இலங்கை கிரிக்கட் வீரர்களும் தளம்பும் மன நிலையும்….

Sri Lanka v West Indies - ICC World Twenty20 2012 Final

-MJ

பிரித்தாணிய காலணித்துவ காலகட்டத்தில் இருந்து இன்றுவரை இலங்கை மக்களுக்கான பிரதிபலிப்பாக, உலகளவில் விளங்கும் விளையாட்டாக,  இலங்கை மக்களது மனங்களிலும் உலக மக்களின் உள்ளங்களிலும் இருந்து வருகின்ற ஓர் அடையாளமாக கிரிக்கட் இருந்து வருகின்றது. கிரிக்கட் அது இலங்கை மக்களின் இதயம்..!

1980 களில் இருந்து 1990 வரைக்கு இடைப்பட்ட காலப்பகுதியில் ஓர் ஆசியக் கிண்ணத்தை வென்று ஆசியாவில் புகழப்பட்டு, ஓர் ஆசிய அணிகளுக்குள் சிறப்பான அணியாக பிரதிபலித்த இலங்கை அணி, 1996ல் உலகக் கிண்ணத்தை வென்று உலக மக்களின் இதயங்களில் முடிசூடிக் கொண்டது.

அதன் பின்னர் எந்த உலக கிரிக்கட் அணிகளுடனும் ஓர் சவால்மிக்க அணியாக களமிறங்கி, 2007, 2011 உலகக் கிண்ணப் போட்டிகளிலும், 2009, 2012 இருபது20 உலகக் கிண்ணப் போட்டிகளிலும் இறுதிப் போட்டியில் விளையாடி இரண்டாம் இடத்தைப் பெற்றுவந்த அணியாகவும் உலகில் வரலாறு படைத்திருக்கின்றது.

இதைவிட, சர்வதேச கிரிக்கட் சம்மேளனத்தின் வருடாந்த கௌரவிப்பு, சிறந்த வீரர்கள் எனும் பட்டியலில் எமது இலங்கை கிரிக்கட் வீரர்கள் தெரிவு செய்யப்பட்டு உலக தர வீரர்கள் என்ற வரலாற்று பட்டங்களையும், புகழையும் எம் மண்ணுக்குத் தேடித் தந்திருக்கின்றனர்.

இதனையும் விட, சிறந்த மத்தியஸ்தர் விருதும் எமது மண்ணில் உதித்து மத்தியஸ்தத்துக்குக் கிடைத்திருப்பது பெருமையிலும் பெருமை!

புகழ்மேல் புகழ், பணப்பரிமாற்றம், விளம்பர அணுசரணையாளர்களின் போட்டி மற்றும் இலங்கை கிரிக்கட் சபையின் பதவி, பணத்தாசைக்கான போட்டிகளுக்கு மத்தியில் சாதனைமிக்க, சாதனை படைக்வேண்டிய எமது வீரர்கள் காற்றில் அடித்துச் செல்லப்படும் சருகுகளாக ஓர் திராணியற்ற துடுப்பாட்டத்தை எரிரணியின் பந்து வீச்சுக்கு முகம் கொடுக்க முடியாமல் சுருண்டு ஒதுங்கிவரும் நிலை தற்பொழு இலங்கை வீரர்களுக்கு ஏற்பட்டிருப்பது மக்கள் மத்தியில் கவலையளிக்கின்றது.

குறிப்பாக மஹேல ஜயவர்த்தனாவும், அவருடன் ஒருமித்த இணைபிரியா வீரர்களான சங்கக்கார மற்றும் டில்சான் ஆகியோரின் ஒப்பமிடப்பட்ட இரகசியக் கடிதம் கசிந்ததின் பின்னர் மஹேல இலங்கை கிரிக்கட் சபையை அவுஸ்திரேலியாவில் வைத்து விமர்சித்திருந்ததுடன் தனது எதிர்கால கிரிக்கட் இருக்கையை யோசிக்கப்போவதாகவும் ஊடகங்களுக்கு பகிரங்கமாக தெரிவித்திருந்தார்.

இதன் பின்னர் நாடு திரும்பியதும் கிரிக்கட் சபையை விமர்சித்த மஹேலவுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்போவதாகவும் இலங்கை கிரிக்கட் சபை அறிவித்திருக்கின்றது.

இதற்கிடையில் மஹேலவுக்கு ஆதரவாக சிரேஷ்ட வீரர்களும் புதிய வீரர்களும் ஒத்துழைப்பதாகவும் மேலும் தெரியவருகிறது.

உலகில் எல்லா கிரிக்கட் சபைகளிலும் பிரச்சினைகள் இருக்கின்றன. அதைவிடவும் வீரர்களுக்கிடையிலும் தனிப்பட்ட பிரச்சினைகள் இருக்கின்றன.

தென்னாபிரிக்கா, இங்கிலாந்து, மே.இந்தியத் தீவுகள், அவுஸ்திரேலியா, சிம்பாப்வே போன்ற அனைத்து கிரிக்கட் சபைகளுக்குள்ளும் பிரச்சினைகள் இருக்கின்றன.

பாகிஸ்தான் கிரிக்கட் சபையிலும் இவ்வாறான பிரச்சினைகள் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.

இந்திய அணியில் டோணி மற்றும் கம்பீர் ஆகியோருக்கிடையில் மனக் கசப்புக்கள் இருந்து வருவதாகவும் ஊடகங்கள் தெரிவித்து வருகின்றன.

எனினும் இலங்கை அணியைப் பொருத்தமட்டில் வீரர்களுக்குள் எந்தச் சிக்கல்களும் இல்லை. அவர்கள் கிரிக்கட்டிலும் கிரிக்கட்டிற்கு வெளியிலும் நட்பாகவே இருந்து வருகின்றனர்.

இவ்வாறிருக்க, இலங்கை கிரிக்கட் சபை தனது பிடியை இறுக்குமானால் இலங்கை அணி ஓர் சிம்பாப்வே அணியை விடவும் குறைந்த தகமையுடனயே எதிர்காலப் போட்டிகளில் கலந்து கொள்ள நேரிடும்.

குறிப்பாக மஹேல, சங்கக்கார, டில்சான் ஆகியோர் அணியிலிருந்து விலகினால் அல்லது இவர்களுள் ஓருவர் நீக்கப்பட்டாலும் இலங்கை அணியின் முதுகெலும்பை நிமிர்த்த நாட்கள் பல தேவைப்படும். பல போட்டிகளும் தொடர்களும்  வெற்றியிலிருந்து நழுவி விடும்.

எனவே பிரச்சினை வீரர்களுக்கிடையில் இல்லை. இலங்கை கிரிக்கட் சபையில்தான் இருக்கின்றது. இருபது20 உலகக் கிண்ணம் நடைபெற்று 3 மாதங்கள் முடிந்தும் 25 சத வீதமான பணம் இன்னும் பகிர்ந்தளிக்கப்படாத நிலையில் இருப்பது ஓர் கிரிக்கட் சபைக்கு ஆரோக்கியமானதல்ல!

அரசியல் செல்வாக்குகளுக்கு மத்தியில் ஓர் அசைக்க முடியாத சபையாக இலங்கை கிரிக்கட் சபை இருப்பினும் இலங்கை வீரர்களின் மனநிலைகளை புரிந்து அவர்களுக்கு பக்கத்துணையா இருக்கவேண்டிய ஓர் தலைமையே கிரிக்கட் சபைக்கு இன்றியமையாதது என்பதை நாம் உணர வேண்டும்.

Published by

Leave a comment