அக்குறணையில் அமைச்சர் றவூப் ஹக்கீம்!
புதிய இனவாதக் குழுக்களின் தோற்றம் இந்நாட்டை மீண்டும் அழிவுப் பாதைக்கு இட்டுச் செல்லும். கடந்தகால வரலாற்றை சிலர் மறந்த நிலையில் செயற்படுவது கவலை தரும் விடயமென நீதி அமைச்சர் றவூப் ஹக்கீம் தெரிவித்தார்.
கண்டி ,ஜம்புகஹபிட்டிய என்ற இடத்தில் உள்ள மூனமலே ஸ்ரீ போதி ருக்காராம விகாரை அறநெறிப் பாடசாலையில் இடம்பெற்ற வைபவம் ஒன்றிலே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது :- பெளத்த சாசனத்தை பாதுகாப்பதாகக் கூறிக்கொண்டு குரோதத்தையும், வெறுப்பையும் வளர்ப்பவர்கள் இந்த நாட்டிற்கு சாபக் கேடாகும் என மகாநாயக்க தேரர்கள் கூறியுள்ளனர்.
அவ்வாறான தீய சக்திகளுக்கு தமது ஆசீர்வாதம் அல்லது அனுமதி வழங்கப்படமாட்டாது என்று மதிப்பிற்குரிய மகாநாயக்க தேரர்கள் தெரிவித்துள்ளார்கள்.அதேபோல் பல்லின மக்கள் வாழும் இந்த நாட்டில் வேறுபட்ட சமயங்களை பின்பற்றுவோர் இன, மத, மொழி பேதத்திற்கு அப்பால் சென்று ஒற்றுமையுடன் நாட்டைப் பாதுகாக்க வேண்டும் என நாயக்கத் தேரர் ஒருவர் இங்கு தெரிவித்தார்.
இக்கருத்து என்னை மிகவும் கவர்ந்துள்ளது.இலகுவாக மேற்கொள்ள வேண்டிய பல பணிகள் இன்று கடினமாகிவிட்டன. நகத்தினால் கிள்ள வேண்டியதை கோடரியால் வெட்டும் நிலை தோன்றி யுள்ளது.இது காலவரை நாம் இன, சமய, குரோதங்களை மறந்து அமைதியாக வாழ்ந்து வந்தோம். யுத்தத்தின் பின் அமைதிச் சூழல் ஏற்பட்டு நாடு அபிவிருத்தியை நோக்கிச் செல்லும்.
இவ்வேளை சில தீய சக்திகள் அதனை அழிக்கும் முயற்சியில் இறங்கியுள்ளன. இதனை தொடர்ந்து வளரவிட அனுமதிப்பது நாட்டை வீழ்ச்சியில் தள்ளி விடும்.தற்போது இனங்களுக்கும் சமயங்களுக்கும் இடையே பிரச்சினைகளைத் தோற்றுவிக்கும் ஒரு சாரார் வெளிக்கிளம்பியுள்ளனர்.
கடந்த 30 வருடங்களாக இந்நாடு அழிவை நோக்கிச் சென்றதை சிலர் மறந்து விட்டனர் போல் தெரிகிறது. எல்லாச் சமயத்தினருக்கும் தமது சமய கலாசாரங்களைப் பின்பற்ற வசதிகளையும் பாதுகாப்பையும் வழங்க வேண்டியது அரசின் கடமையாகும்.
அண்மையில் பெபிலியான என்ற இடத்தில் முஸ்லிம் வர்த்தக ஆடை நிறுவன களஞ்சியசாலை தாக்கப்பட்ட சமயம் இரவு முழுவதும் எனக்கு தொலைபேசி அழைப்புக்கள் வந்தன.வெறுப்பு, குரோதம், வைராக்கியம் என்ற அடிப்படையில் ஒரு குழு செயல்படும்.
அதேநேரம் சிறுபான்மையினத்தவரான என்னை ஒரு பெளத்த சமயப் பாடசாலையின் விழாவிற்கு பிரதம அதிதியாக அழைத்து ஒரு முன் மாதிரி காட்டப்பட்டுள்ளது. இவ்வாறான விழாக்கள் இனங்களிடையே புரிந்துணர்வை வளர்க்க உதவும் எனவும் அமைச்சர் றவூப் ஹக்கீம் தெரிவித்தார்.
– அரசாங்க தகவல் திணைக்களம்

Leave a comment