காத்தான்குடி பிரதேசத்தில் அரசாங்க செலவில் பலஸ்தீன் அல் அக்ஸா பள்ளிவாசல் வடிவில் மிகப் பெரிய பள்ளிவாசல் ஒன்று புதிதாக நிர்மாணிக்கப்படவுள்ளது.
இந்த பள்ளிவாசலின் முதற்கட்ட நிர்மாணப் பணிகளுக்கு புத்தசாசன மற்றும் மதவிவகார அமைச்சின் ஊடாக 87 மில்லியன் ரூபா நிதியை திறைசேரி ஒதுக்கீடு செய்துள்ளது.
பிரதமரும் மத விவகார அமைச்சருமான தி.மு. ஜயரட்னவின் ஆலோசனைக்கமைய அமைக்கப்படவுள்ள இந்த பள்ளிவாசலை நிர்மாணிப்பதற்கான ஒப்பந்தம் நேற்று கைச்சாத்திடப்பட்டது.
புத்தசாசன மற்றும் மத விவகார அமைச்சின் செயலாளர் கெசியன் ஹேரத் மற்றும் நிர்மாணப் பணிகளை முன்னெடுக்கவுள்ள மத்திய பொறியியல் கட்டிட நிர்மாணப் பணியகத்தின் தலைவர் நிஹால் ரூப்பசிங்ஹ ஆகியோர் இந்த ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டனர்.
பிரதமரின் உத்தியோகபூர்வ வாசஸ்தலமான விசும்பாயாவில் நடைபெற்ற இந்த நிகழ்வில் பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் எம். எல். ஏ. எம். ஹிஸ்புல்லாஹ்- பிரதமரின் செயலாளர் எஸ். அமரசேகர- புத்தசாசன மற்றும் மத விவகார அமைச்சின் பிரத்தியேகச் செயலாளர் திருமதி செனானி லங்கா ஜயரத்ன- முஸ்லிம் சமய கலாசார திணைக்களத்தின் பணிப்பாளர் வை. எல். எம். நவவி- காத்தான்குடி ஜம்இய்யதுல் உலமா சபை பிரதிநிதிகள் உட்பட முக்கியஸ்தர்கள் பலர் கலந்துகொண்டனர்.
யுத்தம் முடிவுற்று நாட்டில் அமைதி ஏற்பட்ட பின்னர் நான்கு மதத்தலங்களையும் அபிவிருத்தி செய்யும் வேலைத் திட்டங்களை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் ஆரம்பித்து வைத்தார். அந்த அடிப்படையில் யுத்தத்தினால் சிலகாலம் பாதிக்கப்பட்டிருந்த மட்டக்களப்பு முஸ்லிம் மக்களின் சமய மறுமலர்ச்சியின் நிமித்தம் இந்தப் புதிய பள்ளிவாசலை நிர்மாணிக்க அரசாங்கம் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.
காத்தான்குடி கடற்கரை பிரதேசத்தில் 25 ஆயிரம் சதுர அடி நிலப்பரப்பில் சுமார் ஐயாயிரம் பேர் தொழுகையை நிறைவேற்றும் வகையில் இந்த பள்ளிவாசல் நிர்மாணிக்கப்படவுள்ளது.
முதற்கட்ட நிர்மாணப்பணிகள் 18 மாத காலப்பகுதிக்குள் நிறைவடையவுள்ள துடன்- அல் அக்சா பள்ளி வாசலைப் போன்றும் அங்கு பயன்படுத் தப்பட்ட கட்டடக்கலைகளும் பயன்படுத்தப் படவுள்ளதாக பிரதியமைச்சர் எம். எல். ஏ. எம். ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.
மூன்று மாடிகளைக் கொண்ட இந்தப் பள்ளிவாசலில் கலாசார மத்திய நிலையம்- நூலகத்துடன்-65 அடி அகலமான குப்பாவும் அமைக்கப்படவுள்ளது என்றார்.
-அரசாங்க தகவல் திணைக்களம்
Leave a reply to katthaankudiyaan Cancel reply