-Special Report
காத்தான்குடியின் பிரதான எதிர்க்கட்சியாக இருக்கும் நல்லாட்சிக்கான மக்கள் இயக்கம் இம்முறை இடம்பெற்ற கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் தோல்வியடைந்திருக்கின்றது. குறிப்பாக காத்தான்குடி மக்களால் எதிர்பார்க்கப்பட்ட ஓர் உறுப்பினர் எனும் கனவும் நனவாகவில்லை!
2011ம் ஆண்டு நடைபெற்ற உள்ளுராட்சி தேர்தலில் காத்தான்குடியில் 6,809 வாக்குகளைப் பெற்று இரண்டு ஆசனங்களுடன் இரண்டாவது இடத்தை இவ் இயக்கம் பெற்றிருந்தது. எனினும் இம்முறை இடம்பெற்ற கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் மட்டக்களப்புத் தொகுதியில் 5,355 வாக்குகளை மாத்திரமே பெற்றிருந்தது. ஏறாவூரும் இவற்றுள் உள்ளடக்கம் என்பதால் சுமார் 5000 வாக்குகளே காத்தான்குடியில் நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்திற்கு வழங்கப்பட்டிருக்கின்றன.

2011ஆம் ஆண்டிலிருந்து இன்றுவரைக்கும் சுமார் 1000 வாக்குகள் குறைந்துவிட்டன. இவற்றுக்கு முக்கிய காரணங்கள் பல இருந்தாலும் பிரதான காரணங்களை குறிப்பிட்டு சுருக்கமான ஆய்வை இங்கு வழங்குகின்றோம்.
வாக்கு வேட்டை:
ஹிஸ்புல்லாஹ் அவர்களுக்கு அடிப்படையான வாக்குகள் 3000 காத்தான்குடியில் இருக்கின்றன. இவர் அப்துர் ரவூப் மௌலவியுடன் கூட்டுச் சேரும் போதும் மற்றும் தளம்பல் வாக்குகளால் சுமார் 8000க்கும் மேற்பட்ட வாக்குகள் ஹிஸ்புல்லாஹ் அவர்களுக்கு காத்தான்குடியில் அடிப்படை வாக்குகளாகக் கிடைக்கும். இவ்வாக்குகள் ஹிஸ்புல்லாஹ் வேட்பாளராக களமிறங்கினாலும் அல்லது தனது சார்பாக வேறொருவரை வேட்பாளராகக் களமிறக்கினாலும் காத்தான்குடியின் அரசியல் நிலைமை இதுதான்.
எனவே தனது பேச்சாற்றல், ஹிஸ்புல்லாஹ் மீதான ஊழல் மோசடிகள் பற்றி மக்களிடத்தில் உண்மையைத் தெரிவித்தாலும் இவ்வாக்கு வங்கியில் மாற்றத்தைக் கொண்டுவர முடியாது. எனவேதான் 3ம் இடத்தில் செல்வாக்குச் செலுத்திவரும் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தினால் இலக்குவைக்கப்பட்டது.
குறிப்பாக 2011ல் உள்ளுராட்சி தேர்தலில் நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்துக்கு அடுத்த இடத்தில் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் 1 ஆசனத்துடன் வெற்றிபெற்றிருந்தது. இதன் செல்வாக்குகளை உடைத்தால் மாத்திரமே இவ்வூரில் மேலதிக வாக்குகளை பெற முடியும் என்ற திட்டத்தால் ஒவ்வொரு மேடைகளிலும் முஸ்லிம் காங்கிரசும் அதன் உறுப்பினர்களும் இலக்கு வைக்கப்பட்டனர்.
ஏனெனில் 1994 பொதுத் தேர்தலில் காத்தான்குடியின் படித்த மேதை, ஓர் சட்டத்தரணி, சமூக சேவையாளர் ஆம் அவர்தான் அப்துல் ஜவாத் சேர். ஹிஸ்புல்லாஹ்வை எதிர்த்து வேட்பாளராக நிறுத்தப்பட்டதால் அவரது அறிவுக்கும் சேவைக்கும் எமது மக்கள் அளித்த வாக்குகள் சுமார் 300 மட்டுமே! எனவே படித்தவன் என்றாலும் பாமரன் என்றாலும், வியாபாரி என்றாலும் ஹிஸ்புல்லாஹ்வின் அறிமுகத்தில் வேட்பாளரானால் வெற்றி! இல்லையேல் தோல்வியே! இதுதான் காத்தான்குடி சரித்திரம். எனவே அரசியல் வரலாற்றையும், அரசியல் ஞானத்தையும் திரும்பிப்பார்த்து காய்நகர்த்துவதை விட்டுவிட்டு, வேட்பாளர்களை விமர்சிப்பதிலேயே இவர்களின் பொன்னான நேரங்கள் வீணாகின!.
