அமெரிக்கா செல்வதற்கான வீசாவை பெறுவதில் தாமதம் ஏற்பட்டிருப்பதால் ரி20 உலகக் கிண்ணத்தில் பங்கேற்கும் இலங்கை அணி வீரர்கள் மற்றும் உதவி பணியாளர்கள் சிலர் தொடர்ந்து நாட்டிலேயே தங்கியுள்ளனர். இது இலங்கையின் ரி20 உலகக் கிண்ண ஏற்பாடுகளில் பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது.
இதில் பாதிக்கப்பட்ட வீரர்களில் முன்னணி வீரர் குசல் மெண்டிஸும் உள்ளார். அவர் அமெரிக்கா சென்றிருக்கும் அணியுடன் இல்லாதது அணியின் தயார்படுத்தல்களில் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.
ரி20 உலகக் கிண்ண போட்டி அமெரிக்கா மற்றும் மேற்கிந்திய தீவுகளில் எதிர்வரும் ஜூன் 1 தொடக்கம் 29 ஆம் திகதிவரை நடைபெறவுள்ளது. இந்தத் தொடர் நெருங்கியுள்ள நிலையில், மெண்டிஸ் அணியுடன் இணைவதில் ஏற்பட்டிருக்கும் தாமதம் 11 பேர் கொண்ட கடைசி அணியை திட்டமிடுவதில் பாதிப்பை செலுத்தியுள்ளது.
இது தொடர்பில் ஏமாற்றத்தை வெளிப்படுத்தி உள்ள இலங்கை கிரிக்கெட் சபை, வீசா நடைமுறையை விரைவுபடுத்தத் தவறியது தொடர்பில் சர்வதேச கிரிக்கெட் கௌன்ஸில் (ஐ.சி.சி.) மீது குற்றம்சாட்டியுள்ளது. பங்கேற்கும் அனைத்து நாடுகளின் அணிகளினதும் வீசா வசதிகளை வழங்குவதற்கு ஐ.சி.சி. உடன் போட்டியை நடத்தும் அமெரிக்க கிரிக்கெட் சபையும் பொறுப்பாகும். தற்போது இந்தப் பிரச்சினையை தீர்ப்பதில் அந்த நிர்வாகங்கள் பெரும் அழுத்தத்தை சந்திக்க ஆரம்பித்துள்ளன.
சில வீரர்களுக்கு வீசா வழங்குவதில் ஏற்பட்டிருக்கும் தாமதம் குறித்து கொழும்பில் இருக்கும் அமெரிக்க தூதரக அதிகாரிகளுடன் இலங்கை அரசு தொடர்பை ஏற்படுத்தி இருப்பதாக தெரியவருகிறது. இது தொடர்பில் முறையான பதிலுக்காக காத்திருப்பதாகவும் கூறப்படுகிறது. இதுவரையில் ரி20 உலகக் கிண்ணத்தில் பங்கேற்கும் அணிகளில் இலங்கையில் மாத்திரமே வீசா தாமதம் ஏற்பட்டிருப்பதோடு மற்ற அணிகள் அமெரிக்காவை நோக்கி பயணிக்க ஆரம்பித்துள்ளன.
ரி20 உலகக் கிண்ணம் முதல் முறை அமெரிக்காவில் நடத்தப்படுவது முக்கியமான மைல்கள் என்றும் அது கிரிக்கெட் வளர்ச்சிக்கு உதவும் என்றும் பாராட்டப்படுகிறது. என்றாலும் சுமூகமான பயண ஏற்பாடுகளை செய்வதில் ஏற்பட்டிருக்கும் குழப்பம், முழு ஏற்பாட்டு ரீதியான பிரச்சினைகளை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு தீர்வு காண்பதில் இலங்கை கிரிக்கெட் சபையும் நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது. காலம் கடந்து செல்லும் சூழலில் அவசர நடவடிக்கை எடுப்பதற்கு இலங்கை கிரிக்கெட் சபை, சர்வதேச கிரிக்கெட் கௌன்ஸிலை வலியுறுத்தி வருகிறது.
ரி20 உலகக் கிண்ணத்தில் பங்கேற்பதற்காக இலங்கை அணி கடந்த மே 14 ஆம் திகதி ஐக்கிய அரபு இராச்சியம் வழியாக அமெரிக்காவை நோக்கி புறப்பட்டுச் சென்றது. இதில் குசல் மெண்டிஸ் உடன் அசித்த பெர்னாண்டோவுக்கு இன்னும் வீசா கிடைக்காத நிலையில் தொடர்ந்தும் இலங்கையில் தங்கி உள்ளனர். அதேபோன்று இந்தியாவில் நடைபெற்று வரும் ஐ.பி.எல். தொடரில் பங்கேற்கும் இலங்கை வீரர்கள் இன்னும் இலங்கை அணியுடன் இணையவில்லை. அவர்கள் அங்கிருந்து நேரடியாக இலங்கை அணியுடன் இணைவார்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
ரி20 உலகக் கிண்ணத்தில் இலங்கை அணி தனது முதல் போட்டியில் எதிர்வரும் ஜூன் 3 ஆம் திகதி தென்னாபிரிக்க அணியை எதிர்கொள்ளவுள்ளது. இதற்காக முன்கூட்டியே அமெரிக்கா சென்றிருக்கும் இலங்கை அணி அங்கு பயிற்சி முகாம் ஒன்றை நடத்துகிறது.
Leave a comment