நபி(ஸல்) அவர்கள் உலகத்திற்கோர் அழகிய முன்மாதிரி

1430 ஆண்டுகளுக்கு முன்னால் அன்றைய அரபுலகத்தில் அறியாமை இருள் நிறைந்த காலகட்டத்தில் அந்த இருளை நீக்கி இறுதி இறைதூதராக நம் நபி(ஸல்) அவர்கள் வருகை தந்தார்கள். நபி(ஸல்) அவர்களின் அழகிய போதனைகள் நிறைந்த வாழ்க்கையானது அறியாமை இருளை அழகிய வாழ்க்கை முறையை மக்களுக்கு தந்ததோடு, இன்றும் அந்த வாழ்க்கை முறையை பின்பற்றி நடக்கும் அறிய வாய்ப்பை நபி(ஸல்) அவர்கள் மூலம் அல்லாஹ் நமக்கு தந்ததோடு அல்லாமல் நபி(ஸல்) அவர்களின் நற்குணங்களைத் தன் திருமறையிலும் நமக்கு அறிவித்து கொடுத்துள்ளான்.

நபித்துவம் கிடைப்பதற்கு முன்பும் சரி, பின்பும் சரி நபி(ஸல்) அவர்கள் அழகிய நற்குணங்கள் நிறைந்தவர்களாக இருந்ததோடு, நமக்கு இறைவன் கூறுவது போல் முன்மாதிரியாகவும் விளங்குகிறார்கள். அல்குர்ஆன் கூறுகிறது: அல்லாஹ்வையும், இறுதிநாளையும் நம்பி, அல்லாஹ்வை அதிகம் நினைக்கும் உங்களுக்கு அல்லாஹ்வின் தூதரிடம் அழகிய முன்மாதிரி இருக்கிறது.

சற்று சிந்தித்து பாருங்கள் நம்பிக்கை கொண்டவர்களே! அழகிய முன்மாதிரி என்று இறைவனே சொல்லக்கூடிய அளவிற்கு நம் நபி(ஸல்) அவர்கள் இருக்க நம்மில் சிலர் தனக்கு முன்மாதிரி என்று சில நடிகர், நடிகைகளையும் வேறு சிலரையும் கூறிக்கொண்டு நரகத்தை நோக்கி சென்று கொண்டிருக்கின்றனர். நவூது பில்லாஹி மின்ஹா(அல்லாஹ் அதிலிருந்து நம்மை காப்பானாக)

நீர் மகத்தான நற்குணத்தில் இருக்கின்றீர். அல்குர்ஆன்: 68:4

அல்லாஹ்வே நபி(ஸல்) அவர்களை திருமறையில் புகழ்ந்து கூறுகின்ற அளவிற்கு பல அழகிய நற்குணங்கள் நிறைந்த நம் நபி(ஸல்) அவர்களே உலகத்திற்கெல்லாம் சிறந்த முன்மாதிரி என்று உணர்ந்து அவர்களின் நற்குணங்களை தம் வாழ்வில் செயல்படுத்திட வேண்டும்.

அன்பின் பிறப்பிடம்:

நபி(ஸல்) அவர்கள் நபித்துவம் பெறுவதற்கு முன்னால் இருந்த மக்களிடம் நல்லறங்களை விட தீமையான காரியங்கள் அதிகம் இருந்தாலும், அக்காலகட்டத்தில் பிறந்த நபி(ஸல்) அவர்கள் மிகச் சிறந்த நல்லறங்களுடன் திகழ்ந்தார்கள் எனில் இதைவிட முன்மாதிரி நமக்கு வேறெங்கு கிடைக்கும் அதுமட்டுமின்றி,

அவர்கள் (அறியாமை காலத்தில்) முரண் பிடித்துப் பேசியதுமில்லை, சண்டையிட்டதும் இல்லை என்று அவர்களின் அறியாமைக் கால நண்பர் ஸாயிப் இப்னு அபீ ஸாயிப்(ரலி) அறிவிக்கிறார்கள். அஹ்மத்-14956

அப்படியெனில் தீய பழக்கங்கள் நிகழ்ந்துக் கொண்டிருந்த காலத்திலும் மாசற்ற மனிதராய் அன்பின் பிறப்பிடமாய் நபி(ஸல்) அவர்கள் திகழ்ந்திருப்பது எவ்வளவு வியப்பிற்குரிய விஷயமாக உள்ளது.

