இந்தோனேசியாவில் தொடரும் நில அதிர்வுகள்: 384 பேர் பலி

indonesiaஜகார்த்தா: இந்தேனேசியாவின் சுலாவெசி தீவில் நிகழ்ந்த சக்தி வாய்ந்த நிலநடுக்கத்திற்கு பிறகு வலுவான நில அதிர்வுகள் ஏற்படுவது தொடர்ந்து வருகின்றது, இந்தோனீசியாவில் வெள்ளிக்கிழமை 7.5 என்ற அளவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தை தொடர்ந்து ஏற்பட்ட சுனாமியில் சிக்கி குறைந்தது 384 பேர் உயிரிழந்துள்ளனர். 500 பேர் காயமடைந்துள்ளனர்.

பாலு நகரில் இடிந்துள்ள கட்டட இடிபாடுகளில் சிலர் சிக்குண்டிருக்கலாம் என்று நம்பப்படுகிறது. இறந்தோரின் உடல்கள் தெருக்களில் கிடக்கின்றன. மருத்துவமனைகள் சேதமடைந்துள்ளதால் காயமுற்றோர் முகாம்களில் சிகிச்சை அளிக்கப்படுகின்றனர். வெள்ளிக்கிழமை நிகழ்ந்த நிலநடுக்கத்திற்கு பிறகு விமானம் ஒன்று பாதுகாப்பாக மேலெழுந்து பறப்பதை உறுதி செய்த பின்னர், பாலு நகர விமான நிலையத்தின் வான்வழி போக்குவரத்து கட்டுப்பாட்டாளர் உயிரிழந்துள்ளார்.

இந்த நகரில் ஏற்பட்டுள்ள உயிரிழப்பும், சேதங்களும் இன்னும் முழுமையாக தெரியவில்லை. இந்தோனீசியாவின் சுலாவெசி தீவிலுள்ள பாலு என்ற பகுதியில் சுமார் 2 மீட்டர் உயரத்துக்கு எழுந்த சுனாமி அலைகள் அங்கிருந்தவர்களை கடலுக்குள் இழுத்து சென்றது.

indonesia

மக்கள் அச்சத்தில் அலறியடித்துக்கொண்டு ஓடுவது போன்ற பல காணொளிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகின்றன.

கடந்த மாதம் இந்தோனீசியாவின் மற்றொரு தீவான லோம்போக்கில் தொடர்ச்சியாக பல நிலநடுக்கங்கள் உணரப்பட்டது. குறிப்பாக, ஆகஸ்டு மாதம் 5ஆம் தேதி நிகழ்ந்த சக்திவாய்ந்த நிலநடுக்கத்தினால் மட்டும் அதிகபட்சமாக 460க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். நேற்று ஏற்பட்ட நிலநடுக்கம் மற்றும் அதைத்தொடர்ந்து ஏற்பட்ட சுனாமியில் சிக்கி குறைந்தது 384 பேர் உயிரிழந்திருக்கலாம் என்று இந்தோனீசியாவின் பேரிடர் மீட்பு படை தெரிவித்துள்ளது.

Published by

Leave a comment