுமையும், உறுதியும் கொண்டிருப்பீராக! நாம் உம்மிடம் உணவு கேட்கவில்லை. ஆனால் உமக்கு உணவை நாமே கொடுக்கிறோம். இறுதியாக நல்ல நிலை இறைபக்தியுடையோருக்குத் தான் (அல்குர்ஆன் 13 : 132) என்ற வசனத்தை எடுத்து செயல்பட்டவர்களாக தனது மனைவிமார்களையும் வணக்கத்திற்கு தூண்டுபவர்களாகவும் இருந்தார்கள்.

‘நபியவர்களின் படுக்கையில் நான் குறுக்கே படுத்திருக்கும் நிலையில் நபி (ஸல்) அவர்கள் தொழுவார்கள், என்னையும் தொழுமாறு எழுப்பிவிடுவார்கள்’ என ஆயிஷா (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (நூற்கள் : புகாரி, முஸ்லிம்)

கணவன் மனைவிமார்களுக்கிடையில் பிரிவு ஏற்படாத வண்ணம் இருக்க வேண்டும் என்பதற்காக இரவு வணக்கத்தின் போது ஒருவருக்கொருவர் உதவியாக இருக்கும்படி நபி (ஸல்) அவர்கள் தூண்டியிருகிறார்கள்.

அபூ ஹுரைறா (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள் : ‘இரவில் தானும் நின்று தொழுது, தனது மனைவியையும் எழுப்பி, அவளும் தொழுகிறாள், அல்லது மறுத்தால் அவள் முகத்தில் கணவன் நீரைத் தெளித்து எழுப்பிவிடும் கணவனுக்கு அல்லாஹ் ரஹ்மத் அருள் புரிகிறான். இன்னும் இரவில் தானும் நின்று வணங்கி தனது கணவனையும் எழுப்பி, அவனும் தொழுகிறான், அல்லது எழும்ப மறுத்தால் அவன் முகத்தில் நீரைத் தெளித்து விடுகிறாளே அப்பெண்ணுக்கும் அல்லாஹ் அருள்புரிகிறான்’ என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூற்கள் : புகாரி, முஸ்லிம்)

ஒரு முஸ்லிமின் பூரணத்துவம், அவன் தனது மார்க்கத்தைப் பற்றிப் பிடிப்பதில் உள்ளது. தனது உள்ளம் சுத்தமாக இருக்க தனது வெளி அடையாளங்களையும் செயற்பாடுகளையும் முறையாக வைத்துக் கொள்ள வேண்டும். நபி (ஸல்) அவர்கள் உள்ளம் பரிசுத்தமானவர்களாக, உடல் தூய்மையானவர்களாக நறுமணம் தரக் கூடியவர்களாக, பல் துலக்குவதை விரும்பி அதனை தன் சமூகத்துக்கு கட்டளையிடுபவர்களாக இருந்தார்கள். தான் என் சமூகத்தினருக்கு கஷ்டம் கொடுக்கவில்லையெனில் ஒவ்வாரு தொழுகை நேரத்திலும் பல் துலக்கும்படி கட்டளையிட்டிருப்பேன்’ என நபியவர்கள் கூறினார்கள். (நூல் : அஹ்மத்)

நபி (ஸல்) அவர்கள் தூக்கத்திலிருந்து எழுந்தால் பல் துலக்கிக் கொள்வார்கள். நபியவர்கள் தன் வீட்டிற்குள் நுழைந்தால் எதனை ஆரம்பிப்பார்கள் என நான் ஆயிஷா (ரழி) அவர்களிடம் கேட்டேன், ‘பல்துலக்குவதைக் கொண்டு ஆரம்பிப்பார்கள் என பதிலளித்தார்கள். (நூல் : முஸ்லிம்) நபியவர்கள் தன் வீட்டுக்குள் நுழைவதில் கூட எவ்வளவு அழகு அல்லாஹ்வின் பெயரைக் கொண்டு நுழைந்தோம். அவர் பெயர் கொண்டு வெளியேறினோம். அவன் மீதே சகல பொறுப்புக்களையும் விடுகிறோம் எனக் கூறிக் கொண்டு தனது குடும்பத்தாருக்கு ஸலாம் கூறுவார்கள். (நூல் : முஸ்லிம்)

சுத்தத்துடனும், ஸலாத்துடனும் நீர் வீட்டில் நுழைவதைக் கண்டு உங்கள் வீட்டார் வாழ்த்துக் கூறி வரவேற்கட்டும். இந் நடைமுறையை ‘சுன்னத்துத் தானே’ என விளையாட்டாக, பழிப்பாக எடுத்தவர்களைப் போல் நீங்கள் ஆகிவிடாதீர்கள்!

-தினகரன்

Published by

Leave a comment