சகோதரர் சிப்லி பாறூக் (கிழக்கு மாகாண சபை உறுப்பினர்) அவர்களே

Shiblyவட கிழக்கு இணைப்பு தொடர்பாக நீங்கள் வெளியிட்டிருக்கும் அறிக்கையைப் பார்த்தேன். வட கிழக்கு இணைப்பு தொடர்பில் உங்களது கரிசணையை வெளிப்படுத்துவதிலும் பார்க்க வழமை போன்று நல்லாட்சிக்கான தேசிய முன்னணியை (NFGG) விமர்சிப்பதுவே உங்கள் அறிக்கையில் அதிகம் பிரதிபலித்தது. NFGG யின் வட மாகாண சபை உறுப்பினர் தனிப்பட்ட கருத்து என்ற ரீதியில் ஒரு கருத்தைச் சொல்லி அதனைப் பலரும் கண்டித்திருந்தனர். NFGG யும் அந்தக் கருத்துக்கு தாம் உடன்பாடு இல்லை யென்பதை மிகத் தெளிவாக அறிவித்திருந்தது. மட்டுமல்லாமல் குறித்த அஸ்மின் என்பவரை பதவியிலிருந்து அகற்றுவதாகவும் தெரிவித்திருந்தது.

இது தொடர்பில் NFGG யை கடுமையாக விமர்சித்தவர்கள்கூட உண்மையை ஏற்றுக் கொண்டு NFGG க்கு பாராட்டும் நன்றியும் தெரிவித்திருக்கிறார்கள்.

இப்படி எல்லாமே தெளிவு படுத்தப்பட்டிருக்கும் நிலையில் உங்களது அறிக்கை ஏன் இப்போது அவசியப்பட்டது என்பது எனக்கு விழங்கவில்லை.

இருந்தாலும் நீங்கள் தொட்டுப் பேசியிருக்கின்ற வட கிழக்கு இணைப்பு பற்றியும் கிழக்கு மாகாண முஸ்லிம்களின் அரசியல் அதிகாரம் பற்றியும் உங்களிடமோ அல்லது உங்களது SLMC கட்சியிடமோ தெளிவான, நியாயமான, மக்களுக்கு விசுவாசமான நிலைப்பாடுகள் எதுவும் இருக்கிறதா..? என்பதை தெளிவு படுத்துவதற்காக சில விடயங்களை சுட்டிக்காட்டி கேள்விகளையும் கேட்க விரும்புகின்றேன்.

1. வட மாகாணத்தில் TNA உடன் ஒப்பந்தம் செய்து கொண்ட NFGG அம்மாகாண முஸ்லிம் மக்கள் சார்பான நலன்களை மிகத் தெளிவாக பட்டியலிட்டு TNA கட்சியினை அதற்கு உடன்படச் செய்திருக்கிறது. அதனை பகிரங்கப்படுத்தியுமிருக்கிறது. உங்களது SLMC கட்சி கிழக்கு மாகாணத்தில் TNA உடன் அரசியல் கூட்டுறவை கொண்டிருக்கிறது. அப்படியென்றால் உங்களது கட்சி TNA உடன் செய்து கொண்ட ஒப்பந்தம் என்ன..? அதில் கிழக்கு முஸ்லிம்களின் எவ்வகையான நலன்கள் உள்ளடக்கப்பட்டுள்ளது..? அதனை இதுவரை பகிரங்கப்படுத்தாது இருப்பது ஏன்..?

2. கிழக்கு முஸ்லிம்களின் அரசியல் பலமும் அதன் மூலமாகக் கிடைக்கும் அதிகாரமும் வட கிழக்கு இணைப்பின் மூலமாக இழக்கப்படக்கூடாது என்பதுவே கிழக்கிலுள்ள எல்லோரது நிலைப்பாடாகும். இந்த நிலைப்பாட்டுக்கு விரோதமாக நீங்கள் செய்த காரியம் உங்களுக்கு நினைவிருக்கிறதா..?

அதாவது 2012 ஆம் ஆண்டு திவி நெகும சட்டம் கொண்டு வரப்பட்ட போது ‘அது, கிழக்கு மாகாண சபை உட்பட எல்லா மாகாண சபைகளின் அதிகாரத்தைக் குறைக்கிறது’ என்ற அடிப்படையில்தான் உச்ச நீதிமன்றம் அதற்கெதிராக தீர்ப்பு வழங்கியது.

கிழக்கு மாகாண சபைக்கு தற்போது இருக்கின்ற அதிகாரத்தையும் பறிக்கின்ற அந்த சட்ட மூலம் உங்கள் மாகாண சபைக்கு வாக்கெடுப்புக்கு வந்த போது கண்ணை மூடிக்கொண்டு வாக்களித்தவர்களில் நீங்களும் ஒருவர் என்பதனை மறந்து விட்டீர்களா..?

