கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தனித்துப் போட்டியிடவேண்டுமென அக்கட்சியின் மூத்த உறுப்பினர்கள் பலர் கட்சித் தலைவர் ரவூப் ஹக்கீமிடம் வலியுறுத்தியிருந்தனர்.
இதனையடுத்து, முஸ்லிம் மக்களின் முக்கியமான பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்கு அரசு உறுதிப்பாட்டை வெளிப்படுத்துவதென்றும், அதற்கு அடிப்படையாக பரஸ்பர புரிந்துணர்வு ஒப்பந்தமொன்றைச் செய்துகொள்வதென்றும் இணக்கம் காணப்பட்டது.
இதற்கமைய, அரசுடன் செய்துகொள்ள வேண்டிய ஒப்பந்தத்தைத் தயாரிப்பதற்கான பணிகளில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் நேற்று முழுவீச்சில் ஈடுபட்டது. பெரும்பாலும் இன்று இந்த ஒப்பந்தத்தின் நகல் அரசின் கவனத்திற்கு கொண்டுவரப்படும். பின்னர் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் செயலாளருடன் முஸ்லிம் காங்கிரஸ் முக்கியத்துவம் வாய்ந்த பேச்சுகளை நடத்தவுள்ளது.
நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கைக்கமையவும் முஸ்லிம் மக்கள் தொடர்பில் கட்சியில் மேற்கொள்ளப்பட்டுள்ள சிபார்சுகளையும் நடைமுறைப்படுத்தல், 13 ஆவது திருத்தத்தின் அமுலாக்கம், குறிப்பாக மாகாணங்களுக்கான காணி, பொலிஸ் அதிகாரங்களின் தேவை, கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம் முதலமைச்சரின் வகிபாகம் என்பன இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளதாக முஸ்லிம் காங்கிரஸின் உயர்மட்ட வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம், வெறுமனே ஒரு சாதாரண விடயமாக இருக்காது. இவற்றை ஏற்றுக்கொள்வதாக அரசு எங்களுக்கு எழுத்துமூலம் உத்தரவாதம் தரவேண்டும். ஏனெனில், நாங்கள் இந்த அரசுடன் இணையும்போது எந்த ஒப்பந்தங்களையும் செய்துகொள்ளவில்லை.
எனவே, இந்தக் கோரிக்கைகளுக்கு அரசு உடன்படாவிட்டால் கிழக்கில் தனித்துப் போட்டியிடுவதைத் தவிர வேறு வழியில்லை. என்று ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் உயர்மட்டப் பிரமுகர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.
எனினும் கட்சிக்குள் உட்பூசல்கள் இருந்துவருவதும் குறிப்பிடத்தக்கது.
![slmc logo[1]](https://yourkattankudy.com/wp-content/uploads/2011/10/slmc-logo1.jpg?w=64&h=79)
Leave a comment