“போதைப்பொருள் குற்றச்சாட்டுக்களில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளவர்களின் ஆவணங்கள் அனைத்தும் காணாமல் போயுள்ளன”- ஜனாதிபதி மைத்திரிபால

maithiriமுல்லைத்தீவு: போதைப்பொருள் குற்றச்சாட்டுக்களில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளவர்களின் தண்டனையை நிறைவேற்றுவதற்கான ஆவணங்கள் அனைத்தும் காணாமல் போயுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். முல்லைத்தீவு – முள்ளியாவளை பகுதியில்  (21) இடம்பெற்ற தேசிய போதைப்பொருள் தடுப்பு பாடசாலை வாரத்தை பிரகடனப்படுத்தும் நிகழ்வில் கலந்துக்கொண்டு உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டிருந்தார்.

போதைப்பொருள் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் மரண தண்டனை விதிக்கப்பட்ட நூற்றுக்கணக்கான கைதிகள் இலங்கை சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

அவ்வாறு மரண தண்டனை விதிக்கப்பட்டு, தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகளுக்கு, தண்டனையை நிறைவேற்ற தான் கடந்த காலங்களில் முயற்சிகளை மேற்கொண்டிருந்ததாக கூறியுள்ள ஜனாதிபதி, அந்த முயற்சிகள் சற்று காலதாமதமாகியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். நீதி அமைச்சு மற்றும் சிறைச்சாலைகள் திணைக்களம் ஆகியவற்றில் களஞ்சியப்படுத்தப்பட்டிருந்த சட்டவிரோத போதைப்பொருள் குற்றச்சாட்டில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள அனைத்து கைதிகளினதும் மரண தண்டனையை நிறைவேற்றுவதற்கான ஆவணங்கள், அனைத்தும் காணாமல் போயுள்ளதாக ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

எனினும், போதைப்பொருள் குற்றச்சாட்டு தொடர்பில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள பாகிஸ்தான் பிரஜையொருவரின் ஆவணம் மாத்திரமே காணப்படுவதாகவும், தான் அவருக்கு மரண தண்டனையை நிறைவேற்றப் போவதில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன், சட்டவிரோத போதைப்பொருள் தொடர்பான தகவல்களை அறிவிப்பதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் இன்று (21)) விசேட தொலைபேசி இலக்கமொன்றும் அறிமுகப்படுத்தப்பட்டது.

இதன்படி, 1984 என்ற இலக்கத்தை ஜனாதிபதி இன்று அறிமுகப்படுத்தினார்.

போதைப்பொருளுக்கு எதிரான நடவடிக்கைகளை ஒருபோதும் கைவிடப் போவதில்லை என்றும் சிறிசேன உறுதியளித்துள்ளார்.

Published by

Leave a comment