பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ்விற்கு PMGGயினால் அனுப்பிவைக்கப்படுள்ள பகிரங்கக் கடிதம்

நல்லாட்சிக்கான மக்கள் இயக்கம் பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ்விற்கு பகிரங்கக் கடிதம் ஒன்றை இன்று காலை அவசரத் தபாலில் அனுப்பி வைக்கப்பட்டது.

இக்கடிதம் இன்று காத்தான்குடியின் சகல ஜும்ஆ பள்ளிவாயல்களிலும் ஜும்ஆ தொழுகையின் பின்னர் பொமக்கள் மத்தியில் பகிர்ந்தளிக்கப்பட்டது.

இதன்போது PMGGயின் சூறாசபை உறுப்பினர்கள், செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் ஆதரவாளர்கள் பங்கெடுத்துக்கொண்டனர்.

பிரதியமைச்சருக்கு அனுப்பிவைக்கப்பட்ட பகிரங்கக் கடிதம் எமது இணையத்தள பார்வையாளர்களுக்காக இங்கு பதிவேற்றப்படுகிறது.

அல்ஹாஜ். MLAM. ஹிஸ்புழ்ழாஹ் MA, MP அவர்கள்     ……………………………………07.09.2012

சிறுவர் அபிவிருத்தி மகளிர் விவகார பிரதியமைச்சர்,

பிரதியமைச்சர் அலுவலகம்,

காத்தான்குடி.

அஸ்ஸலாமு அலைக்கும்.

தங்களின் தொடரான பொய்ப்பிரச்சாரங்களும் எமது தொடர்ச்சியான அழைப்புக்களும்

தேர்தல் காலங்களிலும் ஏனைய காலங்களிலும் நீங்கள் திட்டமிட்ட வகையில் நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தின் மீது பல அபாண்டங்களையும் அவதூறுகளையும் விஷமத்தனமாகப் பிரச்சாரம் செய்து வருகிறீர்கள்.

இவ்வாறான பொய்ப் பிரச்சாரங்களை நீங்கள் மேற்கொள்ளும் போதெல்லாம் இது தொடர்பாக உங்களுடன் மக்கள் மன்றத்தில் பகிரங்கமாகக் கலந்துரையாடி உண்மையை நிரூபிப்பதற்கான பல அழைப்புக்களை எமது நல்லாட்சிக்கான மக்கள் இயக்கம் விடுத்தே வந்துள்ளது.

ஆயினும் நீங்கள் எமது எந்தவொரு அழைப்பிற்கும் உரிய பதில்களை அளிக்கத் தவறியுள்ளதோடு எந்தவொரு நேரடிக் கலந்துரையாடலுக்கும் முகங்கொடுத்து சமூகந்தராமல் இதுவரை நழுவியே வந்துள்ளீர்கள். மேலும் உங்களது விஷமத்தனமான பொய்ப்  பிரச்சாரங்களையும் நீங்கள் கைவிடவுமில்லை. பொய்களைச் சொல்லி மக்களை ஏமாற்றுவதையே உங்களின் மிகப்பெரும் பிரச்சார ஆயுதமாகவும் பயன்படுத்திக் கொண்டு வருகிறீர்கள்.

இந்த அடிப்படையில்தான் உம்முல் குறா பல்கலைக்கழகத்தின் கிளை ஒன்றினை காத்தான்குடியில் திறப்பது தொடர்பாக மிகத் தவறான பிரச்சாரத்தை கடந்த வருடம் நீங்கள் மேற்கொண்டதோடு நல்லாட்சிக்கான மக்கள் இயக்கம் அதனைத் தடுத்து விட்டதாக ஒரு அபாண்டத்தையும் எம்மீது சுமத்தினீர்கள்.

