அண்மையில் இலங்கை இராணுவத்துக்கு கிளிநொச்சி மாவட்டத்தில் இருந்து சேர்த்துக்கொள்ளப்பட்ட பெண்களில் ஒரு தொகுதியினர் உளவியல் ரீதியான சுகயீனம் காரணமாக கிளிநொச்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த தகவலை உறவினர்கள் மூலம் தான் அறிந்துகொண்டதாகக் கூறும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன், அவர்களை பார்ப்பதற்காக கிளிநொச்சி வைத்தியசாலைக்கு சென்ற போது தான் அங்கு அனுமதிக்கப்படவில்லை என்று கூறியுள்ளார்.
இருப்பினும் தான் ஒரு நாடாளுமன்ற உறுப்பினர், தனக்கு தன்னுடைய பிரதேச மக்களை சென்று பார்ப்பதற்கு சிறப்புரிமை தனக்கு உள்ளது, ஆகவே அதற்கான அனுமதி வேண்டும் என்று மருத்துவமனை நிர்வாகத்திடம் தான் கேட்டதாகவும், அதற்கு இராணுவத்தின் அனுமதி தேவை என்று அவர்கள் கூறியதாகவும் சிறிதரன் கூறியுள்ளார்.
இதேவேளை, சுகயீனம் காரணமாக மருத்துவமனையின் அனுமதிக்கப்பட்டுள்ள இந்தப் பெண்களின் உறவினர்கள், அவர்களை பார்ப்பதற்கு அனுமதிக்கப்பட்டதாக பெற்றோர் தெரிவித்தனர்.
தனியான வார்ட் ஒன்றில் 13 பேர் இவ்வாறு அனுமதிக்கப்பட்டுள்ளதாக ஒரு பெண்ணின் தந்தை தெரிவித்தார்.
தன்னுடைய பிள்ளையும் ஏனைய சில பிள்ளைகளும் பேய் பிடித்தது போல ஆடி, பல்லைக் கடித்தபடி மயங்கிவிழுந்ததாகவும் அவர் தெரிவித்தார்.
அதேவேளை ஒரு சில நிமிடங்களில் அவர்கள் மீண்டும் சுயநினைவுபெற்று இயல்பாக கதைத்ததாகவும் அவர் தெரிவித்தார்.
இது குறித்து உடனடியாக இராணுவத் தரப்பினரை தொடர்பு கொள்ள முடியவில்லை.
BBC/Tamil
Leave a comment