65 வது தேசிய சுதந்திரதினம்: திருமலை நகர் விழாக்கோலம்!

Srilanka*தேசியக் கொடிகளால் நகரம் அலங்கரிப்பு

*பலத்த பாதுகாப்பு; கடமையில் 4000 பொலிஸ், முப்படை

*இன்று சுதந்திரதின ஒத்திகைகள்

இலங்கையின் 65 ஆவது தேசிய சுதந்திர தின கொண்டாட்டங்கள் நாளை திங்கட்கிழமை திருகோணமலை நகரில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் தலைமையில் நடைபெறுகிறது.

சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த திருகோணமலை பிரட்ரிக் கோட்டைக்கு முன்பாக கடற்கரையோரத்தில் சுதந்திர தின வைபவங்கள் நடைபெறவுள்ளன.

சுமார் 60 ஆண்டுகளின் பின்னரும் 30 வருடகால யுத்தத்தின் பின்னரும் முதல் தடவையாக கிழக்கு மாகாணத்தின் திருகோணமலை நகரில் நடைபெறுவதால் நகரமே விழாக் கோலம் பூண்டுள்ளது. நகர் முழுவதும் தேசியக் கொடிகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளன.

திருகோணமலையில் நடைபெறும் சுதந்திர தின கொண்டாட்டங்களுக்கென 4000 பொலிஸாரும் முப்படையினரும் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

சுதந்திர தினத்தை முன்னிட்டு இன்று சுதந்திர தின ஒத்திகைகள் நடைபெறுகின்றன. இதற்கென பொலிஸார் விசேட பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

திருகோணமலை பிரட்ரிக் கோட்டை வாசலுக்கும் கடற்கரை வீதிக்கும் இடைப்பட்ட வீதியில் விசேடமாக அமைக்கப்பட்ட அலங்கார மேடை அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள், வெளிநாட்டு தூதுவர்கள், உயர்ஸ்தானிகர்கள், மாகாண முதலமைச்சர்கள், அமர்ந்திருக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.

நாளை காலை 6.30 மணிக்கு சுதந்திர தினத்தை முன்னிட்டு மதவழிபாடு நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

பிரதமர் டி.எம். ஜயரட்ண தலைமையில் பெளத்த மத வழிபாடுகள் திருமலை வில்கம ரஜமகா விகாரையிலும் இந்துமத வழிபாடுகள், கோணேஸ்வரர் ஆலயத்தில் அமைச்சர்கள், ஆறுமுகம் தொண்டமான், டக்ளஸ் தேவானந்தா தலைமையிலும் இஸ்லாம் மத வழிபாடுகள், சிரேஷ்ட அமைச்சர் ஏ.எச்.எம். பெளஸி, கிழக்கு மாகாண முதலமைச்சர் நஜீப் ஏ. மஜீத் தலைமையில் திருமலை எம்.சி. வீதியிலுள்ள முகைதீன் ஜூம்ஆ பள்ளிவாசலிலும் நடைபெறும்.

கிறிஸ்தவ மத ஆராதனைகள் புனித மரியாள் தேவாலயத்திலும், டொக்யாட் மெதடிஸ்த தேவாலயத்திலும் அமைச்சர் மில்ரோய் பெர்னாண்டோ தலைமையிலும் நடைபெறும். சுதந்திர தின கொண்டாட்டங்கள் காலை 8.30 மணிக்கு ஆரம்பமாவதால் 8.00 மணிக்கு விருந்தினர் அனைவரும் ஆசனங்களில் அமர வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

8.33க்கு முதலமைச்சர்கள் வருகையும் அதனைத் தொடர்ந்து 8.35 க்கு கிழக்கு மாகாண ஆளுநர் வருகையும் இடம்பெறும்.

8.40 க்கு சபாநாயகர் சமல் ராஜபக்ஷவின் வருகையைத் தொடர்ந்து 8.41 க்கு பிரதமர் டி.எம். ஜயரட்ணவின் வருகை இடம்பெறும். 8.45க்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் வருகை இடம்பெறும்.

திருகோணமலை நகரிலுள்ள எட்டு பாடசாலைகளைச் சேர்ந்த 100 மாணவிகள் கீதம் இசைக்க ஜனாதிபதி தேசியக் கொடியை ஏற்றுவார். இதனைத் தொடர்ந்து ஜனாதிபதியை வாழ்த்தி ஜய மங்கள கீதம் இசைக்கப்படும்.

நாட்டின் சுதந்திரத்துக்காக போராடிய முன்னோர்கள், மற்றும் படை வீரர்களை நினைவு கூர்ந்து இரண்டு நிமிட நேர மெளனாஞ்சலி செலுத்தப்பட்டதை தொடர்ந்து காலை 9.11க்கு ஜனாதிபதிக்கு மரியாதை செலுத்தும் நோக்குடன் 21 பீரங்கி வேட்டுக்கள் தீர்க்கப்படும்.

9.15 க்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் இலங்கையின் 65 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு உரையாற்றுவார். 30 நிமிட நேர உரையின் பின்னர் அணி வகுப்புகள் இடம்பெறும். 1500 இலங்கை தரைப்படை, 500 கடற்படை, 500 விமானப்படையினர், 500 பொலிஸார், 300 சிவில் பாதுகாப்பு படையினர், 300 இளைஞர் படையினர், 325 தேசிய கெடெட் படையினர் மரியாதை அணிவகுப்பில் கலந்து கொள்ளவுள்ளனர்.

மரியாதை அணிவகுப்பு தொடர்பாக இன்றும் திருகோணமலை நகரில் ஒத்திகை நடைபெறுகிறது.

1968 ம் ஆண்டு முன்னாள் பிரதமர் டட்லி சேனாநாயக்கவின் தலைமையிலான திருகோணமலை மெக்கெய்ஸர் விளையாட்டரங்கில் நடைபெற்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இச்சுதந்திர தின கொண்டாட்டத்தில் அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள் வெளிநாட்டு பிரதிநிதிகள் உள்ளிட்ட 2500 க்கும் மேற்பட்ட சிறப்பு அதிதிகள் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.

சுமார் 50 வருடங்களுக்கு பின்னர் திருகோணமலையில் நடைபெறும் தேசிய சுதந்திர தினம் என்பதால் திருகோணமலை நகர் வர்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளதுடன் மக்களும் மிகுந்த ஆர்வத்துடன் உள்ளனர்.

-தினகரன்

Published by

Leave a comment