இதனை நிரூபிக்க பகிரங்கக் கலந்துரையாடலுக்கு கடந்த வருடம் டிசம்பர் மாதம் 30ம் திகதி வருமாறு உங்களுக்கு நாங்கள் அழைப்பு விடுத்ததோடு அதற்காக கலாச்சார மண்டபத்தினை முன்கூட்டியே பதிவு செய்து ஏனைய ஏற்பாடுகளையும் செய்திருந்தோம்.

அக்கலந்துரையாடலுக்கு முகங்கொடுக்கத் துணிவில்லாத நிலையில் உங்களின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் நகரசபைத் தவிசாளரைக் கொண்டு கலாசச்சார மண்டபத்தினை அராஜகமான முறையில் இழுத்து மூடச் செய்து கலந்துரையாடலுக்கு முன் வராமல் ஒளிந்து கொண்டீர்கள்.

எனினும் குறித்த தினத்தில் உங்களுக்கு முன்கூட்டியே எம்மால் அறிவிக்கப்பட்ட நேரமான இரவு 08:00 மணிக்கு கலாச்சார மண்டபத்திற்கு முன்பாக நாம் காத்திருந்த போதும் கூட நீங்கள் இறுதி வரை அங்கு வரவே இல்லை.

இந்நிலையில் இம்முறை கிழக்கு மாகாண சபைத் தேர்தல் பிரச்சாரங்களை நீங்கள் கடந்த றமழான் காலத்தில் ஆரம்பித்த வேளையில் “5% வெட்டுப்புள்ளி” போன்ற அப்பட்டமான பொய்களைக் கூறி றமழான் மாதத்தின் புனிதத்தையும் கருத்திற் கொள்ளாது மக்கள் மத்தியில் எமக்கெதிராகப் பிரச்சாரம் செய்தீர்கள். அதனை நாம் தெளிவான ஆதாரங்களுடனும், புள்ளி விபரங்களுடனும் மறுத்துரைத்து மக்களுக்குத் தெளிவுபடுத்தி முறியடித்தோம்.

அத்தோடு நிறுத்திக் கொள்ளாத நீங்கள் TRO எனும் அரசினால் தடை செய்யப்பட்ட அமைப்பிடமிருந்து 35 இலட்ச ரூபாய்களுக்கும் மேலான தொகையினை PMGG பெற்றுக் கொண்டதாக பாரதூரமான அபாண்டமொன்றை எம்மீது சுமத்தி இருந்தீர்கள்.

இந்த அபாண்டத்தை நிரூபிக்குமாறும் அல்லது இஸ்லாமிய வழியில் அமைந்த அழிவுச் சத்தியத்திற்கு முன் வருமாறும் உங்களுக்கு அழைப்பு விடுத்து அல்குர்ஆன் சொல்லுகின்றவாறு எங்களது பெண்களுடனும் குழந்தைகளுடனும் நாங்கள் ஜாமியுழ்ழாபிரீன் பள்ளிவாயல் முன்றலில் கடந்த ஜும்ஆத் தொழுகையின் பின்னர் உங்கள் வரவுக்காகக் காத்திருந்தோம்.

ஏற்கனவே இரண்டு நாட்களுக்கு முன்பாகவே கடிதம் மூலம் இச்சத்தியத்திற்கு தயாராகுமாறு உங்களுக்கு நாம் அழைப்பு விடுத்து ஊடகங்களையும் அழைத்திருந்த போதும், அப்போதும் கூட நீங்கள் வருகை தராமல் ஓடி ஒளிந்தீர்கள்.

பொய்களையும், அபாண்டங்களையும் மாத்திரமே அடிப்படையாகக் கொண்ட உங்களின் பிரச்சார  நடவடிக்கைளின் தொடர்ச்சியாக இந்த மாகான சபைத் தேர்தலுக்கான இறுதிப் பிரச்சாரக் கூட்டத்திலும் (05.09.2012) சட்டத்திற்குப் புறம்பாக நள்ளிரவிற்கு பின்னரும் கூட்டத்தை நடாத்திய நீங்கள் மீண்டும் மீண்டும் இந்த அத்தனை பொய்களையும், அபாண்டங்களையுமே அக்கூட்டத்திலும் கட்டவிழ்த்து விட்டுள்ளீர்கள்.

