அமைச்சுப் பதவியை இராஜினாமாச் செய்யக்கோரி ரவூப் ஹக்கீம் இற்கும் அழுத்தம்

-SHM

கிழக்குமாகாணசபைக்கான தேர்தல் களம் கிழக்கில் உச்சகட்டத்தில் பிரச்சார நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வரும் இந்நிலையில், அரசாங்கத்துடன் இணைந்திருந்து அமைச்சுப் பதவியையும், சுகங்களையும் அரசாங்கத்திடமிருந்து பெற்றுக்கொண்டு, அதே அரசாங்கத்தை தூற்றுவது இஸ்லாத்துக்கு முரணான விடயமும், மனிதாபிமானத்துக்கு அப்பாற்பட்ட செயல் எனவும் முஸ்லிம் காங்கிரஸ் இன் உயர்பீட உறுப்பினர்களால் விமர்சிக்கப்பட்டு வருகின்றன. சென்றவார இறுதியில் பிரதியமைச்சர் பசீர் சேகுதாவூத் தனது பதவியை இராஜினாமாச் செய்திருந்தார். தனது கட்சியின் கொள்கையை பின்பற்றுவதற்கும் முஸ்லிம் சமூகத்தின் சமகால பிரச்சினைகளை சட்ட ரீதியாக மேற்கொள்வதற்கும் பதவிகள் தடைக்கல்லாக இருந்து வருகின்றன.

அரசாங்கத்தில் இருந்துகொண்டு, பள்ளிவாயல் உடைப்புக்கள், ஆக்கிரமிப்புக்களை பகிரங்கமாக கண்டிக்கும்  நிலைமை இதுவரை அரசாங்கத்துடன் ஒட்டிக்கொண்டிருக்கும் அமைச்சர்களிடமிருந்து வரவில்லை. எனினும் வன்னி மக்களின் விடயத்தில் பிரதியமைச்சர் ரிஷாட் பதியுத்தீனைத் தவிர, எந்தவொரு முஸ்லீம் அமைச்சர்களும் வாய்திறக்கவில்லை என்பதும் தெட்டத் தெளிவும், வெட்கித் தலைகுணிய வேண்டிய விடயமாகவும் இருக்கின்றது. வடக்கு பிரச்சினைதானே! அதனை அவர்களே பார்த்துக் கொள்ளட்டும் என்ற ரீதியில் ஏனைய முழு, அரை முஸ்லிம் அமைச்சர்களின் நிலைப்பாடு இருப்பதும் கவலைக்குரியது!

இவ்வாறான விடயங்களை பகிரங்கமாக மக்களுடன் எடுத்துச் சென்று நீதியை நிலை நாட்டி, உண்மையை உணர்த்தும் ஓர் நோக்கில் முஸ்லிம் காங்கிரஸின் உயர்பீட உறுப்பினர்கள் தற்பொழுது நீதியமைச்சர் ரவூப் ஹக்கீம் அவர்களுக்கு அழுத்தம் கொடுத்து வருகின்றனர். எனினும் அவரது இறுதி முடிவு என்ன என்பது விரைவில் தெரியவரும்.

Published by

Leave a comment