சென்னை: தமிழகத்தில் பன்னாட்டு நிறுவனங்களின் குளிர்பானங்களான பெப்ஸி மற்றும் கோகோ கோலா விற்பனை நிறுத்தம் இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை மற்றும் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு ஆகியவை இந்த விற்பனை நிறுத்தத்துக்கு அழைப்பு விடுத்திருந்தன. அதன்படி, பல வாரங்களுக்கு முன்பிருந்தே, இந்த விற்பனை நிறுத்தம் தொடர்பாக, தனது சங்க உறுப்பினர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நடவடிக்கையில் அச்சங்கங்கள் ஈடுபட்டு வந்தன.
இதையடுத்து, அந்த உறுப்பினர்களின் கடைகளில் இந்த பானங்கள் விற்பனைகள் நிறுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவைத் தலைவர் தா. வெள்ளையன், இந்த பானங்களைத் தவிர்க்க வேண்டும் என்று கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக பிரசாரம் செய்து வருவதாகத் தெரிவித்தார். ஜல்லிக்கட்டு ஆதரவுப் போராட்டத்தின்போது, மாணவர்கள் மத்தியில் பேசும் போது, அதனால் உந்தப்பட்டு, ஜனவரி 26 முதல் தமிழகம் முழுவதும் கடைகளில் அந்த பானங்கள் விற்பனை நிறுத்தப்படும் என அறிவித்த நிலையில், ஏற்கெனவே 75 சதம் அளவுக்கு விற்பனை நிறுத்தப்பட்டுவிட்டதாகத் தெரிவித்தார்.தங்கள் அமைப்பில் 50 லட்சம் வியாபாரிகள் உறுப்பினர்களாக உள்ளதாகவும், அதில் 2 சதம் பேர்தான் இந்த பானங்களை விற்பனை செய்வதாகவும் அவர்களும் அதை இன்றுடன் நிறுத்திவிடுவார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.
வெளிநாட்டு நிறுவன குளிர்பானங்கள் உடலுக்குக் கேடுவிளைவிப்பதாகவும், அவை பெருமளவில் நிலத்தடி நீரை உறிஞ்சுவதாகவும் வெள்ளையன் குற்றம் சாட்டினார்.
Published by


Leave a comment