தன்னால் முடிந்ததை தனித்து நின்று இவ்வூரின் மகளிருக்காக உதவிகளைச் செய்துவரும் ஹிஸ்புல்லாஹ்வின் சகோதரியான சல்மா அமீர்ஹம்சா அவர்களுக்கு இவ்வூரில் குறிப்பிடத்தக்க வாக்குகள் இருக்கின்றன. அவர் நேரடியாகச் சென்று வாக்கு கேட்காவிட்டாலும் நன்றியுடன் சல்மா ஹம்சாவுக்காக வாக்களிக்கும் மகளிர் அணி அவருக்கு உண்டு. இதே போல் கட்சிமாறாத் தொண்டன் என அன்றிலிருந்து இன்றுவரை சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் இல் நிலையாய் இருக்கும் முபீன் ஆசிரியர் அவர்களுக்கும் இவ்வூரில் தனிப்பட்ட செல்வாக்குகள் இருக்கினறன.
இவர்கள் இருவர்களுக்கும் சுமார் 4000 வாக்குகள் இவ் ஊரில் இருக்கின்றன. இவ்வாக்குகள் சிரேஷ்ட தேர்தல்களில் தங்களின் செல்வாக்குகளை வெளிப்படுத்தாத போதும், உள்ளுராட்சித் தேர்தலில் பாரிய மாற்றத்தைத் தோற்றுவிக்கும்.
எனவே இம்மாகாண சபைத் தேர்தலில் தாங்கள் வெற்றி பெற வேண்டுமாயின் முஸ்லிம் காங்கிரஸ் இற்கு இவ்வூரில் இருக்கும் வாக்குவங்கியை முதலில் பலவீனப்படுத்த வேண்டும். ஏனெனில் ஹிஸ்புல்லாஹ் அவர்களுக்கிருக்கும் வாக்குகளை திசை திருப்புவதில் அர்த்தமிருக்காது. அது நடக்கவும் போவதில்லை. எனவேதான் முஸ்லிம் காங்கிரஸின் வாக்குகளை திசை திருப்பி தன்பக்கம் ஈர்த்துக்கொள்ள நல்லாட்சிக்காக மக்கள் இயக்கம் அதிக பிரயத்தனம் செய்தது. முஸ்லிம் காங்கிரஸில் இருந்து உடைந்து வரும் வாக்குகளே தமக்கு சேரும் வாக்குகளாக அமையும் என்ற எதிர்பார்ப்பில் தேர்தல் பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்பட்டன.
தேர்தல் பிரச்சாரங்கள்:
ஒவ்வொரு தேர்தல் பிரச்சாரங்களிலும் ஹிஸ்புல்லாஹ் அவர்களும், ரவூப் ஹக்கீம் மற்றும் முபீன் ஆகியோரும் இலக்கு வைக்கப்பட்டனர். ஆவேசமாக விமர்சிக்கப்பட்டிருந்தனர். மாறாக நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்துக்கு எதிரான தேர்தல் மேடைகளிலும் நல்லாட்சிக்கான மக்கள் இயக்கம் சொற்பிரயோகங்களால் தாக்கப்பட்டிருந்தன என்பதும் உண்மையே!
தொடர்ந்தும் பழிசுமத்தும் இவ்வாறான ஏச்சு-பேச்சுக்கள் உண்மையாக இருப்பினும் சிலருக்கு பிடிக்காமல் இருக்கலாம். தாங்கள் யாரையும் ஏசி விமர்சிப்பதில்லை என ஆரம்பத்தில் கூறியிருந்த இவ் இயக்கம், போகப் போக தனது கொள்கையில் மாற்றமும் ஆட்டமும் காணப்பட்டது. எனவே அமைதியான முறையில் விமர்சிக்காக தேர்தல் மேடைப் பிரச்சாரம் நிச்சயமாக நாகரிகமான தனது வெற்றிப்பயனத்துக்கு வழிசமைத்திருக்கும்.
இதைவிட முஸ்லிம் காங்கிரஸை திட்டமிட்டு தோற்கடிப்பதில் எடுத்த பிரயத்தனமே தனது வாக்குகள் குறைவிற்கு முக்கிய காரணமாகும். அடுத்தவன் குறைகளைத் தேடிப்பெறும் நேரத்தில் தனது சேவைகளையும் திட்டங்களையும் மக்கள் முன் எடுத்துக் கூற இவர்களுக்கு நேரமிருக்கவில்லை என்பதும் வீழ்ச்சிக்கான மற்றுமொரு காரணம்.