நீங்கள் இம்மேடையில் எம்மீது கூறிய அத்தனை குற்றச்சாட்டுக்களும் அப்பட்டமான பொய்யும், அபாண்டமானவையுமாகும். தேர்தல் பிரச்சார நடவடிக்கைகள் முற்றுப் பெற்றுள்ள நிலையில் எங்களால் உங்கள் இக்குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்க முடியாத சூழ்நிலையைப் பயன்படுத்தி மீண்டும் மீண்டும் பொய்களையும் அபாண்டங்களையும் சொல்லி இந்த அற்பமான தேர்தல் வெற்றிக்காக அல்லாஹ்வின் சாபத்தைச் சுமந்து கொள்கிறீர்கள்.

ஒரு சுமூகமான பகிரங்கக் கலந்துரையாடலுக்கான அழைப்பை தொடர்ச்சியாகவும், பகிரங்கமாகவும் நாங்கள் இத்தனை காலமும் உங்களுக்கு விடுத்து வருகின்ற போதிலும், நீங்கள் அதற்கெல்லாம் இதுவரை துணிவுடன் முகங்கொடுப்பதற்கும் பதிலளிப்பதற்கும் முன்வரவில்லை.

எனவே, உங்களுக்குப் பொருத்தமான ஒரு நேரத்தில் நீங்கள் விரும்பும் இடத்தில் உங்களின் பொய்ப்பிரச்சாரங்கள் மற்றும் அபாண்டமான குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக பகிரங்கக் கலந்துரையாடலொன்றை உங்களுடன் செய்வதற்கு நாங்கள் தயாராக இருக்கின்றோம் என்கிற செய்தியினையே இம்மடலின் ஊடாக உங்களுக்கு அறியத்தருகின்றோம்.

தயவு செய்து உங்களுக்கு வசதியான ஒரு நேரத்தில் இந்தக் கலந்துரையாடலுக்கான ஏற்பாடுகளைச் செய்யுமாறும், அதற்காக நீங்கள் எமக்கு அழைப்பு விடுக்கும்போது அதில் கலந்து கொள்வதற்கு எமது நல்லாட்சிக்கான மக்கள் இயக்கம் எப்போதும் தயாராகவே உள்ளது என்ற செய்தியினையும் இக்கடிதத்தின் மூலம் பகிரங்கமாகவே உங்களுக்குத் தெரிவித்துக் கொள்ள விரும்புகின்றோம்.

உண்மையின் மகத்துவத்தினை இறைவன் உங்களுக்கு உணர்த்த வேண்டும் எனவும், உண்மை பேசுகின்ற பக்குவத்தினையும், பழக்கத்தினையும் இனிமேலாவது இறைவன் உங்களுக்குத் தர வேண்டும் எனவும் பிரார்த்திக்கின்றோம். நன்றி. வஸ்ஸலாம்.

இவ்வண்ணம்,

சூறாசபை

நல்லாட்சிக்கான மக்கள் இயக்கம்

(குறிப்பு: இப்பகிரங்கக் கடிதம் இன்று 07.09.2012 வெள்ளிக்கிழமை பிரதியமைச்சர் அல்ஹாஜ். MLAM. ஹிஸ்புல்லாஹ் அவர்களுக்கும் பதிவுத் தபால் மூலம் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.)

-pmgg.org

Published by

3 responses to “பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ்விற்கு PMGGயினால் அனுப்பிவைக்கப்படுள்ள பகிரங்கக் கடிதம்”

  1. Ahamed althaf ameer Avatar
    Ahamed althaf ameer

    Have English translations also

  2. Ahamed althaf ameer Avatar
    Ahamed althaf ameer

    Let me know about your aims and objectives

  3. Ahamed althaf ameer Avatar
    Ahamed althaf ameer

    No comments

Leave a reply to Ahamed althaf ameer Cancel reply