அம்பாறை ஹாடி உயர் தொழில் நுட்பவியல் நிறுவன வளாகத்தில் நான்காவது நாளாக நடைபெற்றுவரும் தேசத்திற்கு மகுடம் தேசிய அபிவிருத்திக் கண்காட்சியை பார்வையிட நேற்றைய தினம் மாத்திரம் ஐந்து இலட்சத்திற்கும் அதிகமான மக்கள் வருகை தந்திருந்தனர்.
இதற்கமைய கடந்த நான்கு நாட்களுக்குள் 10 இலட்சம் பேர் கண்காட் சியை பார்வையிட வருகை தந்துள்ளதாக கண்காட்சி நடவடிக்கை செயலகம் தெரிவித்தது. நேற்றைய தினம் விடுமுறை தினம் என்பதால் காலை முதல் பெரும் எண்ணிக்கையிலான மக்கள் கண்காட்சியை பார்வையிட வருகை தந்த வண்ணம் இருந்தனர். திடீரென பெருந் திரளான மக்கள் ஒரே நேரத்தில் வருகை தந்த போதிலும், எந்தவித தங்கு தடையின்றி அவர்கள் கண்காட்சியை பார்வையிடுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததுடன் அவர்களுக்கு தேவையான அத்தியாவசிய வசதிகளும் செய்யப்பட்டிருந்தன.
பாடசாலை மாணவர்கள் பல நாட்கள் பயணம் சென்று பார்வையிடக்கூடிய பல விடயங்கள் சுமார் 120 ஏக்கர் நிலப்பரப்பில் ஒரே நாளில் கண்டுகளிக்கவும், பல விடயங்கள் தொடர்பான தகவல்களை பெற்றுக்கொள்ளக் கூடிய வகையில் இம்முறை திட்டமிட்ட அடிப்படையில் காட்சிக் கூடங்கள் அமைக்கப்பட்டுள்ளதுடன், அவர்களுக்குத் தேவையான துண்டுப் பிரசுரங்கள் விநியோகங்கள் மும்மொழியிலும் விநியோகிக்கப்பட்டன.
நேற்றைய தினம் தமிழ், முஸ்லிம், சிங்களவர்கள் என சகல இன மக்களும் கண்காட்சியை பார்வையிட கூட்டம் கூட்டமாக வருகை தந்திருந்ததுடன், ஆயிரக் கணக்கான பாடசாலை மாணவ, மாணவிகள் வருகை தந்திருந்தனர்.
பாடசாலை மாணவர்களில் கிழக்கு மாகாணத்தின் பல்வேறு பிரதேசங்களிலுள்ள தமிழ் பாடசாலை மாணவர்கள் அதிகளவு வருகை தந்ததை காண முடிந்தது.
கண்காட்சி தமக்கு பிரயோசனமாக அமைந்ததாக லேக் ஹவுஸ் காட்சிக் கூடத்தை பார்வையிட வந்த பாடசாலை மாணவர்களும், ஆசிரியர்களும் தெரிவித்தனர்.
கண்காட்சியை முன்னிட்டு பிரதான கேட்போர் கூடத்திலும் காட்சிக் கூடங்களிலும் பல்வேறு அமைச்சர்களினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பல நிகழ்ச்சிகள் இடம்பெற்றன. நேற்று மாலை 4.00 மணியளவில் விமானப் படை மற்றும் முப்படையினரின் பரசூட் சாகசங்கள் காண்பிக்கப்பட்டன. இது தவிர இராணுவம், கடற்படை, விமானப் படை, விஷேட அதிரடிப் படையினரின் சாகசங்களை பார்வையிட பெருந்திரளான மக்கள் வரிசையில் இருந்தனர்.
அத்துடன் பாதுகாப்பு, கல்வி, சுகாதார, உயர் கல்வி, இளைஞர் விவகார அமைச்சுக்களின் காட்சிக் கூடங்களிலும், ஊடக வலயத்தின் காட்சிக் கூடங்களிலும் மக்கள் நிரம்பி வழிந்தனர்.
சகல பிள்ளைகளையும் அழைத்து வந்து மிகப் பிரமாண்டமான முறையில் நடைபெறும் கண்காட்சியை பார்வையிட வைப்பது, அதற்கான வசதிகளை செய்வது ஒவ்வொரு பெற்றோர்களினதும் கடமை என்று கண்காட்சி ஏற்பாட்டுக் குழு தலைவரும், தொலைத் தொடர்புகள் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சருமான ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்தார்.
அம்பாறை ஹாடி உயர் தொழில் நுட்பவியல் நிறுவன வளாகத்தில் நடைபெறும் 7வது தேசத்திற்கு மகுடம் தேசிய அபிவிருத்தி கண்காட்சியில் காண்பிக்கப்படும் எமது நாடு முன்னேறிச் செல்லும் செயற்பாடுகள் தொடர்பாக காண்பிக்கப்படும் விடயங்களை தமது பிள்ளைகளுக்கு சொல்லிக் கொடுப்பது பெற்றோர்களின் பொறுப்பென்றும் அமைச்சர் வலியுறுத்தினார்.
கண்காட்சி வளாகத்தில் அமைக்கப்பட்டு ள்ள ஊடக வலயத்திற்கு வருகை தந்த அமைச்சர், லேக் ஹவுஸ் நிறுவனத்தின் காட்சிக் கூடத்தையும் பார்வையிட்டார். இதன் போதே அமைச்சர் இந்த கருத்தை தெரிவித்தார்.
-தினகரன்
Leave a comment