கத்தார் மீதான நிபந்தனைகளை கைவிட்டது சவுதி கூட்டணி

Saudi trumpநியூயோர்க்: கத்தார் மீதான தடையை முன்னெடுத்துள்ள நான்கு அரபு நாடுகள், கடந்த மாதம் தாங்கள் வைத்த 13 குறிப்பிட்ட நிபந்தனைகளை கத்தார் நிறைவேற்ற வேண்டும் என மேற்கொண்டு வலியுறுத்தப் போவதில்லை. ஐக்கிய நாடுகள் சபையில் செய்தியாளர்களிடம் பேசிய சவுதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்டுகள், பஹ்ரைன், எகிப்து ஆகிய நாடுகளின் தூதரக அதிகாரிகல், கத்தார் தற்போது ஆறு முக்கிய கொள்கைகளை ஏற்றுக்கொள்ள வேண்டும் என விரும்புவதாகத் தெரிவித்துள்ளனர்.

பயங்கரவாதம் மற்றும் தீவிரவாதத்தை எதிர்க்க உறுதி பூணுவது, ஆத்திரமூட்டல் மற்றும் தூண்டுதல் செயல்களை கத்தார் முடிவுக்குக் கொண்டுவருவது போன்றவை இந்த கோரிக்கையின் முக்கிய அம்சங்களில் அடங்கும். தீவிரவாதிகளுக்கு உதவுவதாகக் கூறப்படுவதை மறுத்து வரும் கத்தாரிடம் இருந்து இதற்கு உடனடியாக எந்தப் பதிலும் வரவில்லை.

தனது இறையாண்மைக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் விதமான எந்த நடவடிக்கையினையும் ஏற்றுக்கொள்ள கத்தார் மறுக்கிறது. மேலும் அண்டை நாடுகள் விதித்துள்ள தடைக்கு கண்டனமும் தெரிவித்தது. மக்களுக்குத் தேவையான அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்ய கத்தார் இறக்குமதி பொருட்களை நம்பியிருக்கும் நிலையில், ஆறு வாரங்களுக்கு முன்பு அண்டை நாடுகள் விதித்த தடையால், கத்தார் வான் மற்றும் கடல் வழியாக 2.7 மில்லியன் மக்களுக்கான உணவுப் பொருட்களை இறக்குமதி செய்ய வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டது.

நியூயார்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையில் கூடியிருந்த செய்தியாளர்களிடம் பேசிய நான்கு அரபு நாடுகளில் ராஜீய அலுவலர்கள், இந்த நெருக்கடியினை இணக்கமாகத் தீர்த்து கொள்ள விரும்புவதாகத் தெரிவித்தனர். ஜூலை 5-ம் தேதி கெய்ரோவில் நடந்த சந்திப்பின் போது, ஆறு கொள்கைகளை சவுதி கூட்டணி நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் ஒப்புக்கொண்டதாகவும், கத்தார் அதற்கு உடன்படுவது எளிதானது என்றும் சவுதி அரேபியாவுக்கான நிரந்தரப் பிரதிநிதி அப்துல்லா அல்-மெளலிமி தெரிவித்தார்.

தீவிரவாதம் மற்றும் பயங்கரவாதத்திற்கு எதிராக பேரிடுதல், பயங்கரவாத குழுக்களுக்கு நிதி மற்றும் பாதுகாப்பான புகலிடங்கள் அளிக்க மறுப்பது, வெறுப்பு, வன்முறையினை தூண்டுவதை நிறுத்துதல் மற்றும் பிற நாடுகளின் உள் விவகாரங்களில் தலையிடுவதை நிறுத்துதல் போன்றவையே கொள்கைகளாக வைக்கப்பட்டுள்ளதாக நியூயோர்க் டைம்ஸ் கூறுகிறது.

Published by

Leave a comment