மீண்டும் இணைந்துள்ள ஹிஸ்புல்லாஹ்-அப்துர் ரஊப் மௌலவி கூட்டணி: ஓர் ஆய்வு

-MMS

தனக்கென்று ஓர் புகழுடன் கடந்த 30 வருடங்களுக்கும் மேலாக காத்தான்குடியில் அசைக்க முடியாத இருப்பிடத்தைத் வைத்து மார்க்கத்திலும், அரசியிலிலும் செல்வாக்குச் செலுத்திவரும் மௌலவி அப்துர் ரஊப் மிஸ்பாஹி அவர்கள், இம்முறை இடம்பெற இருக்கும் கிழக்குமாகாணசபைத் தேர்தலிலும் வழமை போல தமது ஆதரவினை பேரம் பேசுதலின் பின்னர் பொ.ஐ.முன்னணிக்கு வழங்கி இருக்கின்றார்.

இது இவரது தனிப்பட்ட விருப்பமல்லாவிட்டாலும், ஊரின் அரசியலில் பிரதான கதாநாயகனாக இருக்கும் பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாவின் வற்புறுத்தல் மற்றும் அவரது ஆதரவாளர்களின் பலவந்தத்தால் தனது சுயமரியாதையை மீண்டும் இழப்பதற்கு தன்னை மௌலவி அவர்கள் தாரை வார்த்திருக்கின்றார்.

காத்தான்குடியின் தேர்தல்களங்களை பின்நோக்கி சுருக்கமாகப் பார்க்கும் போது, 1988 மாகாணசபைத் தேர்தலிலும், 1989 பொதுத் தேர்தலிலும் மௌலவி அப்துர் ரஊப் அவர்கள் ஐ.தே.க இற்கு தனது வெளிப்படையான ஆதரவினை வழங்கி வந்தார். 1994 உள்ளுராட்சித் தேர்தலில் சுயேச்சைக் குழுவில் தனித்துப் போட்டியிட்டு இரண்டாம் இடத்தைப் பெற்றார். மீண்டும் 1994 இல் இடம்பெற்ற பொதுத் தேர்தலில் ஐ.தே.க இற்கு ஆதரவு வழங்கி வந்தார்.

காத்தான்குடியில் தௌஹீத் கொள்கைகள் வளர்ச்சியடைந்திராத 2000 ஆண்டிற்குட்பட்ட காலப்பகுதியில் ஊரில் இரு கொள்கைகளே இருந்து வந்தன. ஒன்று ஜம்மியத்துல் உலமாவின் சுன்னத் வல் ஜமாஅத். மற்றையது மௌலவி அப்துர் ரஊப் மௌலவியின் ‘வஹ்ததுல் வுஜூத்’ எனும் எல்லாம் அவனே எனும் கொள்கை.

ஹிஸ்புல்லாஹ் அவர்கள் சுன்னத்வல் ஜமாஅத் கொள்கையில் இருந்ததாலும் ஊரில் அநேகமானவர்கள் ஹிஸ்புல்லாவை ஆதரித்ததாலும் அப்துர் ரஊப் மௌலவி அவர்கள் ஹிஸ்புல்லாவை எதிர்த்துவந்தார். எப்போதும் தனித்து செயற்பட விரும்பும் மௌலவி அவர்கள் 2004 வரைக்கும் ஹிஸ்புல்லாஹ்வுக்கு எதிராக செயற்பட்டு வந்தார்.