மாவட்டமட்ட போட்டி:
தனது பலத்தை மீண்டும் நிரூபிப்பதற்கு முன்னரே மாவட்ட மட்டத்தில் போட்டியிட தீர்மானித்தமையும் ஓர் தோல்விக்கான காரணமாகும். ஏனெனில் ஒவ்வொரு இடங்களிலும் குறிப்பிட்ட அரசியல் செல்வாக்குகள் அந்தந்தப் பகுதிகளில் செல்வாக்குச் செலுத்திவருவது கண்கூடு. இவைகளைத் தகர்த்தெறிய நினைத்தது வேடிக்கையிலும் வேடிக்கை. தனது கல்விச் சேவையால் இலங்கையின் பல இடங்களிலும் மாணவர்களும் நண்பர்களும் இருக்கினறனர். இவர்களை நம்பியே இத்தேர்தலில் வெளிமாவட்டங்களில் தேர்தலில் களமிறங்க இவர்கள் தீர்மானித்தமை இவர்களின் புத்திக்கு அப்பாற்பட்டது.
ஹிஸ்புல்லாஹ்வை தோற்கடிக்க அல்லது அவருக்கு சமனாக அரசியல் செய்ய இன்னும் ஊரில் முடியவில்லை. எனவே அயல் மாவட்டங்களில் இவர்களது தேர்தல் சேவையில் எடுத்த நேரங்களையும் சிரமங்களையும் தவிர்த்து ஊரில் பிரயோசனப்படுத்தி இருக்கலாம். ஊரில் மாற்றம் முதலில் வரவேண்டும். வெற்றிப்படிகளை சொந்தமண்ணில் கால் ஊன்றிய பின் வெளிமாவட்டங்கள் பற்றி யோசித்திருக்க முடியும். எனவே வெளிமாவட்ட தேர்தல் சிந்தனையால் உள்ளுரில் கோட்டை விட்டுவிட்ட ஓர் பரிதாப நிலையில் இன்று நல்லாட்சிக்கான மக்கள் இயக்கம் இருக்கின்றது.
இறுதிநேர துண்டுப்பிரசுரம்:
கடந்த வெள்ளிக்கிழமை ஜூம்ஆவின் போது ஹிஸ்புல்லாஹ் அவர்களுக்கு அனுப்பப்பட்ட கடிதத்தின் பிரதிகளை தேர்தலின் முதல் நாள் துண்டுப்பிரசுரங்களாக வெளியிட்டிருந்தமை ஓர் திருப்பமாக அமைந்தது.
இச்செயற்பாடு தேர்தல் விதிமுறைகளை மீறியதாக இலங்கையின் புகழ்பெற்ற ஊடகங்கள் சுட்டிக்காட்டி இருந்தன. ஊரிலும் இவ் இயக்கத்துக்கு எதிரானவர்களால் திட்டமிட்டு பழிசுமத்தி திரிபுபடுத்தப்பட்டது. ஓர் படித்த மட்டம் தேர்தல் விதிமுறைகளையே மீறிவிட்டார்களே என்ற ஓர் தப்பபிப்பராயம் மக்களிடத்தில் காட்டுத்தீ போல் பரவியது. இதனால் தளம்பல் நிலையிலிருந்த வாக்குகள் அதாவது எவர்களுக்காவது தன் வாக்கை அளித்துவிட்டுப்போவோம் என்ற நிலையிலிருந்த மக்கள் நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்துக்கு வாக்களிக்கவில்லை.
எனவே புதிய நவீனத்துவ அரசியலை இலங்கையில் அறிமுகப்படுத்திய நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தின் இத்தோல்வி அவர்களுக்கு மேலும் முன்னேறுவதற்கு ஒரு சந்தர்ப்பமாக அமையலாம். பலமிக்க எதிர்க்கட்சியே ஓர் நாட்டை நேர்வழிப்படுத்தும். எனவே நல்லாட்சிக்கான மக்கள் இயக்கம் இவ் ஊரின் பிரதான எதிர்க்கட்சி என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை. எனவே தனது கொள்கையில் மாற்றங்களை ஏற்படுத்தி எதிர்காலத்தில் பற்பல சேவைகளை எமது சமூகத்துக்கு வழங்கவேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பாகும்.
Leave a reply to Rifsy Cancel reply