ஆனால் இன்றைய காலகட்டத்தில் தீமைகள், தீய பழக்கங்கள் நிறைந்திருந்தாலும் நம்மில் சிலர் அதற்கு அடிமையாகி விடுகின்றனர். இத்தகையோர்தான் நம் நபி(ஸல்) அவர்களிடம் அழகிய முன்மாதிரி நல்ல குணங்கள் நிறைந்திருப்பதை அறியவில்லையோ என நம்மை சந்தேகிக்க வைக்கிறது.

கொடை வள்ளல்:

எத்தனை சொத்துக்கள், செல்வங்கள் பல இருந்தாலும் இன்னும் வேண்டும் என்று பேராசைப்படும் மக்கள் வாழும் இவ்வுலகத்தில் இருப்பதையெல்லாம் நற்காரியங்களுக்கு வாரி வழங்கும் வள்ளலாக நபி(ஸல்) அவர்கள் திகழ்ந்தார்கள். இதனால் வறுமை ஏற்பட்டு விடுமோ என்று அவர்கள் அஞ்சியதில்லை அதற்கு சான்றாக ஒரு ஹதிஸின் சுருக்கம் பின் வருமாறு:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொடர்ந்து வீசும் மழைக் காற்றை விட அதிகமாக வாரி வழங்குபவர்களாக இருந்தார்கள். இப்னு அப்பாஸ்(ரலி) புகாரி 6.1902

ஆனால் நமக்கு அல்லாஹ் ஏராளமாக செல்வங்களை வழங்கியிருந்தும் நிம்மதியில்லையே எனக் கூறுவோரும் நம்மில் உள்ளனர். அத்தைகையோரெல்லாம் நபி(ஸல்) அவர்களின் வழிப்படி தங்களது செல்வங்களை வாரி வழங்கி நிம்மதியோடு மறுமை பயனையும் பெற முயலும் போது நாமும் மகிழ்ச்சியுற்று பிறரையும் மகிழ்ச்சியுற செய்ய முடியும் என்பதை அறிய வேண்டும் இன்ஷா அல்லாஹ்.

பொறுமையும், மென்மையும்:

தலைவராக இருக்கும் அனைவருக்கும் பொறுமையும், மென்மையும் அவசியம். அப்போதுதான் தன்னைவிட கீழிருக்கும் மக்களை நல்வழிப்படுத்தவும், அவர்களின் செயல்கள் சில சமயங்களில் கோபத்தை ஏற்படுத்தும்படி இருக்கும்போது அவர்களிடம் மென்மையாக நடந்துக் கொண்டு பொறுமைகாத்து அவர்களுக்கு நல்வழிக் காட்டிடவும் முடியும்.

அத்தகைய பெரும் நற்குணங்களை நபிகளார் பெற்றிருந்ததால்தான் மிகவும் மோசமான செயல்பாடுகளைக் கொண்ட அரபு மக்களிடம் அல்லாஹ்வின் உதவியைக்கொண்டு மென்மையோடும், பொறுமையோடும் அவர்கள் எவ்வித துன்பங்களை நபி(ஸல்) அவர்களுக்கு தந்திருந்தாலும் அதனையெல்லாம் பொருட்படுத்தாது நடந்து கொண்டதால்தான் அம்மக்களை நபிகளார் அவர்களால் அரவணைத்துச் செல்ல முடிந்தது, என வல்ல ரஹ்மானே கூறுகிறான்.

(முஹம்மதே!) அல்லாஹ்வின் அருள் காரணமாகவே அவர்களிடம் நளினமாக நீர் நடந்து கொள்கிறீர். முரட்டுத்தனம் உடையவராக, கடின உள்ளம் உடையவராகவும் நீர் இருந்தால் அவர்கள் உம்மை விட்டு ஓடியிருப்பார்கள். அவர்களை மன்னிப்பீராக! அவர்களுக்குப் பாவமன்னிப்புத் தேடுவீராக!. அல்குர்ஆன்: 3:159