காத்தான்குடியில் இடம்பெற்ற 2004 மார்க்கப் பிரச்சினையின் உச்ச கட்டத்தில் தனதும் தனது ஆதரவாளர்களின் உயிரையும் காத்து, தனக்கிருந்த ‘முர்தத்’ பட்டத்தையும் அகற்றி, ஓர் புத்தம் புது மௌலவியாக பாதுகாப்பாக காத்தான்குடிக்கு ஹிஸ்புலல்hஹ் மீண்டும் மௌலவி அப்துர் ரஊப் அவர்களை அழைத்து வந்தார். இதன் பின்னர் 2006ல் இடம்பெற்ற உள்ளுராட்சித் தேர்தலில் ஹிஸ்புல்லாஹ்வுடன் சேர்ந்து முஸ்லிம் காங்கிரஸை ஆதரித்தார். ஊர்வலமும் வந்தார். அன்றிலிருந்து இன்றுவரைக்கும் அரசியலில் தனித்து ஓர் முடிவைப் பெறமுடியாத பலவீனத்தில் மௌலவி அப்துர் ரஊப் அவர்கள் இருப்பது வெளிப்படை உண்மை!

கடந்த உள்ளுராட்சி தேர்தலில் தனது சார்பான வேட்பாளர் ஜெஸீம் அவர்கள் அதிக வாக்குகளைப் பெற்று முதலாமிடத்தில் இருந்தபோதிலும் இன்றுவரைக்கும் பிரதித் தவிசாளராக இருப்பது மௌலவி தரப்பின் இயலாமையாகும். இதேபோல் கடந்த உள்ளுராட்சித் தேர்தலில் ஜெஸீம் அவர்களை ஹிஸ்புல்லாஹ் தோற்கடிப்பதற்கு எடுக்கப்பட்ட  பிரயத்தணங்களையும் மௌலவி தரப்பு அறியாதவையல்ல! வாய்திறந்து கேட்கமுடியாதவை!!

எனினும் தான் தனித்து ஹிஸ்புல்லாஹ் அல்லாத ஆதரவாளர்களை ஆதரித்தால் எத்தகைய சவால்களையும் சிக்கல்களையும் மீண்டும் இவ்வூரில் சந்திக்க நேரிடும் என்பதும் மௌலவி அவர்களுக்குத் தெரியாததல்ல!

அசாட்சாலி கொழும்பிலிருந்து பள்ளிவாயல் கந்தூரிக்கு வருவதையும் உதவித் தொகைகளையும் வழங்குவதைவிடவும், பசீர் சேகுதாவூத் ஏறாவூரிலிருந்து கந்தூரிக்கு வருவதையும், உதவித் தொகைகளை வழங்குவதைவிடவும், ஹிஸ்புல்லாஹ் அவர்கள் ஊரிலிருந்து மேற்படி அனைத்தையும் தமக்கு சார்பாக எப்போதும் வழங்கி வருவதால் தான் இம்முடிவை எடுத்திருப்பதாக மௌலவி அப்துர் ரஊப் வட்டாரங்கள் மெல்லவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல் தற்பொழுது தெரிவிக்கின்றன.

எனினும் மௌலவி அவர்களுக்கு எவ்வித உள்ளுர் அச்சுறுத்தலும் இன்றி தனகு கொள்கையை உலகுக்குப் பறைசாற்றுவதற்கு 2006ல் இருந்து ஹிஸ்புல்லாஹ் அவர்கள் பக்கத்துணையாக இருப்பது அப்பட்டமான வெளிச்சம். இதனையே மௌலவி அவர்களும் அவர்களது ஆதரவாளர்களும் தமக்குச் சார்பான நியாயப்படுத்தும் விடயமும்கூட!

எனவே ஊர்மக்கள் எதிர்பார்த்தது போலவே மௌலவி அப்துர் ரஊப் அவர்கள் ஹிஸ்புல்லாஹ்வின் வேண்டுகோளுக்கிணங்க தலைசாய்த்திருக்கின்றார். இதனால் காத்தான்குடி தேர்தல் களத்தில் ஏதாவது மாற்றம் நிகழுமா? அது எத்தகைய மாற்றங்களை ஏற்படுத்தும்? அல்லது மௌளலி அப்துர் ரஊப் – ஹிஸ்புல்லாஹ் கூட்டணியால் எதிர்தரப்பு வாக்கு வங்கி பலப்படுமா? என்பதை விரைவில் எதிர்பாருங்கள்.

 

 

 

Published by

Leave a comment