மாகாண சபைகளின் அதிகாரத்தை குறைத்து நாட்டின் சொத்துக்களைக் கொள்ளையடிப்பதற்காக உருவாக்கப்பட்ட சட்ட மூலமே திவிநெகும சட்ட மூலமாகும். அல்லாஹ்வுக்குப் பயப்படாமல் மஹிந்தவுக்கும் பசிலுக்கும் பயப்பட்டதன் காரணமாகவே திவி நெகும சட்ட மூலத்திற்கு நீங்களும் உங்களது கட்சியும் ஆதரவு வழங்கினீர்கள். அதற்கு சன்மானமாக வாக்களித்த நீங்கள் அத்தனை பேரும் மாதாந்தம் 50 ஆயிரம் ரூபா வரையில் மேலதிக கொடுப்பனவையும் பெற்றுக் கொண்டீர்கள்.

ஆக, கிழக்கு மக்களுக்கு இருக்கின்ற அதிகாரத்தையும் மஹிந்த தலைமையிலான மத்திய அரசாங்கத்திற்கு சில அற்ப சொற்ப கொடுப்பனவுக்காக தாரை வார்த்துக் கொடுத்த நீங்கள் என்ன அருகதையோடு இப்போது கருத்துச் சொல்ல வருகின்றீர்கள்..?

3. வட கிழக்கு இணைப்புப் பற்றி பேசும் போது NFGG உட்பட எல்லா அரசியல் தரப்புகளுமே வட கிழக்கு இணையக்கூடாது என்ற கருத்தினை மிகத் தெளிவாக சொல்லியிருக்கிறார்கள்; உங்களது கட்சியைத் தவிர.

TNA உடன் ரகசியமான பேச்சு வார்த்தைகளை செய்து வருகின்ற உங்களது கட்சி இது வரை வட கிழக்கு இணைப்புப் பற்றி மழுப்பிக் கொண்டே வருகிறது என்பது உங்களுக்கு ஏன் தெரியாமல் போனது…? (பூ பிஸ்கட் சாப்பிடுவது, வீதியோரத்திலிருந்து பிளேண்டி குடிப்பது, டெங்கு நுளம்பு புகை அடிப்பது மற்றும் நெசவு நூல் சுற்றுவது போன்ற சில்லறைத்தனமான அரசியல் விளம்பரங்களில் நீங்கள் பிஸியாக இருப்பதனால் இது போன்ற அரசியல் விவகாரங்கள் உங்களுக்குத் தெரிந்திருக்க வாயப்பில்லைதான்). இப்போதாவது வட கிழக்கு இணைப்பு பற்றி உங்களது கட்சியின் நிலைப்பாட்டை உங்களின் தலைமையின் வாயால் கூற வைக்க முடியுமா..?

சில மாதங்களுக்கு முன்னால் இடம்பெற்ற ‘வெளிச்சம்’ தொலைக்காட்சி நிகழ்ச்சியில் NFGG தவிசாளர் அப்துர் ரஹ்மான் உங்கள் கட்சியின் பிரதிச் செயலாளர் சட்டத்தரணி நிசாம் காரியப்பரிடம் வட கிழக்கு இணைப்புப் பற்றி வினவினார். ‘வட கிழக்கு தனித்தனியாக இருக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டை தெளிவாக சொல்லிவிட்டோம், உங்களது கட்சி ஏன் அதை சொல்லத் தயங்குகிறது” என அப்துர் ரஹ்மான் கேட்ட போது உங்கள் கட்சிப் பிரதிநிதி பதில் சொல்ல முடியாமல் தடுமாறியது உங்களுக்குத் தெரியுமா..?

வட கிழக்கு இணைப்புப் பற்றி உங்களது கட்சியிடம் ஒரு நிலைப்பாடு இருந்தால் ஏன் அவர் தடுமாற வேண்டும்?

4. தீர்வுத் திட்டம் பற்றிய ஒரு பிரேரணை வட மாகாண சபையில் கடந்த ஆண்டு கொண்டு வரப்பட்டது. வட கிழக்கு இணைக்கப்பட வேண்டும் என்பதும் அதில்ஒரு சரத்தாகும். அச்சபையில் TNA வழங்கிய போனஸ் ஆசனம் மூலம் தனது பிரதிநிதியை NFGG கொண்டிருந்தாலும் நமது சமூகத்திற்காக துணிச்சலாக அது செய்த காரியம் என்னவென்று உங்களுக்குத் தெரியுமா..?

அதாவது அந்தப் பிரேரணைக்கு உங்கள் கட்சிப்பிரதிநிதியும் எதிர்புத் தெரிவிக்கலவில்லை. ஏனைய முஸ்லிம் பிரதிநிதிகளும் எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை. NFGG மாத்திரமே துணிச்சலாக எதிர்ப்புத் தெரிவித்தது என்பது உங்களுக்குத் தெரியுமா..? ஏன் உங்களது SLMC கட்சி அதனை எதிர்க்கவில்லை என பகிரங்கமாக சொல்ல முடியுமா..?