இத்தகைய முன்மாதிரி, நபி(ஸல்) அவர்களுக்கு இருக்கும்போது நாம் ஏன் பிறரைப் பின்பற்றி பாவத்தில் மூழ்கக்கூடிய காரியங்களை செய்ய வேண்டும். சற்று சிந்தித்துப் பாருங்கள், மிகவும் மோசமான செயல்களில் ஈடுபட்டுக் கொண்டு நபி(ஸல்) அவர்களையே கொல்ல முயன்றவர்களிடமே நபி(ஸல்) அவர்கள் பொறுமைக்காத்து மென்மையுடன் நடந்துள்ளார்கள் எனில் சிறுசிறு விஷயத்துக்குகூட நாம் ஏன் பொறுமை இழந்து உறவினர்களிடமும், நண்பர்களிடமும் பகைக் கொள்கிறோம். இதனால் நமக்கு என்ன பயன் கிடைத்துள்ளது அல்லது இனி கிடைக்கபோகிறது என்று ஆராய்ந்தால் ஒன்றுமேயில்லை, நாம் நன்மையை தவர விடுகிறோமே தவிர இதுபோன்ற காரியங்களில் ஈடுபடுவதால் நமக்கு பலன் ஏதுமில்லை என உணர்ந்து இனியேனும் அவர்களிடமும் ஒற்றுமையுடன் பழகுவோம். அல்லாஹ் திருமறையில் கூறும் போது.

நன்மையை ஏவி தீமையை தடுப்பீராக! பகைமை உடையவர்க்கும் நன்மையைச்செய் பகைவர்களும் நன்பர்களாகிவிடுவர். எனவே இதை நினைவில் கொண்டு நபி(ஸல்) அவர்களுக்கு ஏற்பட்ட துன்பங்களைப் போல் நமக்கு ஏற்படவில்லை அல்ஹம்துலில்லாஹ். அதனால் பல ஆண்டுகள் பல தலைமுறைகளென உறவை, நட்பை முறித்து வாழ்ந்துக்கொண்டிருக்கும் நம் சகோதரர்கள் இனியேனும் அதனை மறந்து நபி(ஸல்) அவர்களை முன்மாதிரியென ஏற்று பகைமை மறந்து ஒற்றுமையுடன் வாழ வேண்டும்.

குர்ஆனே அவர்கள் குணம்:

ஒரு முறை ஆயிஷா(ரலி) அவர்களிடம் நபி(ஸல்) அவர்கள் குணம் எப்படியிருந்தது எனக்கேட்டபோது நபி(ஸல்) அவர்களின் குணம் குர்ஆனாக இருந்தது எனக்கூறினார்கள். முஸ்லிம்:1357

பார்த்தீர்களா! நபி(ஸல்) அவர்கள் திருக்குர்ஆன் எந்த குணங்கள் இருக்க வேண்டுமென கட்டளையிட்டதோ அதுவாகவே வாழ்ந்து காட்டினார்கள். ஆனால் நாமோ குர்ஆன் என்ற மிகப்பெரும் அற்புதத்தை நம் கைகளில் பெற்றிருந்தும் அதனை சரியாகப் பயன்படுத்தாது ரமலான் மாதத்திலும், வெள்ளிக் கிழமைகளிலும், இறந்த வீடுகளிலும் இன்னும் பிற குறிப்பிட்ட நாட்களிலும் தான் அதனை ஓதவேண்டும் என்று சில மூடநம்பிக்கைகளை நாமே ஏற்படுத்திக்கொண்டு பெரும்பெரும் நன்மைகளை இழந்து வருகிறோம் ஆனால் விஞ்ஞானிகளும், பிற உலக அறிஞர்களும் இதனைக் கண்டு வியந்து பிறருக்கும் அதை வெளிப்படுத்தி பலரும் இதை ஆராயத்தக்க வகையிலும் செயல்படுத்தத்தக்க வகையிலும் வியந்து போற்றுகின்றனர். மேலும் இஸ்லாத்தை ஏற்கவும் இந்த அருள்மறையாம் திருமறை அமைந்துள்ளது. (அல்லஹம்துலில்லாஹ்)

இப்படியிருக்க நாம் ஏன் இதை சிந்திக்கவில்லை. குர்ஆன் தன்னை ஓதியருக்கு மறுமையில் பரிந்துரை செய்யும் வேரெவரும் நமக்கு உதவிட முடியாது அல்லாஹ் நாடினால் தவிர.

எனவே நாம் நபி(ஸல்) அவர்களை முன்மாதிரியாக எடுத்துக்கொள்வது என்பது பெயரளவிலின்றி செயலிலும் இருக்க குர்ஆனை நாம் சிந்தித்து ஓதுவதோடு நில்லாமல் நபி(ஸல்) அவர்களை போன்று அதிலுள்ளவற்றை நம் வாழ்விலும் செயல்படுத்த வேண்டும்.

