நடுவானில் திரும்பிய விமானம்: நாடுகடத்தல் இரத்து!

அவுஸ்திரேலியாவிலிருந்து இலங்கை தமிழ் குடும்பத்தினை நாடு கடத்தும் அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் முயற்சிகளை நீதிமன்றம் இறுதி நிமிடத்தில் தடுத்து நிறுத்தியுள்ளது. நடேஸ் பிரியா தம்பதியினரும் அவர்களது இரு குழந்தைகளும் விசேட விமானத்தில் ஏற்றப்பட்டு விமானம் புறப்பட்ட பின்னர் நீதிமன்றம் அவர்களை வெளியேற்றும் உத்தரவைபிறப்பித்தது என அவுஸ்திரேலிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

நடேஸ் பிரியா தம்பதியினரை குழந்தைகளுடன் அவுஸ்திரேலிய எல்லை பாதுகாப்பு பிரிவினர் இன்று இரவு மெல்பேர்ன் தடுப்பு முகாமிலிருந்து விமானநிலையத்திற்கு இலங்கைக்கு நாடு கடத்துவதற்காக அழைத்து சென்றுள்ளனர்.

இந்த தகவல் கேள்விப்பட்ட தமிழ் தம்பதிகளிற்கு ஆதரவான மக்களும் மனித உரிமை ஆர்வலர்களும் விமானநிலையத்திற்கு விரைந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதேவேளை நடேஸ்பிரியா தம்பதியினரின் சட்டத்தரணி கரீனா போர்ட்டின் சட்டத்தரணி மேற்கொண்ட அவசர  முயற்சிகளை தொடர்ந்து நீதிமன்றம் தமிழ் குடும்பத்தை வெளியேற்றுவதற்கு இடைக்கால தடை விதித்துள்ளது.நீதிபதியொருவர் தொலைபேசி மூலம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார். இதேவேளை நீதிமன்ற உத்தரவு கிடைப்பதற்கு முன்னரே விமானம் புறப்பட்டுவிட்டதாகவும் நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து விமானம் நடுவானில் டார்வினிற்கு திரும்பியுள்ளதாகவும் அவுஸ்திரேலிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

தமிழ் தம்பதியினரை வரவேற்க பலர் காத்திருப்பதாகவும் அவுஸ்திரேலிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

Published by

Leave a comment