உலமா சபையின் பரதநாட்டிய அறிக்கை பார்த்தேன்
ஆமாம். அது இஸ்லாமிய சமூகத்தின் சீர்திருத்தம் பற்றி அதிகம் பேசுகின்ற மௌலவி அப்துல் ஹமீத் ஷரயீ அவர்களின் உரை ஒன்றில் இடம் பெற்ற பரத்திகள் நாட்டியம் பற்றிய #சர்ச்சை பேச்சுக்கான எதிர் அறிக்கையாக இருந்தது.
இந்த சபையினர் எதற்கு அறிக்கை விட வேண்டுமோ அதற்கு அறிக்கை விட மனம் இல்லாதவர்கள் என்பதை அவர்களின் பல நடவடிக்கைகள் மூலம் அறிந்து கொள்ள முடியும்.
ஹமீத் மௌலவி ஒரு மார்க்கத்தை இழிவுபடுத்திப் பேசவில்லை. அப்படிப் பேசி இந்து சமய மக்களின் மனம் புண்பட்டிருப்பின் அந்து சமூகத்திடம் அவர் பகிரங்கமாக மன்னிப்பும் கோரிவிட்டார். அது முடிந்த கதை.
முஸ்லிம் சமூகம் மத நல்லிணக்கத்தோடு வாழ வேண்டியவர்கள் என்பதை வலியுறுத்தி அறிக்கை விடுவதை நாம் என்றும் வரேவேற்போம்.
உலமா சபையினரோ தமக்குத் தேவையான மௌலவிகளை
உயர் சபையில் வைத்துக் கொள்வர்.
பல கோடி ஆட்டை போட்ட வழக்கு நிலுவையிலுள்ள மௌலிகளும் அந்த சபையில் இடம் பெறத் தவறுவதில்லையாம்.
இவர்களை திருத்த எந்த நடவடிக்கையும் எடுப்பதுமில்லை.
குர்ஆன், ஹதீஸை இயன்ற அளவு உயிர்ப்பிக்க வேண்டிய உலமா சபையினர் தப்லீக் ஜமாத்தின் சிந்தனைக் கூடமாக மாறி இருப்பதை பலர் சுட்டிக் காட்டுகின்றனர்.
தப்லீக் ஜமாத் சகோதரர்கள் அரபு நாட்டு நீண்ட ثوب தோப் ஆடைகள் அணிந்திருந்த காலத்தில் பொதுபலசேனா போன்ற அமைப்பினர் இலங்கை என்ன அரபு நாடா? எனக் கேட்டனர்.
தராதரம் பார்க்காமல் அனைவராலும் அணியப்படும்
அந்த வெளிவேஷ ஆடைகளினால் இனங்களுக்கிடையில் முறுகல் நிலை தோன்றுவதைக் கண்டு கொள்ளாத, அதற்காக எந்த அறிக்கையும் விடாத முதுகெலும்பு தேய்ந்த சபைக்கு முடிந்து போன பிரச்சினைக்கு அறிக்கை விட தெம்பு வந்தது என்றால் அவர் குர்ஆன், ஹதீஸ் போதிக்கும் தவ்ஹீத் கொள்கை சார்ந்த மௌலவி என்பதனாலா? என்ற சந்தேகம் எழுகின்றது.
இந்த சபையினர் தப்லீக் ஜமாத்தில் உள்ள முக்கிய புள்ளி ஒருவர் மரணித்தால் அதற்காக காயிப் ஜனாஸா தொழுமாறு அறிவிப்பர்.
ஆனால் நாட்டு மக்களுக்கு பல நூறு அநாதைகளுக்கும் அளப்பெரிய சேவையாற்றிய,
பயங்கர வாதத்தை ஆதரிக்காத
இஸ்லாமிய அமைப்பான அன்ஸாருஸ்ஸுன்னா அநியாயமாக மூடப்பட்ட போதும் முஸ்லிம்கள் அநியாயமாக சிறையில் அடைக்கப்பட்ட போதும்
வாயில் கொழுக்கட்டை வைத்தவன் போல மௌனம் காத்தனர் . ஆனால் அந்த அமைப்பின் முக்கிய தாயிக்கள் சிலர் இந்த சபையில் நிறைவேற்றுக் குழு அங்கத்தவர்களாக இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்க விசயமாகும்.
தமது கொள்கை சார்ந்தோர் என்றால் மடை திறந்த வெள்ளம் போல தேடல் புடலாக செயற்படும் ஓரங்கமான செயற்பாட்டைத் தவிர வேறு என்ன இவர்களிடம் காண முடியும்?
ஜனாஸாவை எரிப்பதை நாம் ஆதரிக்க மாட்டோம் என அறிக்கை விட வேண்டிய இந்த சபையின் தலைவர் ஜனாஸாவின் சாம்பலைத் தாருங்கள் எனக் கேட்டாரே!
ஆனால் இந்த அப்துல் ஹமீத் மௌலவிதான் இந்த சபையின் சாம்பல் ஃபத்வா கடுமையாக விமர்சிக்க பட்ட போது அதனை எதிர்த்து தைரியமாக பேசினாராம்.
சரி! இந்த சபையில் உள்ள சிலர்
முகம் மூடி மாணவிகளை பாடசாலை அனுப்ப வேண்டும் என்ற இறுக்கமான நிலைப்பாடு உள்ளவர்களாச்சே! நல்ல விஷயம்!
அப்படி இருக்க முஸ்லிம் ஆசிரிய, ஆசிரியைகள் மாணவிகள் சேர்ந்து போடும் ஆட்டத்திற்கு இஸ்லாமிய சட்டம் என்ன என்றும் அறிக்கை விடுங்கள்? பெண் ஊடகவியலாளர் ஒருவர் சமூக வலைத் தளங்களில் இஸ்லாமிய நடைமுறைகளை பகிரங்கமாக விமர்சிக்கின்றாரே. அவருக்கு ஒரு கண்டன அறிக்கை விடாதது ஏன்?
எம்.ஜே.எம். ரிஸ்வான் மதனி
23/11/2023


Leave a comment