உண்மை, நேர்மையின் பிறப்பிடம்:

உண்மை, நேர்மையின் பிறப்பிடமாக நபி(ஸல்) அவர்கள் திகழ்ந்தார்கள். அவர்களிடம் பொய் பேசும் பழக்கமே இருந்ததில்லை அதனால்தான் அன்றைய கால மக்கள் நபி(ஸல்) அவர்களைப் பார்த்து நாங்கள் உங்களிடம் உண்மையைத்தவிர வேறெதையும் அனுபவித்ததில்லை என்று கூறினார்கள்.

மேலும் ஹிரக்கல் மன்னர் நபிகளாரைப்பற்றி அபூசுப்யானிடம் விசாரித்தபோது நபி அவர்களின் நேர்மைக்கு சான்று பகர்ந்தார்கள். (அப்போது அபூசுப்யான் அவர்கள் இஸ்லாத்தை ஏற்றிருக்க வில்லை.) பார்த்தீர்களா! நபி(ஸல்) அவர்களின் நேர்மையை ஆனால் இன்று நம்மில் சிலரோ வியாபாரம், குடும்பம், கல்வி, இன்னும் பல சந்தர்ப்பங்களில் உண்மையா? அப்படின்னா என்ன? என்று கேட்குமளவிற்கு பொய் கூறி நேர்மையற்று செயல்படுகின்றனர் என்று என்னும்போது இத்தகைய முன்மாதிரி நேர்மை உண்மையின் பிறப்பிடம் நபி(ஸல்) அவர்கள் நமக்கு கிடைத்தும் நாம் ஏன் இப்படி செயல்படுகறோம் என கவலையடையச் செய்கிறது. இதுவரை எப்படியோ இனியேனும் பொய் என்பதை ஒழித்து மெய் என்பதை ஏற்போம்.

உலக அறிஞர்களின் பார்வையிலும் நபி(ஸல்) அவர்கள்:

மைக்கேல் ஹெச் ஹார்ட் (அந்த நூறு பேர் என்ற நூலில்) உலகத்தில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய நபர்களில் 100 நபர்களை தேர்வு செய்து அதில் முதலிடத்தை நபி(ஸல்) அவர்களுக்கு தந்துள்ளார். அதற்கு காரணம் கூறும்போது அதில் முக்கியமாக கூறிய காரணம் சமயம், உலகியல் ஆகிய இரு நிலைகளிலும் ஒரு சேர மகத்தான வெற்றி பெற்றவர். நபி(ஸல்) அவர்கள் உயிர் நீத்து 14 நூற்றாண்டுகளுக்குப் பிறகும் அவர்களின் தாக்கம் சக்தி மிக்கது எல்லாத் துறைகளிலும் பரவி நிற்பதுமாக இன்றும் விளங்குகிறது என்று கூறியுள்ளார்.

கவனித்தீர்களா! நபி(ஸல்) அவர்கள் உலகத்திற்கோர் முன்மாதிரி என்பது எவ்வளவு உண்மை. முஸ்லிம்கள் மட்டுமின்றி அனைத்து தரப்பினரும் போற்றும் வகையில் நபி(ஸல்) அவர்கள் வாழ்க்கை முறை அமைந்திருந்தது என்றால் அது மிகையல்ல. எனவே நபி(ஸல்) அவர்கள் மூலம் நாம் பெறும் படிப்பினைகளும், பெற வேண்டிய நற்குணங்களும் பல இருந்தும் மேல் குறிப்பிட்டவை சிலவே எனினும், சிறிது அமைந்திருந்தாலும் அதை செயல்படுத்துவதே சாலச்சிறந்தது. அதுமட்டுமின்றி நம் ஈருலகிலும் நன்மையைப் பெற வல்லது. எனவே வல்லோன் கூறிய 33:21 வசனப்படி நம்முடைய முன்மாதிரி நபி(ஸல்) அவர்கள் மட்டுமே எனக்கொண்டு நன்மைகள் பலப்பெறுவோமாக ஆமீன்.

(சுவனப்பாதை மாதஇதழ் நடத்திய உலகளாவிய எழுத்துப் புரட்சி போட்டியில் (ஹிஜ்ரி 1430) நான்காம் ஆறுதல் பரிசு பெற்ற கட்டுரை.)

 

 

 

One thought on “நபி(ஸல்) அவர்கள் உலகத்திற்கோர் அழகிய முன்மாதிரி”

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s