5. மேலும், உங்களது அறிக்கையில் அஸ்மின் இவ்வாறு பேசியதற்காக TNA உடனான ஒப்பந்தத்தில் இருந்து NFGG வெளியேற வேண்டும் என கேட்டிருந்தீர்கள். இந்த இடத்தில் எனக்கொரு கேள்வி எழுகிறது. அதாவது இந்த அறிக்கை நீங்கள் எழுதியதுதானா..? அல்லது வேறு எவராவது எழுதித்தந்ததை அப்படியே பிரசுரித்தீர்களா..? ஏனெனில் இது ஒரு அரசியல் அறிவற்ற முட்டாள் தனமான கோரிக்கையாகும்.நீங்கள் சொல்கின்றபடி பார்த்தால் உங்களது கட்சி முதலில் TNA உடனான உறவை முறித்துக் கொண்டிருக்க வேண்டும். அதை ஏன் செய்யவில்லை. அது போல இன்று நாட்டில் முஸ்லிம்களுக்கு எதிராக நடை பெற்று வரும் இனவாத நடவடிக்கைகளைப் பொறுத்த வரையில் இந்த அரசாங்கமே மிகவும் பக்கபலமாக இருந்து செயற்பட்டு வருகின்றது. வட கிழக்கில் முஸ்லிம்களின் காணிகளை ஆக்கிரமிக்கும் நடவடிக்கைகளை இந்த அரசாங்கமே செய்து வருகின்றது.

அப்படியென்றால் இந்த அரசாங்கத்தில் இருந்து உங்கள் கட்சி வெளியேறியிருக்க வேண்டுமே., ஏன் அதை செய்யுமாறு உங்கள் கட்சியிடம் நீங்கள் கூறவில்லை…?

வட கிழக்கு இணைப்பு தொடர்பாக NFGG தனது நிலைப்பாட்டை வடமாகாண சபையிலும் அதற்கு வெளியிலும் மிகத் தெளிவாக முன்வைத்து வருகிறது. அண்மையில் வெளியிடப்பட்ட அறிக்கை உங்களைப் போன்ற சிலருக்கு அரசியல் ரீதியாக அறிவூட்டுவதற்கு வெளியிடப்பட்ட அறிக்கையேயல்லாமல் அது NFGGயின் புதிய நிலைப்பாடல்ல. மேலும் உங்களையும் இன்னும் பல அரசியல்வாதிகளையம் போல காத்தான்குடி என்ற குண்டுச்சட்டிக்குள் மாத்திரம் குதிரையோட்டாமல் மக்கள் சார்ந்த தங்கள் நிலைப்பாடுகளை சொல்ல வேண்டிய எல்லா இடங்களிலும் NFGG சொல்லியே வருகிறது. குறிப்பாக வட கிழக்கு இணைப்பப் பற்றி சொல்ல வேண்டிய இடமான தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர்கள் முன்னால் நேருக்கு நேராக அமர்ந்து, எந்த மழுப்பலும் இல்லாமல் வட கிழக்கு பிரிந்திருக்கவே வேண்டும் என்ற நிலைப்பாட்டை NFGG மிக தைரியமாக சொல்லி வருகிறது.

உண்மை நிலவரம் இப்படியிருக்க எதற்காக மனமுரண்டான விமர்சனங்களை நீங்கள் செய்து வருகின்றீர்கள்.? ‘எலிவாலை விட்டு கடலாழம் பார்க்க முயற்சிக்கக்கூடாது’ என்ற ஒரு கதை இருக்கிறது. அது போல உங்களுக்கு அறிவில்லாத தெளிவில்லாத விடயங்களில் ‘முந்திரிக் கொட்டைத்தனமாக’ கருத்துச் சொல்ல முற்படக்கூடாது.

புடித்தவர்கள் அரசியலுக்கு வந்தால் அறிவு பூர்வமான கருத்துக்கள் சொல்லப்படும் என எதிர்பார்க்ப்படுகிறது. இனிமேலாவது கருத்துக்களை விமர்சனங்களை சொல்லும் போது முட்டாள்தனமாக பேச முற்படாமல் அறிவு பூர்வமான விமர்சனங்களை முன்வையுங்கள்.

சில்லறைத்தனமான விளம்பர அரசியலுக்காக நீங்கள் செலவிடுதல் நேரத்தை கொஞ்சம் குறைத்து இந்த நாட்டில் என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பதைப் நேரமொதுக்கி படித்துப்பாருங்கள். அடுத்த கட்சிகளின் உத்தியோக பூர்வ கருத்துக்களை உள்வாங்குங்கள். அப்போதுதான் அறிவு பூர்வமான கருத்துக்களை உங்களாலும் சொல்ல முடியும்.

இறுதியாக நான் மேலே கேட்ட நியாயமான கேள்விகளுக்கு தாமதமில்லாமல் பதில் வழங்க முன்வாருங்கள்.

  • முஹம்மத் அன்ஸார், காத்தான்குடி

Published by

Leave a comment