த.தே. கூட்டமைப்பும், மு.காவும் அரசியல் வேறுபாடுகளை மறந்து செயற்பட வேண்டும் – ஹாபீஸ் நஸீர் அஹமட்

– பழுளுல்லாஹ் பர்ஹான்

BY: FM. Farhan
BY: FM. Farhan

கொழும்பு: தமிழ் தேசியக் கூட்டமைப்பும், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸூம் அரசியல் வேறுபாடுகளை மறந்து தமிழ்-முஸ்லிம் சமூகங்களுக்கிடையிலான நல்லுறவைக் கட்டியெழுப்புவதற்கான நடவடிக்கைகளை உடனடியாக ஆரம்பிப்பது அவசியம் என்று கிழக்கு மாகாண விவசாய, கால்நடை உற்பத்தி, சிறுகைத்தொழில் அபிவிருத்தி, மீன்பிடி மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதித் தலைவருமான ஹாபீஸ் நஸீர் அஹமட் விடுத்துள்ள செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

 மேலும் அவர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது,

இலங்கையில் குறிப்பாக வடக்கு கிழக்கில் தமிழ் மக்களும், முஸ்லிம் மக்களும் ஆரம்ப காலம் தொட்டு அண்ணன்-தம்பி உறவையே பேணி வந்து இருக்கின்றனர். இரு சமூகத்தினரும் ஒரே மொழியைத் தாய்மொழியாகக் கொண்டவர்கள். அம்மொழியிலேயே சிந்தித்து, செயற்படுபவர்கள். இந்த இரு சமூகத்தினரும் பிட்டும் தேங்காய்ப்பூவும் போன்று வாழ்ந்து வந்திருப்பவர்கள்.

 தமிழர்களுக்காக முஸ்லிம்களும், முஸ்லிம்களுக்காக தமிழர்களும் உதவியும் ஒத்துழைத்தும் வாழ்ந்து வந்துள்ளனர். குறிப்பாக புத்தளம் ஜூம்ஆ பள்ளிவாசலில் முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்ட போது அதற்காகப் பாராளுமன்றத்தில் குரல் எழுப்பியது தமிழ்த் தலைவர்கள் தான். இவ்வாறு இரு சமூகத்தவர்களுக்குமிடையிலான நல்லுறவையும், ஒற்றுமையையும் வெளிப்படுத்தக் கூடிய நிறைய உதாரணங்கள் உள்ளன.

 என்றாலும் தமிழ் மக்களின் அரசியல் போராட்டம் ஆயுதமயமானதைத் தொடர்ந்து இரு சமூகத்தினரதும் நல்லுறவையும், ஒற்றுமையையும் சீர்குலைக்கக் கூடிய சூழ்ச்சிகளும், சதிகளும் முன்னெடுக்கப்பட்டன. அதனால் சதியாளர்கள் பயனடைந்தார்கள். இரு சமூகத்தவர்கள் மத்தியிலும் ஐயங்களும், வீணான சந்தேகங்களும் உருவாகின. இதன் விளைவாகப் பலர் பாதிக்கப்பட்டிருக்கின்றார்கள். அவை மறுக்கவோ மறைக்கவோ முடியாத உண்மைகள். என்றாலும் இரு சமூகத்தவர்களும் மீண்டும் பழைய உறவு நிலைக்கு திரும்ப வேண்டும். அவர்கள் தொடர்ந்தும் தூரமாகி இருக்க முடியாது.

 ஆகவே இரு சமூகங்களுக்கிடையிலான ஒற்றுமையையும், ஐக்கியத்தையும், புரிந்துணர்வையும் மீண்டும் கட்டியெழுப்புவதற்கான நடவடிக்கைகளை த.தே.கூட்டமைப்பும், ஸ்ரீ.மு.கா.வும் அரசியல் பேதங்களுக்கு அப்பால் ஒன்றுபட்டு உடனடியாக ஆரம்பிக்க வேண்டும். இதற்கான கலந்துரையாடல்களை அடிமட்டத்திலிருந்து ஆரம்பிப்பது அவசியம். மொழி, கலை, கலாச்சாரம், பண்பாடு என்பவற்றை அடிப்படையாகக் கொண்டு இப்பணிகளை ஆரம்பிக்க முடியும். இவ்விடயத்தில் இரு சமூகங்களினதும் அரசியல் தலைவர்கள் கவனம் செலுத்துவது அவசியம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

Published by

Leave a comment