காத்தான்குடி ஜம்இய்யதுல் உலமா நோன்பு நோற்குமாறு வேண்டுகோள்

– எம்.ஐ.அப்துல் நஸார்

jammiyya 2காத்தான்குடி: காத்தான்குடி ஜம்இய்யதுல் உலமா பொதுமக்கள் அனைவரையும் திங்கட்கிழமையன்று (27) நோன்பு நோற்குமாறு கேட்டுள்ளது. காத்தான்குடி ஜம்இய்யதுல் உலமாவின் தலைவர் மௌலவி எம்.ஐ. அப்துல் கையூம் ஷர்க்கீ மற்றும் அதன் செயலாளர் அஷ்ஷெய்க் எம்.சீ.எம். றிஸ்வான் மதனி ஆகியோரால் ஆத்மீக வழிகாட்டலும் விஷேட நோன்பு நோற்றலும் என்ற தலைப்பில் விடுக்கப்பட்டுள்ள அறிக்கையிலேய திங்கட்கிழமையன்று நோன்பு நோற்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்படடுள்ளதாவது எமதூரில் ஏற்பட்டிருக்கும் அசாதாரண டெங்கு நோய் மற்றும் வைரஸ் காய்ச்சல் பரவும் நிலை தொடர்வதன் காரணமாக, அதிலிருந்து விடுபடுவதற்கான வழிவகைகள் பற்றியும், அத்துடன் எமது கஷ்ட நஷ்டங்களையும் எம்மைப் படைத்த அள்ளாஹ்விடம் முறையிட்டு, அவனது உதவியையும் பெற்று, எமது வாழ்வை சீர்படுத்தவேண்டிய தேவையும் உள்ளது. இந்தவகையில் காத்தான்குடி ஜம்இய்யதுல் உலமா எதிர்வரும் 26.03.2017 ஞாயிற்றுக்கிழமை பின்னேரம், திங்கள் இரவு பொதுமக்கள் அனைவரையும் சுன்னத்தான நோன்பினை நோற்கச் செய்து, திங்கள் பின்னேரம் 5.30 மணிக்கு மக்களை ஒன்று சேர்த்து ஆத்மீக வழிகாட்டலுடன், காத்தான்குடி ஜாமிஉழ் ழாபிரீன் பெரிய மீரா ஜூம்ஆ பள்ளிவாயல், மற்றும் புதிய காத்தான்குடி நூறாணியா ஜும்ஆப் பள்ளிவாயல் ஆகியவற்றில் இப்தார் நிகழ்வினை ஏற்பாடு செய்வதெனவும் ஜம்இய்யா தீர்மானித்துள்ளது.

மேற்படி விடயத்தினை கவனத்திற்கொண்டு, 26.03.2017 ஞாயிற்றுக்கிழமை பின்னேரம், திங்கள் இரவு பொதுமக்கள் அனைவரும் சுன்னத்தான நோன்பினை நோற்று, திங்கள் பின்னேரம் 5.30 மணிக்கு காத்தான்குடி ஜாமிஉழ் ழாபிரீன் பெரிய மீரா ஜூம்ஆ பள்ளிவாயல், மற்றும் புதிய காத்தான்குடி நூறாணியா ஜும்ஆப் பள்ளிவாயல் ஆகியவற்றில் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் இப்தார் மற்றும் துஆப் பிரார்த்தனை நிகழ்வில் கலந்து பயன் பெறுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கின்றோம் எனவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த சில வாரங்களாக டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருகின்றது. அண்மையில் புதிய காத்தான்குடியைச் சேர்ந்த பாத்திமா கதீஜா என்ற 09 வயது மாணவி டெங்கு காய்ச்சல் காரணமாக உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.

Published by

Leave a comment