இருமலுக்காகப் பயன்படுத்தும் Corex D சிரப்ஸை விநியோகித்தல் மற்றும் பாவனை செய்தலை சுகாதார அமைச்சு உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் தடை செய்துள்ளது.
Corex D சிரப்ஸை அதிகம் அருந்திய 06 நபர்கள் நேற்று வரையில் மரணித்துள்ளமையே இதற்கான காரணம். பெரும்பாலும் இம்மருந்தை மருத்துவ ஆலோசனையின்றி பெரும்பாலான மருந்தகங்கள் விநியோகிப்பதுடன் போதைக்காக அதிகம் உட்கொண்டமையால் மேற்படி மரணங்கள் இடம்பெற்றுள்ளன.
இதற்கு முன்னர் Corex D பாவனை மூலம் 05 நபர்கள் மரணித்துள்ளதுடன், நேற்றைய தினத்திலும் (09) ஒருவர் மரணித்துள்ளார். மேலும் ஒருவர் தற்போது தேசிய வைத்தியசாலையின் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் அவரின் நிலையும் கவலைக்கிடமாகவுள்ளது.
தற்போது மருந்தாக்க அதிகார சபை மற்றும் இலங்கை பொலிஸ் என்பன இணைந்து மருந்தகங்களை திடீர் முற்று கையிடும் வேலைத் திட்டத்தை ஆரம்பித் துள்ளதுடன், மரணித்தவர்கள் தொடர்பான மரண பரிசோதனையை மேற்கொண்டு அறிக்கை சமர்ப்பிக்குமாறும் வேண்டுகோள் விடுத்துள்ளன.
இந்நிலை யினைக் கவனத்திற் கொண்டு Astron கம்பனியினால் உற்பத்தி செய்யப்படும் Corex D வர்த்தக பெயரின் கீழ் விற்பனை செய்யப்படுகின்ற இருமல் மருந்தை அனைத்து மருந்தகங்களிலும் விற்பனை செய்வதை உடனடியாக தடை செய்யுமாறு சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேன அமைச்சின் செயலாளர் நிஹால் ஜயதிலக்கவுக்கு உத்தரவிட்டுள்ளார்.
அதன் பிரகாரம் இந்த சிரப்ஸ் வகையினை இலங்கையில் விற்பனை செய்வதும் பாவிப்பதும் நேற்று முதல் நடைமுறைக்கு வரும் வகையில் தடை செய்யப்பட்டுள்ளது.
– தினகரன்
Leave a comment