ஆட்ட நிர்ணய சதிகளில் ஈடுபட நடுவர்கள் முயற்சி இந்திய தொலைக்காட்சி அம்பலம்: ஐ.சி.சி. விசாரணை

கிரிக்கெட் வீரர்கள் ஸ்பொட் பிக்சிங்களிலும் போட்டி நிர்ணயங்களிலும், தகவல்களை சூதாட்டக் காரர்களிடம் வழங்குவதிலிருந்து மாறுபட்டு 6 கிரிக்கெட் நடுவர்கள் போட்டிகளில் தவறான தீர்ப்புக்களையோ அல்லது போட்டி பற்றிய தகவல்களையோ வழங்க ஒப்புக் கொண்ட விடயமொன்று அம்பலத்திற்கு வந்துள்ளது.

கடந்த தடவை இந்திய உள்ளூர் வீரர்கள் இந்தியன் பிரிமியர் லீக் தொடரிலும், இந்தியாவின் உள்ளூர் தொடர்களிலும் ஸ்பொட் ஃபிக்சிங்கில் ஈடுபடத் தயாராக இருப்பதையும், அனுமதிக்கப்பட்ட வருமானத்திற்கு அதிகமாகப் பெற முனைந்ததையும் வெளிப்படுத்திய இந்தியாவின் தொலைக்காட்சி நிறுவனமே இந்தத் தடவையும் இந்த நடவடிக்கையையும் மேற்கொண்டுள்ளது.

இலங்கை, பாகிஸ்தான், பங்களாதேஷ் ஆகிய நாடுகளைச் சேர்ந்த நடுவர்களே இந்தப் புலனாய்வு நடவடிக்கையில் சிக்கியுள்ளனர். இலங்கையைச் சேர்ந்த 3 நடுவர்களும், பாகிஸ்தானைச் சேர்ந்த இரண்டு நடுவர்களும், பங்களாதேஷைச் சேர்ந்த இரண்டு நடுவர்களும் இவ்வாறு அகப்பட்டுள்ளனர்.

இலங்கையைச் சேர்ந்தவர்களான காமினி திஸாநாயக்க, மெளரிஸ் வின்ஸ்டன், சாகர கமகே ஆகியோரும், பாகிஸ்தானைச் சேர்ந்த நதீம் கெளரி, அன்னீஸ் சித்திக்கி ஆகியோரும், பங்களாதேஷைச் சேர்ந்த நதீர் ஷா என்பவருமே இவ்வாறு அகப்பட்டுக் கொண்டவர்களாவர்.

இதில் பங்களாதேஷ் நடுவரான நதீர் ஷா சர்வதேச போட்டிக ளிலும், உள்ளூர்ப் போட்டிகளிலும், பிராந்தியப் போட்டிகளிலும் தவறான தீர்ப்புக்களை வழங்கத் தயாராக இருப்பதாக உறுதி வழங்கியுள்ளார். பணத்தைப் பெற்றுக்கொண்டே இந்த நடவடிக்கைக்கு அவர் இணங்கியுள்ளார்.

இலங்கையைச் சேர்ந்தவரான சாகர கமகே, 17ம் திகதி இடம்பெற்ற இந்திய, பாகிஸ்தான் அணிகளுக்கி¨ டயிலான பயிற்சிப் போட்டியில் நான்காவது நடுவராக கடமையாற்றியதோடு, அப்போட்டியில் ஆடுகளத்தின் தன்மைகள், காலநிலை, நாணயச் சுழற்சி விபரங்கள், விளையாடும் பதினொருவரின் விபரங்கள் ஆகியவற்றை 50,000 ரூபாவிற்காக வழங்கத் தயாராக இருப்பதாகத் தெரிவித்திருந்தார்.

அத்தோடு சிறிலங்கா பிaமியர் லீக் தொடரில் பாகிஸ்தான் வீரரான இம்ரான் நசீரைப் பிழையான முறையில் ஆட்டமிழப்பு வழங்கவும் அவர் உறுதியளித்திருந்தார்.

பாகிஸ்தானைச் சேர்ந்த நடுவரான நதீர் கெளரி, இந்திய அணிக்கு எவ்வாறான வகையிலும் உதவுவதாக ஒப்புக்கொண்டிருந்தார். பாகிஸ்தானைச் சேர்ந்த சர்வதேச நடுவரான அவர் 43 ஓருநாள் சர்வதேசப் போட்டிளிலும் 14 டெஸ்ட் போட்டிகளிலும், 4 20 க்கு 20 போட்டிகளிலும் நடுவராகக் கடமையாற்றியுள்ளார்.

மெளரிஸ் வின்ஸ்டன் 17ம் திகதி இடம்பெற்ற அவுஸ்திரேலிய, இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான பயிற்சிப் போட்டியில் ஆடுகளத்தின் தன்மைகள், காலநிலை, நாணயச் சுழற்சி விபரங்கள், விளையாடும் பதினொருவரின் விபரங்கள் ஆகியவற்றை வழங்கியதாக அந்தத் தொலைக்காட்சி தெரிவித்துள்ளது.

இலங்கையைச் சேர்ந்த மற்றொரு நடுவரான காமினி திஸாநாயக்க இலங்கைக் கிரிக்கெட்டுக்கு எதிராக கிளர்ச்சி செய்வதற்கு உதவுவதாகத் தெரிவித்திருந்தார். அத்தோடு இலங்கைக் கிரிக்கெட் அதிகாரிகளுக்கு மதுபானங்களையும், உல்லாசப் பயணத்தையும் வழங்கினால் அவர்கள் எவ்விதமான உதவிகளையும் வழங்குவர் எனவும் தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தானைச் சேர்ந்த மற்றொரு நடுவரான அன்னீஸ் சித்திக்கி, இந்திய அணி சார்பான முடிவுகளை வழங்குவதாக ஒப்புக்கொண்டுள்ளார். அகப்பட்டுக் கொண்ட நடுவர்கள் அனைவரும் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்ட ஜுலை மாதத்திலிருந்து ஒக்டோபர் வரை எந்ததொரு சர்வதேசப் போட்டிகளிலும் நடுவராகப் பங்குபற்றியிருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

– கட்டுரை: தினகரன்

 

 

 

Published by

Leave a comment