ஹுனைஸ் எம்.பி. உரையாற்றியது தொடர்பில் சபையில் சூடான விவாதம்

அரைமணி நேரம் வாதப் பிரதிவாதங்கள்; ஆராய்ந்து கட்டளை பிறப்பிப்பதாக சபாநாயகர் அறிவிப்பு

வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஹுனைஸ் பாரூக் கடந்த ஜுலை மாதம் 19ம் திகதி பாராளுமன்றத்தில் சபை ஒத்திவைப்பு வேளைப் பிரேரணை முடிந்த பின்னர் சபையில் உரையாற்றியது குறித்து சபையில் நேற்று கடும் வாதப் பிரதிவாதங்கள் ஏற்பட்டன.

சுமார் அரை மணி நேரம் நீடித்த இவ்வாதம் பிரதிவாதங்கள் குறித்து ஆராய்ந்து பின்னர் கட்டளையொன்றைப் பிறப்பிப்பதாக சபாநாயகர் சமல் ராஜபக்ஷ நேற்று சபையில் அறிவித்தார். அதனைத் தொடர்ந்து சபை நடவடிக்கைகள் சுமுகமாக இடம்பெற்றன.

சபாநாயகர் தலைமையில் பாராளுமன்றம் நேற்று பிற்பகல் 1.00 மணிக்குக் கூடியது. சபை அமர்வின் வழமையான தொடக்க நிகழ்வுகளை தொடர்ந்து எதிர்க்கட்சி தலைவர் ரணில்விக்கிரமசிங்க சபையில் ஒழுங்கு பிரச்சினை எழுப்பினார்.

* எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க:

பாராளுமன்றத்தில் சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணைக்கு சம்பந்தப்பட்ட அமைச்சர் பதிலளித்ததும் அன்றைய சபை நடவடிக்கைகள் நிறைவடையும். இதுவே வழமை ஆதலால், கடந்த மாதம் ஜுலை மாதம் 19ம் திகதி வன்னி மாவட்ட எம்.பி. ஹுனைஸ் பாரூக் பாராளுமன்ற நடைமுறைக்கும், நிலையியற் கட்டளைகளுக்கும் முரணான வகையில் சபையில் உரையாற்ற இடமளிக்கப்பட்டுள்ளார்.

இவ்வாறு உரையாற்ற இடமளித்தது அச்சமயம் சபைக்குத் தலைமை தாங்கிய உறுப்பினர் விட்ட தவறாகும். அந்த சமயத்தில் சபைக்குத் தலைமை தாங்கிய உறுப்பினர் குழப்ப நிலையிலேயே இருந்துள்ளார். பாராளுமன்றத்தை நீதிமன்றத்தால் கட்டுப்படுத்த முடியாது என்றாலும் நீதித்துறை செயற்பாடுகளை விமர்சிப்பதை ஏற்க முடியாது.

* ஏ. எச். எம். அஸ்வர் (ஐ.ம.சு.மு) எம்.பி:-

அந்த சமயத்தில் சபைக்கு தலைமை தாங்கியவன் நானே, ஆளும் கட்சி பிரதம கொறடா அனுமதி வழங்கியதற்கு ஏற்பவே ஹுனைஸ் பாரூக் எம்.பி.க்கு சபையில் உரையாற்ற இடமளிக்கப்பட்டது.

ஒழுங்கு பிரச்சினை இந்த நேரத்தில் தான் எழுப்பவேண்டும் என்று நிலையியற் கட்டளைகளில் குறிப்பிடப்பட்டில்லை. நான் நிலையியற் கட்டளைகளுக்கு ஏற்ப செயற்பட்டேன். அதற்கு முரணாக செயற்படவில்லை. அதனால் எதிர்க்கட்சி தலைவரின் இச்சம்பவம் குறித்த உரையை ஹன்சார்ட்டிலிருந்து நீக்க வேண்டும்.

அன்று ஹுனைஸ் பாரூக் எம்.பி. தேசிய முக்கியத்துவம் வாய்ந்த விடயம் குறித்து சபையில் உரையாற்ற வேண்டும் எனக் குறிப்பிட்டு ஒழுங்குப் பிரச்சினை எழுப்பினார்.

அதற்கேற்பவே உரையாற்ற இடமளிக்கப்பட்டது. இதற்கு முன்னரும் பலர் இவ்வாறு இச்சபையில் உரையாற்றியுள்ளார்கள்.

* லக்ஷ்மன் கிரியெல்ல (கண்டி மாவட்ட ஐ.தே.க.) எம்.பி.:-

பாராளுமன்ற நிலையியற் கட்டளைகளின் படி சபை அமர்வு நிறைவுற்ற பின்னர் தேசிய முக்கியத்துவம் மிக்க பிரச்சினையை சபைக்குக் கொண்டுவர முடியாது.

* அமைச்சர் டிலான் பெரேரா:-

இது பாராளுமன்றத்திற்குள் இடம்பெற்றுள்ள ஒரு சம்பவம். இச்சம்பவம் குறித்து வெளியார் கேள்வி எழுப்ப முடியாது. பாராளுமன்ற ஹன்சாட்டில் வெளியான விடயத்தை இங்கு கொண்டுவந்து கேள்வி எழுப்பத் தொடங்குவது நல்ல அறிகுறியல்ல. எல்லாரும் பழைய ஹன்சார்ட்களை கொண்டுவந்து கேள்வி எழுப்பத் தொடங்கினால்சபையின் நிலைமை என்னவாகும்.

* எம். சுமந்திரன் (த.தே.கூ.) எம்.பி.:-

எதிர்க்கட்சித் தலைவர் இச்சபைக்குள் இடம்பெற்ற விடயம் குறித்து கேள்வி எழுப்பினார். இப்பிரச்சினை குறித்து வெளியிலிருந்து கேள்வி எழுப்பப்படவில்லை.

* ஆளும்கட்சி பிரதம கொறடா அமைச்சர் தினேஷ்குணவர்தன:-

சபை அமர்வு நிறைவுறும் வேளையில் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் வந்து தேசிய முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சினை குறித்து உரையாற்ற இடமளிக்குமாறு கோரும் போது இடமளிப்பது வழமை. இதற்கு முன்னரும் பலர் இவ்வாறு உரையாற்றியுள்ளார்கள், அந்த அடிப்படையில் தான் ஹுனைஸ் பாரூக் எம்.பிக்கு உரையாற்ற இடமளிக்கப்பட்டது. அவசர நிலையில் எந்த நேரத்திலும் உரையாற்ற முடியும்.

* எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க:-

குறித்த பாராளுமன்ற உறுப்பினர் மன்னார் சம்பவம் குறித்து அந்த சமயத்தில் உரையாற்றவில்லை. அவர் அச்சமயம் வேறு ஒருவருக்கு பதிலளித்தே உரையாற்றியுள்ளார் என்றார். இச்சமயம் சபாநாயகர் இவ்விடயத்தில் கவனம் செலுத்தி பின்னர் கட்டளை பிறப்பிக்கின்றேன் என்றார்.

-தினகரன்

 

 

 

Published by

Leave a comment