கொழும்பு: நாட்டில் தற்போது பரபரப்பாக பேசப்படும் விடயமாக மஹிந்த கூறிய “2017 ஆம் ஆண்டில் தற்போதைய அரசை கவிழ்ப்பதே தமது நோக்கம்” என்ற கூற்றுதான் காணப்படுகின்றது. இதுவரை அரசாங்கத்திற்கு எதிராக விமர்சனங்களை வெளியிட்டுவந்த மஹிந்த, முதன்முறையாக அரசை கவிழ்ப்பேன் என்று கருத்து வெளியிட்டுள்ளார். இதனால் மஹிந்த தரப்பினர் உற்சாகத்திலும், அரசு தரப்பினர் சற்று குழப்பத்திரும் இருப்பதை காணக்கூடியதாகவே இருக்கின்றது.
ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி உறுப்பினர்களுக்கும் ஐக்கியதேசியக்கட்சியின் உறுப்பினர்களுக்கும் இடையில் உள்ள முறண்பாடுகளை மஹிந்த தனக்கு சாதகமான சூழ்நிலையாக மாற்றியுள்ளார். ஊடகவியலாளர்கள் சந்திப்புக்களை நடாத்தும் ஐக்கிய தேசியக்கட்சி உறுப்பினர்கள் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி உறுப்பினர்களையும், ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி உறுப்பினர்கள் ஐக்கிய தேசியக்கட்சி உறுப்பினர்களையும் கடுமையாக விமர்சிப்பதுடன், பகிரங்கமாக தமது அதிருப்திகளையும் வெளியிட்டு வருகின்றனர்.
அண்மையில் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் உறுப்பினர் டிலான் பெரேரா ஐக்கிய தேசியக் கட்சிக்கும் பஸிலுக்கும் இடையில் டீல் இப்பதாக குற்றம் சுமத்தினார், இதற்கு பதிலடி கொடுக்கும் முகமாக ஐக்கிய தேசியக்கட்சியின் உறுப்பினர்கள் டிலான் பெரேராவை கடுமையாக விமர்சித்திருந்தமை சுட்டிக்காட்டப்படத்தக்கது.
ஐக்கிய தேசியக் கட்சியின் அரசாங்கத்திற்கு 2004ஆம் ஆண்டு ஏற்பட்ட நிலைமை தற்போதைய அரசாங்கத்திற்கும் ஏற்படுமோ என்ற அச்சம் ஐக்கிய தேசியக் கட்சியினருக்குள் இருப்பதாக கூறப்படுகிறது. எனினும் அன்றைய ஜனாதிபதி சந்திரிக்கா பண்டார நாயக்க குமாரதுங்கவை போல், தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஐக்கிய தேசியக்கட்சிக்கு எதிராக செயற்பட மாட்டார் என்ற நம்பிக்கையும் பிரதமர் உட்பட கட்சி உறுப்பினர்களுக்கு உள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சியின் வாக்குகளினாலேயே மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டார் என்பதே இந்த நம்பிக்கைக்கு காரணம் எனவும் கூறப்படுகிறது.
இவ்வாறு, இரு பிரதான கட்சிகளுக்கும் உள்ளே இருக்கின்ற சில பிரச்சினைகளை மஹிந்த தனக்கு சாதகமாக எடுத்துள்ளதுடன், “அரசிலுள்ள ஐக்கிய தேசியக் கட்சியினருக்கும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியினருக்கும் இடையில் முரண்பாடு தோன்றியுள்ளது” என மஹிந்தவே அண்மையில் ஊடகவியலாளர்களிடம் தெரிவித்திருந்தார்.
ஆனால் மஹிந்தவின் இந்த கருத்துக்கு அரசின் முக்கிய இடங்களில் இருந்து எந்த பதிலடியும் வந்ததாக இல்லை. அதற்கு மாறாகவே கருத்துக்கள் வெளியிடுகின்றனர். அலரி மாளிகையில் இன்று இடம்பெற்ற நிகழ்வின் போது பிரதமர் ரணில் விக்ரமசிங்க கூறிய வார்த்தைகள் மஹிந்தவுக்கு பூரண சுதந்திரத்தை அரசு கொடுத்திருப்பதாக தெரியப்படுத்துகின்றது.
“முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவுக்கு தான் விரும்பியதை செய்ய சுதந்திரம் உண்டு, எது எவ்வாறு இருப்பினும் நானே நாட்டின் பிரதமர்” என்று ரணில் விக்ரமசிங்க கூறியுள்ளார்.
இதுமட்டுமின்றி அரசை கவிழ்ப்பதற்கு மஹிந்தவுக்கு ரணில் வழிவகுத்துக்கொடுத்திருப்பதாகவும் உள்ளது. “நான் அடுத்த வாரம் சுவிஸர்லாந்து செல்லவுள்ளேன், அந்த சந்தர்ப்பத்தில், மஹிந்த ராஜபக்ஸ தான் கூறியதைபோல செயற்பட முயற்சிக்க முடியும்” எனவும் அவர் கூறியுள்ளார்.
இதை ரணில் ஏன் கூறினார்? எதற்காக இவ்வாறான வார்த்தைகளை வெளியிட்டுள்ளார் என்று பலரிடையே கேள்விகளை எழுப்பியுள்ளது. மஹிந்தவுக்கு எதுவும் செய்ய இயலாது என்ற எண்ணத்தில் இதை கூறினாரா? அல்லது மஹிந்தவுக்கு ரணில் பயந்துவிட்டாரா என்றும் கேள்விகள் எழுகின்றன. மொத்தத்தில் மஹிந்த களத்தில் இறங்கி விட்டார். அதனால் தற்போதைய அரசு நல்லாட்சிக்குள் இருக்கும் உட்பூசல்களை தீர்த்துக்கொண்டு இணைந்து செயற்படவேண்டிய கடப்பாட்டில் உள்ளது.
Published by
![Mahinda%20Rajapaksa[1]](https://yourkattankudy.com/wp-content/uploads/2012/04/mahinda20rajapaksa1.jpg?w=150&h=119)
Leave a comment