மாவனல்லையில் ஜனாதிபதி வேட்பாளர் ஹிஸ்புல்லாஹ் ஏற்பாடு செய்த தேர்தல் பிரசாரக் கூட்டம், ஊர் மக்களின் கடும் எதிர்ப்பின் காரணமாக கை விடப்பட்டது

மாவனல்லையில் ஜனாதிபதி வேட்பாளர் ஹிஸ்புல்லாஹ் ஏற்பாடு செய்த தேர்தல் பிரசாரக் கூட்டம், அந்த ஊர் மக்களின் கடும் எதிர்ப்பின் காரணமாக கை விடப்பட்டது. மாவன்னலை ராழியா வரவேற்பு மண்டபத்தில் இந்தக் கூட்டம் நேற்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஜனாதிபதி வேட்பாளர் ஹிஸ்புல்லாவின் இணைப்பாளர் ஒருவரினால் இந்த கூட்டத்தை நடாத்துவதற்கு மண்டபத்துக்கான கட்டணங்களும் செலுத்தப்பட்டிருந்தன.

இந்த விடயத்தை அறிந்த ஊர் மக்கள், குறிப்பிட்ட இணைப்பாளரை கடுமையாக எச்சரித்ததுடன், இனிமேல் இவ்வாறான கூட்டங்களை காத்தான்குடியில் வைத்துக்கொள்ளுமாறும் சமூகங்களுக்கு இடையே குழப்பங்களை ஏற்படுத்தும் இவ்வாறான நிகழ்வுகளை, மாவனல்லை மண்ணில் நடாத்த வேண்டாமெனவும் எச்சரித்தனர்.

ஏற்கனவே, காத்தான்குடியில் உருவாக்கப்பட்ட பயங்கரவாதிகளின் செயற்பாடுகள் காரணமாக, மாவனல்லை மண் சந்தித்திருந்த அவல நிலையை சுட்டிக்காட்டிய ஊர் மக்கள், இனிமேல் இவ்வாறான செயற்பாடுகளுக்கு எவரும் துணைபோவதை மாவனல்லை மக்கள் ஒருபோதும் அனுமதிக்க மாட்டார்கள் எனவும் தெரிவித்தனர்.

மேலும், காத்தான்குடியில் உருவாகிய சில பயங்கரவாதிகளினால், இந்த நாடு சந்தித்த அவலங்களையும் துயரங்களையும் மாவனல்லை ஏற்பாட்டாளர்கள் ஒருகணம் நினைத்துப் பார்க்க வேண்டுமென கடுந்தொனியில் சுட்டிக்காட்டியதோடு, இனிமேல், மாவனல்லை மண்ணில் ஹிஸ்புல்லாஹ்வுக்கு எவருமே ஆதரவளிக்கக் கூடாது எனவும் வேண்டுகோள் விடுத்தனர்.

இதேவேளை, காத்தான்குடியில் இருந்து ஐந்து பஸ்களில் மாவனல்லைக்கு அழைத்து வரப்பட்ட ஹிஸ்புல்லாவின் ஆதரவாளர்களும் ஜனாதிபதி வேட்பாளர் ஹிஸ்புல்லாவும் ஊர்மக்களின் கடுமையான எதிர்ப்பினைத் தொடர்ந்து, இடைநடுவே திரும்பிச் சென்றதாக தெரிய வருகின்றது.

Published by

Leave a comment