மன்னார் நீதவான் தொடர்பில் ஹுனைஸ் எம்.பி. சிறப்புரிமைப் பிரச்சினை

சபையில் பேசும் விடயங்களை எவரும் வெளியில் கேள்விக்குட்படுத்த முடியாது

பாராளுமன்ற உறுப்பினர்கள் பாராளுமன்றத்தில் பேசும் விடயங்கள் குறித்து எவருக்கும் கேள்வி எழுப்பவோ அச்சுறுத்தவோ உரிமை கிடையாது. ஹுனைஸ் பாரூக் எம்.பி.யின் சிறப்புரிமை மீறப்பட்டுள்ளதோடு இந்தவிடயம் குறித்து சிறப்புரிமை குழுவினாலும் ஆராய முடியும் என சபாநாயகர் சமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் ஆற்றிய உரை தொடர்பில் மன்னார் நீதவான் தன்னிடம் விசாரணைசெய்த தினூடாக தனது சிறப்புரிமை மீறப்பட்டுள்ளதாக கூறி ஹுனைஸ் பிரச்சினையொன்றை முன்வைத்தார். இதுதொடர்பில் பதிலளித்தபோதே சபாநாயகர் மேற்கண்டவாறு கூறினார்.

சகல பாராளுமன்ற உறுப்பினர்களினதும் உரிமைகளையும் கெளரவத்தையும் பாதுகாக்க நடவடிக்கைஎடுப்பதாகவும் சபாநாயகர் கூறினார். இங்கு பேசும் விடயம் தொடர்பில் எம்.பி. ஒருவரை அச்சுறுத்த எவருக்கும் உரிமை கிடையாது எனவும் அது அவரின் சிறப்புரிமையை மீறுவதாகும் என்றும் சபாநாயகர் குறிப்பிட்டார்.

ஹுனைஸ் பாரூக் எம்.பி.

தனது சிறப்புரிமை பிரச்சினையை முன்வைத்த ஹுனைஸ் பாரூக் எம்.பி.

கடந்த ஜூலை 31 ஆம் திகதி 5 சட்டத்தரணிகளுடன் நான் மன்னார் நீதிமன்றத்திற்கு ஆஜராகியிருந்தேன். இங்கு எனது பெயர் குறிப்பிடப்பட்ட போது என்னைப் பார்க்க வேண்டுமென சத்தமான குரலில் நீதவான் குறிப்பிட்டார்.

நீ என்னைப் பற்றி பாராளுமன்றத்தில் பேசினீரா? மன்னார் ஆர்ப்பாட்ட ஊர்வலத்தில் நீயும் இருந்தீரா? என அவர் கடுமையான தொனியில் கேள்வி எழுப்பினார். பத்திரிகைகளில் இது தொடர்பான செய்தி இருந்ததாகவும் அவர் கூறினார். இந்த விடயம் தொடர் பிலான சட்டப் பிரச்சினை குறித்துபேச வேண்டுமென நான் கூறியபோது நீதவான் என்னை பார்த்து சத்தமிட்டார். இதன் போது சிராஜ் நூர்தீன் எனும் சட்டத்தரணி தலையிட்டார். அவர் ஒரு சட்டத்தரணி மற்றும் பாராளுமன்ற உறுப்பினரும் கூட, எனவே அவ்வாறு பேசுவது உகந்ததல்ல என்ற போது உங்களுடன் ஆலோசனை தேவையில்லை என்று நீதவான் கூறினார்.

பாராளுமன்ற உறுப்பினரின் சிறப்புரிமைக்கு முரணாகவே நீதவான் நடந்து கொண்டார். அதனால் இந்த சிறப்புரிமையை சபையில் முன்வைக்கிறேன். மன்னார் மாவட்ட மக்கள் பிரதிநிதியான நான் அப்பகுதியில் நீண்ட காலமாக செயற்பட்டு வருகிறேன். நான் சட்டத்தரணி என தெரிந்தும் நீதவான் அவ்வாறு நடந்து கொண்டதன் மூலம் பாராளு மன்றத்திற்கு அவமதிப்பு செய்யப்பட்டுள்ளது. பாராளுமன்ற சிறப்புரிமையும் மீறப்பட் டுள்ளது என்றார்.

எதிர்க்கட்சி தலைவர்
எதிர்க்கட்சி தலைவர் ரணில் விக்ரமசிங்க கூறியதாவது;

ன்னார் நீதவான் தொடர்பிலான இந்தப் பிரச்சினை பாரதூரமான விடயமாகும். எமது உறுப்பினர் ஒருவரின் உரிமை தொடர்பிலான பிரச்சினையில் நான் தலையிட்டுகுரல்கொடுப்பேன். ஆனால் இங்கு வேறு பிரச்சினையே உள்ளது என்றார்.

ஏ. எச். எம். அஸ்வர் எம்.பி.
ஏ. எச். எம். அஸ்வர் எம்.பி. கூறியதாவது;

எதிர்க்கட்சித் தலைவர் சகல நிலையியற் கட்டளை சட்டங்களையும் மீறுகிறார். நீதவான் ஒருவரினால் எம்.பி. ஒருவரின் சிறப்புரிமை மீறப் பட்டது தொடர்பில் இங்கு பேச அவருக்கு உரிமை உள்ளது. இங்கு பேசும் விடயம் குறித்துவேறு இடத்தில் கேள்வி எழுப்ப முடியாது.

மன்னாரில் இருந்து முஸ்லிம்களை துரத்தும் சதித்திட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவரும் ஒரு பங்காளியாக உள்ளார் என்பதை சபையில் நிரூபித்துள்ளார். ஆனால் கிழக்கிற்கு சென்று முஸ்லிம்களிடம் வாக்கு கேட்கிறார் என்றார்.

–தினகரன்

 

 

 

Published by

Leave a comment